Header Ads



பாவித்த, கண்டெடுக்கப்பட்ட, களவாடப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் பற்றிய குறிப்பு

(பாவித்த, கண்டெடுக்கப்பட்ட மற்றும் களவாடப்பட்ட கையடக்கத்தொலைபேசிகளை  விலைகொடுத்து வாங்குவதால் அவற்றை பாவனைக்கு உட்படுத்துவதால் ஏற்படுகின்ற சட்டரீதியான சிக்கல்களும் அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் விளக்குகின்ற ஓர் விரிவான ஆக்கம்.) 

முஹம்மது நியாஸ்:

கையடக்கத் தொலைபேசி என்பது இன்றைய நவீன யுகத்தில் முழுமனித சமுதாயத்திற்குமே இன்றியமையாத ஒரு சாதனமாக மாறிவிட்டது. இக்கையடக்கத் தொலைபேசிகளில் கடைகளுக்கும் காட்சியறைகளுக்கும் சென்று புதியவற்றை கொள்வனவு போலவே பாவித்த கையடக்கத்தொலைபேசிகளை வாங்குவதிலும் இன்று அதிகளவான பாவனையாளர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். அதற்குத் தகுந்தாற்போல் பெரும்பாலான விற்பனை நிலையங்களிலும் பாவித்த கையடக்கத் தொலைபேசிகள் விற்பதும் வாங்குவதும் ஒரு வியாபார முறைகளில் ஒன்றாகக் காணப்படுகிறது.

ஆனால் இதில் வருந்தத்தக்க விடயம் என்னவெனில் இவ்வாறான பாவித்த கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதன் மூலம், அதனை பாவனைக்குட்படுத்துவதன் மூலம் இன்று அதிகளவான பிரச்சினைகள், பொலிஸ் விசாரணைகள், நீதிமன்ற வழக்குகள் போன்றவற்றுக்கும் முகம் கொடுக்கவேண்டிய நிலைக்கும் பெரும்பாலான பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகள் தள்ளப்படுகின்றனர்.

ஒரு கையடக்கத் தொலைபேசியை சுமார் நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் வெறும் ஒருமாதம் அளவில் மாத்திரம் பாவித்துவிட்டு ஒருவருக்கு அல்லது ஒரு கடையிலுள்ள வியாபாரிக்கு விற்பனை செய்திருப்போம். அந்த ஞாபகம் கூட நமக்கு இப்போது இருக்காது. ஆனால் திடீரென்று பொலிசார் வீடு தேடிவருவார்கள், 'கையடக்கத் தொலைபேசி தொடர்பாக விசாரிக்கவேண்டும் பொலிஸ் நிலையம் வாருங்கள்' என்று அழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்வார்கள். மாதக்கணக்கில் ஏன், வருடக்ககணக்கில் கூட நீதிமன்றங்களில் வழக்குத்தொடரும். சில சந்தர்ப்பங்களில் அதிகமானவர்களுக்கு இவ்வழக்குகள் வெளியூர்களிலுள்ள, தூரப்பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையம், நீதிமன்றங்களில்கூட பதிவு செய்யப்பட்டிருக்கும். இதனால் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களையும் இழந்து பொலிஸ் நிலையம், நீதிமன்றம் , சிறைச்சாலைகள் என மாதக்ககணக்கில் அலைந்து திரிகின்றவர்கள் நமது குடும்பத்தில் ஒருவர், நண்பர்களில் ஒருவர், வேலை செய்கின்ற இடத்தில் ஒருவர் என நம் அனைவருக்கும் தெரிந்த ஒவ்வொருவரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இத்தனைக்கும் இடையில் அவர்கள் ஒரு கையடக்கத் தொலைபேசியை திருடியோ அல்லது அதில் ஏதாவது தில்லுமுல்லுகளோ செய்திருக்கமாட்டார்கள். நண்பர் ஒருவரின் தொலைபேசியை சிறிது நாட்கள் இரவலாக வாங்கிப் பாவித்திருப்பார்கள், அல்லது தெருவில் கண்டெடுத்த ஒரு தொலைபேசியை சில நாட்கள் பாவித்துவிட்டு யாருக்கேனும் விற்றிருப்பார்கள் அல்லது யாரிடமாவது பாவித்த தொலைபேசியை குறைந்த விலையில் கிடைத்ததற்காக வாங்கிப்பாவித்திருப்பார்கள், அதேபோல தன்னிடம் இருந்த தொலைபேசி தொலைந்து போனபோது அதைப்பற்றி சட்டை செய்யாமல் வேறொரு தொலைபேசியை வாங்கிப் பாவித்திருப்பார்கள். இவ்வாறான ஒரு சாதாரண விடயத்தைத்தான் செய்திருப்பார்கள். ஆனால் வழக்கு என்று வந்துவிட்டால் அத்தொலைபேசியின் விலையை விட பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை செலவிடவேண்டிய, சிறைவாசம் கூட அனுபவிக்கக்கூடிய ஒரு நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள்.

