Header Ads



பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வசிக்கும் மாளிகாவத்தையில் 574 வீடுகளை இடிக்க தீர்மானம்

கொழும்பு மாளிகாவத்தை மற்றும் அதை அண்டியுள்ள பகுதிகளில் உள்ள சில காணிகளை கையகப்படுத்துவதற்காக 574 வீடுகளை இடித்து அகற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பெரும்பான்மையாக முஸ்லிம் மக்கள் வசிக்கும் அந்தப் பகுதியிலுள்ள அந்த வீடுகளில் மக்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாலேயே இவை இடிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அவ்வகையில் வீடுகள் இடிக்கப்படுவதால் பாதிக்கப்படும் மக்களுக்கு இரண்டு வருடங்களுக்குள் வீடுகள் கட்டிகொடுக்கப்படும் எனவும் அரச தரப்பால் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

ஆனால் அரசின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அந்தப் பிரதேசவாசிகள் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் எனும் வாக்குறுதியை எழுத்துமூலமாக தெரிவிப்பதை அரச தரப்பு தவிர்த்து வருகிறது என்று மனுதாரர்களில் ஒருவரான முகமது வாஹித் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அவ்வகையில் முன்னரும் சில பகுதிகளில் இடிக்கப்பட்ட வீடுகளில் இருந்தவர்களுக்கு இன்றுவரை மாற்று ஏற்பாடுகளோ வீடுகளோ வழங்கப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.

எழுத்துமூலமான ஒரு உறுதிமொழியை அரசு கொடுத்தால் அது கவனத்தில் எடுக்கப்படும் எனவும் முகமது வாஹித் தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இம்மாதம் 17 ஆம் தேதி வழங்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. bbc

1 comment:

  1. கொழும்பு மாவட்டத்தின் கௌரவ தலைவர் 'மான்புமிகு' பௌசி அவர்கள் இந்தப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டால் 'முஸ்லிம்களை சந்தோசப்படுத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச' அவர்களிடமிருந்து நீதியான தீர்ப்பு கிடைக்குமே..... ?

    ReplyDelete

Powered by Blogger.