யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
(f.sihan)
யாழ்.பல்கலைகழக மாணவர்கள் தமக்கு காரணங்கள் எதுவுமின்றி நீண்டகால விடுமுறை விடப்பட்டதை கண்டித்து யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் இன்று காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டிற்காக அனைத்து பல்கலைகழகத்திற்கும் 9ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை விடுமுறை விடப்பட்டு இருந்தது. ஆனால் யாழ் பல்கலைகழகத்திற்கு மட்டும் டிசம்பர் 2ம் திகதி வரை விடுமுறை விடப்பட்டு இருந்தது.
மாணவர்களுக்கு பரீட்சை நெருங்குவதாலும் பல்கலைகழகத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காகவுமே இந்த நீண்ட விடுமுறை என பல்கலைகழக நிர்வாகம் அறிவித்து இருந்தது. இந்த விடுமுறை காலப்பகுதியில் பல்கலைகழக விடுதியில் மாணவர்கள் தங்கி இருக்க அனுமதிக்கப்படவில்லை அதே நேரம் பல்கலைகழக வளாகத்தினுள் நடமாடுபவர்கள் பயங்கரவாதிகளாகவே பார்க்கப்படுவார் என மாணவர்களுக்கு மறைமுக அச்சுறுத்தல்களும் விடப்பட்டன
இவ்வாறன செயற்பாடுகளை கண்டித்தே இன்றைய தினம் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்
கடந்த மாதம் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டிற்காக அனைத்து பல்கலைகழகத்திற்கும் 9ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை விடுமுறை விடப்பட்டு இருந்தது. ஆனால் யாழ் பல்கலைகழகத்திற்கு மட்டும் டிசம்பர் 2ம் திகதி வரை விடுமுறை விடப்பட்டு இருந்தது.
பரீட்சை தயார்ப்படுத்தலுக்காகவே விடுமுறை என நிர்வாகம் கூறிவிட்டு விடுதிகளையும் மூடி மாணவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் மேற்கொள்வது தான் பரீட்சை தயார்படுத்தலா ? உண்மையில் இந்த நீண்ட விடுமுறை எதற்காக என்பது அனைவருக்கும் தெரியும்.
இறந்து போன ஆன்மாக்களை மதிப்பது ஒரு பொதுவிதியாகும். தன் இனம் சார்ந்து யாருக்காவது அஞ்சலி செலுத்துவது அவ் இனத்தின் அடிப்படை உரிமையாகும் அந்த உரிமையை மறுப்பதை விட கேவலமான அநாகரிகமான செயல் இவ்வுலகில் வேறெதுவும் இல்லை.
இந்த நீண்ட விடுமுறையானது ஏனைய பல்கலைகழகத்திற்கும் விடப்பட்டு இருந்தால் ஏற்று கொள்ளக்கூடியது ஆனால் எமக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது எம்மை அடக்குமுறைக்கும் அவமானத்திற்கும் உள்ளாக்கும் செயலாகவே இதனை நாம் பார்க்கின்றோம் என தெரிவித்தனர்.





Post a Comment