கையடக்கத் தொலைபேசிகள் விடயத்தில் மாத்திரம் ஏன் இந்த நிலைமைஏற்படுகிறது. ஏனைய மின்னுபகரணப் பொருட்களில் இல்லாத வினையும் விளையாட்டும் கையடக்கத்தொலைபேசிகளில் மாத்திரம் வந்து நிற்பதன் மர்மம் என்ன?  நாம் பாவித்த கையடக்கத் தொலைபேசிகளை பிறிதொருவருக்குக் கைமாறுவதென்பது அந்தளவிற்கு அபாயகரமானதா? இவ்வாறான பிரச்சினைகள் சிக்கல்களை தவிர்ப்பதற்குரிய வழிகள் என்னவென்பது பற்றிய விடயங்களை அலசி ஆராய்வதும் இப்பிரச்சினைகள் தொடர்பான ஒரு விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதுமே இப்பதிவின் பிரதான நோக்கமாகும்.

ஒருகையடக்கத் தொலைபேசி எவ்வாறு செயற்படுகின்றது?

பொதுவாக கையடக்கத் தொலைபேசி என்பது ஏனைய மின் உபகரணங்களைப் போன்றல்லாமல் தொழிநுட்பரீதியாக பல சிறப்பம்சங்களையும் மாற்றங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. நாம் பாவிக்கின்ற எந்தவொரு கையடக்கத் தொலைபேசிகளைப்பார்த்தாலும் அதில் பதினைந்து தானங்களைக் கொண்ட ஒரு இலக்கம் காணப்படும். இந்த இலக்கம் பெரும்பாலும் முப்பத்தியைந்தைக்கொண்டு ஆரம்பிக்கும். இது இமி (IMEI Number) இலக்கம் என்று அழைக்கப்படும். அதேபோன்று கையடக்கத் தொலைபேசியில் பயன்படுத்துகின்ற சிம் (SIM) அட்டைகள் பத்துத் தானங்களைக் கொண்ட இலக்கங்களை உடையனவாக இருக்கின்றன.

ஒரு கையடக்கத் தொலைபேசியிலிருந்து நாம் அழைப்பு ஒன்றை மேற்கொள்கின்றபோது சிம் அட்டையின் இலக்கம் மற்றும் கையடக்கத்தொலைபேசியின் இமி இலக்கம் என்பனவற்றை நமது தொலைத்தொடர்பு வழங்குனர்களிடமுள்ள சேர்வர்கள் பதிவுசெய்துகொள்கிறன. எனவே இதன் மூலம் நமது தொலைபேசியின் தொலைத்தொடர்பு சேவை வழங்குனரால் நாம் பாவிக்கின்ற தொலைபேசியின் இமி இலக்கத்தை அடையாளம் காணமுடியும். சுருக்கமாக இதுவே ஒரு கையடக்கத் தொலைபேசி, வலையமைப்புடன் தொடர்புபட்டு செயற்படுகின்றவிதமாகும்.

காணாமற்போன கையடக்கத் தொலைபேசிகள்.

கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருக்கின்ற ஒவ்வொரு பாவனையாளர்களும் கட்டாயம் தங்களின் தொலைபேசிகளுடைய இமி இலக்கத்தை அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் ஒரு கையடக்கத் தொலைபேசி தொலைந்து போகின்றபோது அல்லது களவாடப்படுகின்ற போது பொலிஸ் நிலையங்களில் இந்த இமி இலக்கத்தை அடையாளமாக வைத்தே முறைப்பாடு பதியப்படும். அனைத்து கையடக்கத் தொலைபேசிகளுக்கும் உள்புறமாக பின்பகுதியில் இமி இலக்கங்கள் காணப்பட்டாலும் அவை நூறு வீதம் சரியானவையாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் கையடக்கத் தொலைபேசிகளின் வெளிப்புறத்தை (housing) மாற்றுகின்றபோது இவ்விலக்கங்கள் மாற்றமடைய அல்லது அழிந்துபோவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே *#06# எனும் இலக்கத்தை டயல் செய்வதன் மூலம் திரையில் பெறப்படும் பதினைந்து தானங்களைக் கொண்ட இலக்கமே ஒரு கையடக்கத் தொலைபேசியின் நிலையான இமி இலக்கமாகும். இவ்விலக்கம் ஒரு கையடக்கத் தொலைபேசியில் எத்தனை சிம் அட்டைகள் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியுமோ அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு இமி இலக்கங்கள் காணப்படும். உதாரணமாக ஒரு தொலைபேசியில் இரண்டு சிம் அட்டைகள் செருகக்கூடிய வசதி இருந்தால் அத்தொலைபேசிக்கு இரண்டு இமி இலக்கங்கள் இருக்கும்.

ஒரு கையடக்கத் தொலைபேசி களவாடப்பட்டால் அது பெறுமதியானதோ பெறுமதியற்றதோ, அது நமக்கு மீண்டு தேவையானதோ தேவையற்றதோ நிச்சயமாக அதற்கு ஒரு பொலிஸ் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருத்தல் அவசியமாகும். ஏனெனில் நமது தொலைந்துபோன கையடக்கத் தொலைபேசியை கண்டெடுக்கின்ற ஒருவர் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற ஒருவராக இருப்பாராயின் அவர் அக்குற்றச்செயல்களுக்கு நமது தொலைபேசியை பயன்படுத்துவாராயின் அக்குற்றவாளி பொலிசாரிடம் அகப்படுகின்றபோது அவர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசியும் அதிலிருந்து வெளிச்சென்ற மற்றும் உள்வந்த அழைப்புக்களின் விபரங்கள் பொலிசாரினால் சோதனையிடப்படும்.

அப்போது அத்தொலைபேசியை அக்குற்றவாளி பயன்படுத்துவதற்கு முன்னால் யார் யாரெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற விபரங்களை நீதிமன்ற உத்தரவோடும் தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களின் உதவியோடும் பொலிசார்  பெற்றுக்கொள்வார்கள். அப்போது அக்குற்றவாளியின் குற்றச்செயலுடைய பாரதூரத்தைப் பொறுத்து அக்கையடக்கத் தொலைபேசியை பாவித்த அனைவரும் பொலிசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர். எனவே நமது கையடக்கத்தொலைபேசிகள் தொலைந்து போகின்றபோது அதன் இமி இலக்கத்துடன் பொலிஸ் முறைப்பாடு ஒன்றை பதிந்து அதற்கான பத்திரத்தையும் கையோடு வைத்திருத்தல் மிகவும் அவசியமாகும்.

கண்டெடுக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள்.

