GOOD BYE சச்சின்...!
சாதனை வீரர் சச்சினுக்கு மிகச் சிறப்பான முறையில் விடைகொடுக்க, மும்பையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவரது 200வது டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்திய அணியின் "மாஸ்டர்' பேட்ஸ்மேன் சச்சின், 40. சர்வதேச கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். மும்பை, வான்கடே மைதானத்தில் துவங்கும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார். இது இவரது 200வது டெஸ்ட் என்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கோல்கட்டாவில் நடந்த சச்சினின் 199வது டெஸ்ட் போட்டியில் 10 ரன்கள் தான் எடுத்தார். போட்டியும் மூன்று நாட்களில் முடிந்தது. இதனால் பெரிய அளவில் கொண்டாட முடியவில்லை. இந்த குறையை போக்கும் வகையில் தான் பிறந்த ஊரான மும்பையில் சச்சின் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சதம் அடித்து விடைபெற வேண்டும் என்று பெரும்பாலான ரசிகர்கள் விரும்புகின்றனர்.
மும்பை கிரிக்கெட் சங்கமும் (எம்.சி.ஏ.,), சச்சினை கவுரவிக்க, பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. முதல் கட்டமாக கண்டிவ்லி மைதானத்துக்கு இவரது பெயரை சூட்டியது.
அடுத்து, இவரது 24 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையின் சிறப்பான தருணங்களை "பேனர்களாக' வான்கடே மைதானம் முழுவதும் தொங்கவிட உள்ளனர். மும்பைக்கு பெருமை சேர்த்த சச்சினின் "போட்டோ' மற்றும் அவரது 51 டெஸ்ட் சதங்களின் விவரத்தை போட்டிக்கான "டிக்கெட்டில்' அச்சிட்டுள்ளனர்.
வருகிறார் தாயார்:
எம்.சி.ஏ., சார்பில் சச்சினுக்காக தனிப்பட்ட முறையில் 500 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்போட்டியை நேரில் காண உள்ளார் இவரது தாயார் ரஜ்னி. "வீல் சேரில்' தான் வர முடியும் என்பதால், சறுக்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது. 200வது டெஸ்டில் பங்கேற்பதற்கு மரியாதை செலுத்தும் விதத்தில், சச்சின் முகத்துடன் கூடிய தபால் தலை வெளியிடப்பட உள்ளது.
பாதுகாப்பு அதிகம்:
கடந்த 2011ல் வான்கடே மைதானத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு அளித்த பாதுகாப்பைவிட, தற்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்க மும்பை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
தங்க நாணயம்:
கோல்கட்டா டெஸ்டில் நடந்த "டாஸ்' நிகழ்ச்சியை போல, மும்பையிலும் 10 கிராம் தங்க நாணயம் "டாஸ்' நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்படவுள்ளது. போட்டி நடக்கும் தினங்களில் (நவ.14- 18) ஒவ்வொரு நாளும் சச்சினின் 10,000 முகமூடிகள்(மாஸ்க்), 10,000 ஸ்கோர் கார்டுகள், 10,000 தொப்பிகள் ரசிகர்களுக்கு வழங்கப்பட உள்ளன. பவுண்டரி அடிக்கும் போது காண்பிக்கப்படும் விளம்பர அட்டைகள் அனைத்திலும் சச்சின் "போட்டோ' இடம் பெற்றிருக்கும்.
இவைதவிர, வான்கடே மைதானத்தில் ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் இவரது பிரமாண்ட "கட்- அவுட்' வைக்கப்படவுள்ளன. சச்சின் "போட்டோவுடன்' கூடிய பலூன்கள், அவரின் சர்வதேச சதங்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய "பேனர்களும்' மைதானம் முழுவதும் அலங்கரிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
கிரிக்கெட்டுக்கு மூவர்
சச்சின் குறித்து கவாஸ்கர் கூறுகையில்,""கால்பந்து என்றால் பீலே, கூடைப்பந்து எனில் மைக்கேல் ஜோர்டான், குத்துச்சண்டை போட்டிக்கு முகமது அலி போல, கிரிக்கெட்டுக்கு மூன்று பேர் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் பிராட்மேன், வெஸ்ட் இண்டீசின் கேரி சோபர்ஸ் மற்றும் சச்சின்,'' என்றார்.
