கல்விமான் ஆர்.ஐ.டி அலஸின் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் - அஸாத் சாலி
இந்த நாட்டுக்கு ஆயிரக்கணக்கான துறைசார் முன்னோடிகளை உருவாக்கித் தந்த நவீன கல்வித் துறையின் தந்தை என வர்ணிக்கக் கூடிய ஆர்.ஐ.டி அலஸின் மரணம் ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். ஒரு மாபெரும் கல்விமானை இன்று நாம் இழந்துவிட்டோம். கல்வித் துறையில் அவர் விட்டுச் சென்ற சிந்தனைகளை முன்னெடுப்பதன் மூலமே இந்த நாட்டில் இன மத மொழி பேதமற்ற புதிய சமுதாயம் ஒன்றை உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபையின் உறுப்பினருமான அஸாத் சாலி. ஆர்.ஐ.டி அலஸின் மரணம் தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
ஒரு கீர்த்திமிக்க ஆசிரியராக தனது கல்விச் சேவையைத் தொடங்கி, கொழும்பு றோயல் கல்லூரியின் பிரதி அதிபராகவும் கல்வித்துறை செயலாளராகவும் பதவி வகித்தவர்தான் காலஞ்சென்ற அலஸ். பின்னர் 1967ல் அவரின் சிந்தனையில் உதித்ததுதான் கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி. அவருடைய சிந்தனை வழிகாட்டல் என்பனவற்றின் பேரில் அவரினதும் நூற்றுக்கணக்கான பெற்றோர்களினதும் வியர்வையை அத்திவாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி. இதனால் அவர் பல இடங்களில் பேசும் போது கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி பணக்கார பெற்றோர்களின் பணத்தில் உருவானது அல்ல அது சாதாரண பெற்றோர்களின் உழைப்பில் உருவானது என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று இலங்கையில் ஒரு பாடசாலைக்குள் இந்த நாட்டில் பின்பற்றப்படும் சகல மதங்களுக்கும் சம அந்தஸ்த்து கொடுத்து வழிபாட்டுத்தலங்கள் அறுகறுகே அமக்கப்பட்டுள்ளன என்றால் அது டி.எஸ் சேனநாயக்க கல்லூரியில் மட்டும் தான் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாகும். ஆர்.ஐ.டி அலஸின் உயரிய சிந்தனைகளின் வெளிப்பாடாகவே அவை அமையப் பெற்றுள்ளன. பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே மாணவர்கள் மற்ற சமயங்களை மதிக்கும் பண்பையும் ஏனைய கலாசாரங்களையும் பாரம்பரியங்களையும் புரிந்து கொள்ளும் பண்பையும் தம்மில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அவரின் விருப்பாக இருந்தது. ஏனைய எல்லா பாடசாலகளிலும் இந்தப் பண்புகள் மாணவரிடையே வளர்க்கப்பட்டிருந்தால் ஒருவேளை இந்த நாடு எதிர் நோக்கியுள்ள இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு பற்றிய இக்கட்டான நிலையை பெருமளவுக்கு தவிர்த்திருக்கலாம் என்பதே எனது தனிப்பட்ட நம்பிக்கையாகும்.அவ்வாறு செய்யத் தவறியதன் விளைவுகளை நாம் இன்று கண்கூடாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.
இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் அலஸின் பங்களிப்புக்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவர் கல்வித் துறையில் ஒரு களங்கரை விளக்கமாகத் திகழ்ந்துள்ளார். இலங்கையின் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் சரி அதில் அலஸின் மாணவர்களின் பங்களிப்பு இல்லாத துறையே இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.அந்தளவுக்கு அவர் பலரின் உருவாக்கத்துக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
இத்தகைய ஒரு சிறப்பு மிக்க முன்னோடியின் இழப்பானது எளிதில் ஈடு செய்யக் கூடியதல்ல.அவர் ஒரு கல்வித் துறை சகாப்தவாதி.அவரின் நினைவுகளும் சிந்தனைகளும் என்றென்றும் எம் மனதில் தங்கியிருக்கும். கல்வித் துறையில் அவரின் சிந்தனைகளுக்கு உயிர் கொடுப்பதன் மூலம் இந்த நாடு எதிர்ப்பார்க்கும் இனப் புரிந்துணர்வுக்கு நாம் இலகுவாக வழிவகுக்கலாம என்பதே எனர் கருத்தாகும்;. அது குறித்து அவரின் குடும்பத்தவர்களும் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் கவனம் செலுத்த வேண்டும் என் நான் கேட்டுக் கொள்கிறேன். ஒரு மாமனிதனை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தவர்கள் அனைவருக்கும் அவரின் பழைய மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை சமர்ப்பித்துக் கொள்கிறேன்.

Post a Comment