நமது கையடக்கத்தொலைபேசிகள் காணாமல் போகின்ற பட்சத்தில் செய்யவேண்டியவைகள் குறித்து மேலே பார்த்தோம். அதேநேரம் ஒருவருடைய கையடக்கத் தொலைபேசியை நாம் கண்டெடுக்கின்றபோது என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம். வேலை செய்கின்ற இடங்களில் அல்லது பொது இடங்களில் உரிமையாளரால் தொலைக்கப்பட்ட ஒரு கையக்கத்தொலைபேசியை நாம் கண்டெடுக்கின்றபோது அதிலுள்ள தொடர்பு இலக்கங்கள் போன்றவற்றைக் கொண்டு அதன் உரிமையாளரை கண்டுபிடிக்க முயற்சிக்கலாம். அல்லது அந்த கையடக்கத் தொலைபேசியின் உரிமையாளரே வேறு ஒரு இலக்கத்திலிருந்து அதற்கு அழைப்பை ஏற்படுத்தலாம். அப்போது அதனை உரியவரிடம் சேர்ப்பிப்பதற்கு வாய்ப்புண்டு.

மாறாக நாம் கண்டெடுத்த தொலைபேசி, அழைப்பை ஏற்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்திருந்தால் அல்லது லொக் செய்யப்பட்டிருந்தால் அதனை அதில் எந்த வலையமைப்பின் சிம் அட்டை செருகப்பட்டுள்ளதோ அந்த வலையமைப்பின் முகவர்களிடமோ அல்லது பொலிஸ் நிலையத்திலோ சமர்ப்பிப்பதன் மூலம் அத்தொலைபேசியின் உரிமையாளரை இனம்காணமுடியும்.
ஆனால் எக்காரணம் கொண்டும் நமது சிம் அட்டைகளை அவ்வாறு கண்டெடுக்கப்பட்ட தொலைபேசிகளில் உட்செலுத்துவது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டிய செயலாகும்.

ஏனெனில் கண்டெடுக்கப்பட்ட கையடக்கத்தொலைபேசிகள் யாருடையது என்பதை நாம் அறியமாட்டோம். அவற்றில் நாம் நமது சிம் அட்டைகளை உட்செலுத்திப் பாவனைக்குட்படுத்துகின்ற போது அதன் உரிமையாளர் ஒரு குற்றச்செயலில் தொடர்புபட்டு அவரும் அவருடைய கையடக்கத் தொலைபேசியும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வருமானால் அதில் புதிதாக நுழைக்கப்பட்ட நமது சிம் அட்டையின் இலக்கத்தைக் கொண்டு அந்தத் தொலைபேசி தற்போது செயற்படுகின்ற இடத்தை கண்டுபிடிக்கமுடியும். இதன் மூலம் அத்தொலைபேசியை கண்டெடுத்தவர் குற்றவாளியாகக் கருதப்பட்டு கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. நாம் "கண்டெடுத்த தொலைபேசிதான்" என வாதிட்டாலும் உண்மையான குற்றவாளி கைது செய்யப்படும் வரையில் நம்மை தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு பொலிசாருக்கு அதிகாரமுண்டு என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

பாவித்த கையடக்கத்தொலைபேசிகளை கொள்வனவு செய்தல்.

தற்போது புதிய தொலைபேசிகளைப் போன்றே பாவித்த கையடக்கத் தொலைபேசிகளும் விற்பனை செய்யப்படுவதால் அவற்றை கொள்வனவு செய்கின்றபோது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய நடைமுறைகள் என்னவென்பது குறித்து பார்ப்போம். ஒரு கையடக்கத் தொலைபேசியை நாம் ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்கின்றபோது அத்தொலைபேசியை முதன் முதலில் விற்பனை செய்த வியாபார நிலையத்தின் பற்றுச்சீட்டு இருக்கவேண்டும். அப்பற்றுச்சீட்டில் குறிப்பிட்டுள்ள மாதிரி இலக்கம் (Model number) மற்றும் இமி இலக்கங்கள் ஆகியன குறித்த தொலைபேசியின் இலக்கங்களுடன் உடன்படுகின்றனவா என்பதையும் கவனிக்கவேண்டும். இல்லையேல் நிச்சயம் அதில் எதோ தில்லுமுல்லுகள் இருக்கின்றன என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

அவ்வாறு பற்றுச்சீட்டுக்கள் ஏதும் இல்லாதவிடத்து நம்மிடம் விற்பனை செய்கின்ற நபருக்கு முன்னால் அக்கையடக்கத் தொலைபேசியை யார் யாரெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற விபரங்களை முடிந்தளவிற்குத் துல்லியமாக தெரிந்திருக்கவேண்டும். அவர்களில் யாராவது குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்டு இருப்பார்களானால் அத்தொலைபேசியை கொள்வனவு செய்வது தவிர்க்கப்படவேண்டும்.

