வடமாகாண முஸ்லிம்களுக்காக விசேட மீள் வாக்காளர் இடாப்புப்பதிவு
(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)
வடமாகாண முஸ்லிம்கள் பலவந்த இடப்பெயர்பால் புத்தளம்,அனுராதபுரம்,கொழும்பு,நீர்கொழும்பு,குருனாகல், பாணந்துறை போன்ற பல பிரதேசங்களிலே வாழ்ந்து வருகின்றனர்.வருடாவருடம் நடைபெறும் வாக்காளர் இடாப்புத்திருத்தத்தின் போது இவர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களின் காரணமாக, இவர்களின் தகுதியான புதிய வாக்காளர்கள் உள்வாங்கப்படாத நிலைமை காணப்படுகிறது.புதிய வாக்காளராக விண்ணப்பிக்காதோர் ஒருபுறமிருக்க,விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதையும் அறியமுடிகிறது.
கடந்த வடமாகாண சபைத்தேர்தலில் அளிக்கப்பட்ட முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குத் தொகை திருப்தி தரக்கூடிய நிலையில் இல்லை. ஆகவே, வடமாகாண முஸ்லிம் வாக்காளரின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்கவேண்டிய நிலை எமக்கு உள்ளது.வடக்கைப் பூர்வீகமாகக்கொண்ட ஒவ்வொரு முஸ்லிமின் வாக்கும் பெறுமதியானது என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும்.
இந்த நிலைமைகளை சரியாக இனம் கண்டு கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்கள் தலைமையிலான குழுவினர் இலங்கைத் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி ஷவாக்காளர் இடாப்பில் பதியப்படாதவர்களையும், புதிய தகுதியான வாக்காளர்களையும் உள்வாங்குவதற்காகவும் 'மீள்வாக்காளர் பதிவு ஒன்றைப்பெற்றிருக்கிறார்கள்' 'நியாயமான இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையாளர் பாராட்டப்பட வேண்டியவர்.
இந்த அரிய சந்நர்ப்பத்தை வடமாகாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்விடயத்தை சமூக நிறுவனங்களும் கருத்தில் கொண்டு மக்களை விளிப்பூட்டும் நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.

Post a Comment