சிறப்பாகப் பணிபுரியும் மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான்
(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)
மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் தனது வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் உட்கட்டமைப்பை விருத்தி செய்வதிலும்,ஆசிரியர் பற்றாக்குறையைத் தீரப்பதிலும்,சிறப்பாகப் பணிபுரிந்து வருகின்றார்.சிறந்த ஆசிரியராகவும்,சிறந்த வளவாளராகவும்,சிறந்த அதிபராகவும் செயற்பட்ட இவருக்கு பாடசாலைகள் எதிர்கொள்ளும் சவால்கள்,ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய நிறைந்த பட்டறி அனுபவமுள்ளது.இதனால் பிரச்சினைகளை இலகுவாகத்தீர்த்து வருகின்றார்.இவர் தமிழ்ப்பாடசாலைகளையும்,முஸ்லிம் பாடசாலைகளையும் தனது இரு விழிகள் போன்றே நேசிக்கின்றார்.இருவகையான பாடசாலைகளுக்கும் எவ்விதப்பாரபட்சமும் இன்றி சமமாகவே சேவை செய்துவருகின்றார்.
யுத்;தத்தால் முற்றாக அழிக்கப்பட்ட முசலிப்பிரதேச பாடசாலைகளையும்,நானாட்டான் பிரதேச பாடசாலைகளையும் சிறப்பாகக்கட்டியெழுப்பும் முயற்சிகளில் இவர் அதிகம் பாடுபட்டுவருகின்றார்.இவரின் முயற்சியால் மன்-சிலாவத்துறை ம.வி.இலும்,மன்-பண்டாரவெளி ம.வி.இலும் புதிதாக க.பொ.த.(உ.த)கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.மன்-முசலி.ம.வி.இல் புதிதாக உயர்தர கணித விஞ்ஞானப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் இப்பாடசாலை மஹிந்தோதய பாடசாலையாகவும்,தேசிய பாடசாலையாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.பூநொச்சிக்குளம்,கூளாங்குளம்,போன்ற பிரதேசங்களில் புதிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புத்தளத்திலும்,இலங்கையின் ஏனைய பிரதேசங்களிலும் பணிபுரியும் மன்னாரைப் பூர்வீகமாகக்கொண்ட தரம்பெற்ற அதிபர்களையும்,கல்வி நிருவாக சேவை அதிகாரிகளையும் மீளவும் பூர்வீகப்பிரதேசத்திற்கு கொண்டுவந்து சேர்க்கவேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும்,வலயக்கல்விப் பணிப்பாளருக்கும் உண்டு.குறிப்பாக தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளுக்கு முகாமைத்துவ வாண்மை அதிகமுள்ள கல்வி நிருவாக சேவை தரம்.2,தரம்-3 ஜச்சேர்ந்தோரை அல்லது அதிபர் தரம் -1ஜச்சேர்ந்தவர்களை நியமிக்குமாறு கல்வியமைச்சின் சுற்றுநிருபம் குறிப்பிடுகிறது.அதற்கமைய பொருத்தமானவர்களை இனங்காணவேண்டியது எம் அனைவரதும் தார்மீகப்பொறுப்பு ஆகும்.
தமிழ் பாடசாலைகளுக்கும், முஸ்லிம் பாடசாலைகளுக்கும் உறவுப்பாலமாக இவர் செயற்படுகிறார்.மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தில வலயக் கல்விப்பணிப்பாளராக கடமை புரிந்த முஸ்லிம்களில் இவர் 3 ம் இடத்தைப் பெற்றுள்ளார். இவருக்கு முன்னே கே.எம்.வசீர்,எ.சி.அப்துல் ஹக் போன்றோர் பணிபுரிந்துள்ளனர்.இவர் சிறந்த பிள்ளை நேய ஆசிரியராகவும்,அதிபராகவும் சிலாவத்துறை,முசலி,முருங்கன்,தாராபுரம்,கடையாமோட்டை,கல்கமுவ,பலாங்கொடை ஆகிய பிரதேசங்களில் கடமை புரிந்துள்ளார்.கற்பிட்டிப்பிரதேசத்தில் கோட்டக் கல்விப்பணிப்பாளராகவும் சேவையாற்றி உள்ளார்.
இவர் .மாணவர்களினதும்,பாடசாலைகளினதும் அபிவிருத்தியை மையமாகக் கொண்டு அரசியல்வாதிகளுடன் உறவைப்பேணிவருகிறார்.சிறந்த உதைபந்தாட்ட,வலைப்பந்தாட்ட வீரர் ஆகிய இவர் மன்னார் வலயத்தின் பாடவிதான செயற்பாடுகளையும்,இணைப்பாடவிதான செயற்பாடுகளையும் உயர்த்துவதற்காக அதிகம் பாடுபட்டு வருகிறார்.கலைத்துறையின் கௌரவப்பட்டத்தையும்,கல்வி முகாமைத்துவப்பட்டத்தையும்,கல்வி முதுமானிப் பட்டத்தையும். இவர் பெற்றுள்ளார்.

Post a Comment