அவ்வாறு முந்தைய பாவனையாளர்கள் குறித்த தகவல்கள் கிடைக்காதவிடத்து தற்போதைய பாவனையாளர் தொடர்பான முழு விபரங்களும் திரட்டப்படவேண்டும். குறிப்பாக அவருடைய வீட்டு முகவரி, அடையாள அட்டையின் போட்டோ பிரதி, அவருடைய புகைப்படம் போன்றவற்றை சேகரித்துக் கொள்வது கட்டாயமானது. அதில் மிகமுக்கியமான விடயம், இவ்வாறு கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்கின்ற நபர் விற்பனை செய்வதிலிருந்து சில நாட்களில் வெளிநாடு செல்ல இருக்கிறார் என்றால் அவரிடம் சற்று முன்ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. ஏனெனில் நம்மிடம் ஒரு தொலைபேசியை விற்று விட்டு ஒருவர் வெளிநாடு செல்வாரானால் அவர் சென்றதன் பிற்பாடு அத்தொலைபேசி அல்லது அந்த நபர் குற்றச்செயல்களில் தொடர்புபட்டிருந்தால் குறித்த நபர் நாடுதிரும்பும் வரை அல்லது அவர் கைது செய்யப்படும்வரை நாமே குற்றவாளியாகக் கருதப்படுவோம். அல்லது குற்றத்தின் தன்மையைப் பொறுத்து தடுப்புக்காவலில் வைக்கப்படுவோம் என்பதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒருவர் விற்பனைக்காகக் கொண்டுவருகின்ற தொலைபேசியையும் அந்த நபருடைய வெளி அடையாளங்களையும் வைத்து அத்தொலைபேசி அவருடையதுதானா என்பதை ஓரளவிற்குத் தீர்மானிக்கமுடியும். இருந்தபோதிலும் அவ்வாறு முடியாது போகின்றபோது நாம் மேலே குறிபிட்டது போன்று அவருடைய விபரங்களை சேகரிக்கவேண்டும். அதன் பிறகு அக்கையடக்கத் தொலைபேசிய நாம்கொள்வனவு செய்து பாவிக்கத்தொடங்கியதன் பிறகு அதன் இமி இலக்கம் மாதிரி இலக்கம் போன்றவற்றை குறிப்பெடுத்து ஒரு ஆவணமாகப் பேணிவரவேண்டும்.

களவாடப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள்.

ஒரு தொலைபேசி களவாடப்பட்டு அது ஒரு நபருக்கு விற்பனை செய்யப்பட்டு அதன் பிறகு அத்தொலைபேசி மேலும் பலநபர்களுடைய கைகளில் மாறி மாறி சென்றிருந்தாலும் பொலிசார் அக்கையடக்கத்தொலைபேசியை கைப்பற்றுகின்றபோது இறுதியாக அது யாரிடம் உள்ளதோ அவரே குற்றவாளியாகக் கருதப்படுவார். நாம் அது இன்ன நபரிடம் நான் வாங்கியது என்ற விபரங்களை பொலிசாரிடம் சமர்ப்பித்த போதிலும் ஆரம்பத்தில் அதை களவாடிய குற்றவாளியை கைது செய்கின்றவரைக்கும் நீதிமன்ற அனுமதியோடு நம்மை தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு பொலிசாருக்கு முழு அதிகாரமும் உள்ளது. அது மாத்திரமல்லாது குற்றத்தின் தன்மையை கருத்தின் கொண்டு அதன் பாரதூரத்திற்கமைய அத்தொலைபேசி களவாடப்பட்ட தினத்திலிருந்து பாவனைக்குட்படுத்திய அனைத்து பாவனையாளர்களும் பொலிசாரினால் கைது செய்யப்படுவார்கள். இவ்விடத்தில் அத்தொலைபேசியின் பெறுமதி கவனத்திற்கொள்ளப்படமாட்டாது. புரியப்பட்ட குற்றத்தின் பாரதூரமே கவனத்தில் கொள்ளப்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

கையடக்கத்தொலைபேசிகளின் மூலம் நடக்கின்ற குற்றச்செயல்கள் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகின்றன?