குடும்பத்துக்கு நேரம்
கபில்தேவ் கூறுகையில்,"" கிரிக்கெட்டின் வைரம் சச்சின். இந்திய அணிக்காக கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் சச்சின் பங்கேற்று விட்டார். ஓய்வுக்குப் பின் எவ்வித வேலைகளையும் வைத்துக் கொள்ளாமல், குறைந்தது 2 ஆண்டுகள் குடும்பத்தினருடன் செலவிட வேண்டும். இவருக்கு அனைத்து சந்தோஷங்களும் கிடைக்க வாழ்த்துகிறேன்,'' என்றார்.
130 கோடி மக்களுக்காக...
வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாரா கூறுகையில்,"" சுமார் 130 கோடி இந்திய மக்களுக்காக கிரிக்கெட் விளையாடுவது கடினம் எனத் தெரியும். எனக்கு 2 ஆண்டுகள் முன்னதாக விளையாடத் துவங்கிய சச்சின், எனக்குப் பின் ஆறு ஆண்டுகள் கழித்து விடைபெறுவது வியக்கத்தக்கது. உலகின் மற்ற வீரர்களை விட அசத்தலான தொழில்நுட்பத் திறன் கொண்டவர்,'' என்றார்.
விளையாட்டு அமைச்சராக...
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக சச்சினை நியமிக்க வேண்டும் என தடகள ஜாம்பவான் மில்கா சிங், முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்து போர்டே, மல்யுத்த வீரர் சுஷில் குமார் வலியுறுத்தியுள்ளனர். சுஷில் குமார் கூறுகையில்,""விளையாட்டுத்துறை அமைச்சராக சச்சின் வர வேண்டும். கடந்த 24 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். எங்களின் தேவையை இவர் நன்கு அறிந்து, பூர்த்தி செய்வார். பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவுடன், சச்சினை சந்தித்து காலில் விழுந்தேன். இந்தியாவுக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள். இதை நீங்கள் தொடர வேண்டும் என்றார். லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பின், போனில் பேசினேன். சுமார் ஐந்து நிமிடம் சரிங்க சச்சின்.. சரிங்க சச்சின்.. என்று மட்டும் கூறினேன். வேறு என்ன சொல்வது என்றே தெரியவில்லை,'' என்றார்.
ஆறு மாதம் அவகாசம்
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா கூறுகையில்,"" ஓய்வுக்குப்பின் என்ன செய்யப்போகிறோம் என்பதில் சச்சின்தான் முடிவு எடுக்க வேண்டும். கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டில் இவரின் பங்களிப்பு தேவை. அடுத்த ஆறு மாதத்திற்குள் எந்தவித பதட்டமும் இல்லாமல், நல்ல முடிவை தேர்ந்தெடுக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் சச்சினால் போட்டியில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. பத்திரிகையில் இவரின் வெற்றி முடிந்துவிட்டது என்றெல்லாம் செய்தி வெளியானது. இதையும் மீறி, அடுத்த போட்டியில் சதம் விளாசினார். ஒரு சாம்பியன் இப்படித்தான் இருப்பார்,'' என்றார்.
எம்.பி.,யாக யார் காரணம்
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,"" ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு சச்சின் பெயரை காங்., தலைவர் சோனியா காந்திதான் பரிந்துரை செய்தார். இதன்படி, சச்சினிடம் பேசினேன். அவர் குடும்ப உறுப்பினர்களோடு விவாதித்து, சம்மதம் தெரிவித்தார். கடந்த 2-3 ஆண்டுகளாக பாரத ரத்னா விருது இவருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். விளையாடிக் கொண்டிருக்கும் வீரருக்கு இதை தந்தால், சர்ச்சை ஏற்படும். இவர் ஓய்வு பெற்றபின், இது பற்றி அரசு பரிசீலனை செய்யும்,'' என்றார்.

Post a Comment