கையடக்கத் தொலைபேசியின் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் குற்றப்புலனாய்வுப் பொலிசாரினால் மிக எளிதில் துல்லியமான சாட்சிகளுடன் கண்டுபிடிக்கப்படுவர். குற்றவாளிகள் அனேகமாக மிரட்டல், கப்பம் அறவிடல், ஆள்கடத்தல் போன்ற குற்றச்செயல்களுக்காகவே அதிகமாக கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் வலையமைப்பினுடனான அதன் உபயோகம் மற்றும் 24 மணிநேரமும் அத்தொலைபேசி ஏதோவொரு வலையமைப்புடனேயே தொடர்பில் இருத்தல் போன்றவற்றை அறியாதவர்களாக இருப்பதன் காரணமாக குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இதனை ஓர் இலகுவான தொடர்பு சாதனமாக மாத்திரமே கருதின்றனர்.

உதாரணமாக ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியை தொடர்ந்தும் பயன்படுத்திவருகிறார். அதில் செருகப்பட்டிருப்பதும் அவரது பெயரில் பதிவுசெய்யப்பட்ட சிம் அட்டையாகவே இருக்கும். அதனைக்கொண்டு அவர் எதுவித குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டார். காரணம் அந்த சிம் அட்டை அவரின் சுய விபரங்களை உள்ளடக்கியிருப்பதால்.

அதனால், யாரையேனும் மிரட்டுவதற்கு அல்லது தொலைபேசியினூடாக தொல்லை கொடுப்பதற்கு வேறொரு நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகளை வைத்திருப்பார். அவ்வாறான குற்றச்செயல் ஒன்றை செய்ய நாடுகின்றபோது தனது பெயரிலுள்ள சிம் அட்டையை அகற்றிவிட்டு அந்தத் தொலைபேசிக்குள் பிறிதொரு நபருடைய பெயரிலுள்ள சிம் அட்டையை உட்செலுத்தி ஒரு பெண்ணிடம் ஆபாச வார்த்தைகளால் தொல்லை கொடுப்பது அல்லது கொலை மிரட்டல் விடுப்பது போன்ற ஏதோவொரு குற்றச்செயலை செய்துவிட்டு மீண்டும் அதே தொலைபேசிக்குள் தான் வழமையாகப்பயன்படுத்துகின்ற சிம் அட்டையை செருகிக்கொண்டு இருந்து விடுவார். இவருடைய எண்ணமெல்லாம் தான் பேசியது எனது பெயரிலுள்ள சிம் அட்டை அல்ல. அது இன்னொருவருடைய சிம் அட்டைதான். எனவே எனக்கு இதனால் பிரச்சினைகள் எழாது என்பதுதான். ஆனால் அங்கேதான் அவர் ஒரு விடயத்தை மறந்துவிடுகிறார்.

அதாவது, எந்தவொரு தொலைபேசியும் செயற்படத் துவங்குகின்ற வினாடியே அதன் இமி இலக்கத்தை வலையமைப்பிற்குப் பதிவிட்டு விடுகிறது. அது வலையமைப்பினூடாக யாருடைய தூண்டுதலும் இன்றி தானாகவே இடம்பெறுகின்ற ஒரு நிகழ்வாகும். அதன் பிறகு அந்த இமி இலக்கத்தையுடைய தொலைபேசிக்கு எத்தனை சிம் அட்டைகள் மாற்றப்பட்டாலும் அத்தனையும் அத்தொலைபேசியின் ஒரே இமி இலக்கத்திற்கே பதிவாகும். அவ்வாறு பதிவாகின்றபோது ஒரு தொலைபேசிக்கு உள்வந்த அழைப்பின் இலக்கத்தை வைத்து அவ்விலக்கத்துக்குரிய சிம் அட்டை பயன்படுத்தப்பட்ட தொலைபேசியின் இமி இலக்கம் கண்டுபிடிக்கப்படுகிறது. அதன் பிறகு அந்த இமி இலக்கத்தில் பயன்படுத்தப்படுகின்ற அனைத்து சிம் அட்டைகளின் பதிவுகளும் பெறப்பட்டு சோதனையிடப்படுகின்றபோது தனது சுய விபரத்தைக்கொண்டு பதிவு செய்யப்பட்ட சிம் அட்டையும் அதற்குள் அடங்கிவிடுகின்றது. அதிலிருந்து அழைப்புக்கள் ஏற்படுத்தப்பட்ட நேரம், அந்த அழைப்புக்கள் பதிவுசெய்யப்பட்ட வலையமைப்புக் கோபுரம் அமைந்துள்ள பகுதி போன்ற தரவுகளை வைத்து குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு புலனாய்வுத் துறையிலுள்ள அதிகாரிகளுக்கு அதிக காலம் எடுப்பதில்லை.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம்தான் 2010ம் ஆண்டு கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட புத்தளத்தைச் சேர்ந்த "பட்டாணி ராசிக்" என்பவரின் கொலை வழக்கு . இக்கொலை வழக்கில் முழுக்க முழுக்க கடத்தல்காரர்கள் தங்களது கையடக்கத்தொலைபேசிகளின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அழைப்புக்களை ஆதாரமாக வைத்தே குற்றப்புலனாய்வுப் பொலிசார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

இறுதியாக.......

ஆனால் இவ்வாறான விடயங்களை விபரமாக அறிந்துகொள்ளாததன் காரணமாக சாதாரண மக்களும் கண்டெடுக்கப்பட்ட தொலைபேசிகளை உரியவரிடம் ஒப்படைக்காது தனது சிம் அட்டைகளை செலுத்தி உபயோகிப்பது, அல்லது முன்பின் அறிமுகமல்லாத ஒரு நபரிடம் அவர் பாவித்ததாகக் கூறுகின்ற தொலைபேசியை கொள்வனவு செய்து தற்குள் தங்களின் சிம் அட்டைகளை இட்டு பயன்படுத்துவது, தாங்கள் பாவித்த தொலைபேசிகள் காணாமல்போனவுடன்  அதுபற்றி பொலிசாரிடம் முறையிடாமல் கவனயீனமாக இருப்பது போன்ற செயல்களினால் நாட்டில் அவ்வப்போது நடக்கின்ற குற்றச்செயல்களில் தாங்களும் பங்கெடுக்க வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

எனவே பொதுமக்களாகிய நாம் பாவித்த, காணாமல்போன, கண்டெடுக்கப்பட்ட கையடக்கத்தொலைபேசிகளின் விடயத்தில் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும். குறைந்த விலைகளில் கிடைக்கின்றன என்பதற்காக மேலே சொல்லப்பட்ட விடயங்களில் பாராமுகமாக இருந்துவிட்டால் அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளின் போது இலட்சக்கணக்கான ரூபாய்களையும் பெறுமதிமிக்க காலநேரங்களையும் வீணாக நீதிமன்றங்களிலும் சிறைச்சாலைகளிலுமே செலவிட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதனை கவனத்திற்கொண்டு செயற்படவேண்டும்.

அதைவிடுத்து சிக்கல்கள் என்று வந்தவுடன் மாத்திரம் போலீசாரையோ நீதிமன்றங்களையோ குறை கூறித்திரிவதில் அணுவளவும் பிரயோசனம் இருக்காது என்பதையும் மனதில் இருத்திக்கொள்ளவேண்டும்.

No comments

Powered by Blogger.