ஒரு மில்லியன் டாலர் சம்பாதிக்கும்வரை அரசியலில் இருப்பேன் - கானா துணை அமைச்சர்
கடந்த வருடம் கானாவில் நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜான் மகாமாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர் விக்டோரியா ஹம்மா ஆவார். இதற்குப் பிரதிபலனாக அவருக்கு துணை தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் பதவி கிடைத்தது.
அப்போதே அவர் அனுபவமற்றவர் என்றும் இளவயதுக்காரர் என்றும் அரசியல் அனுபவமிக்கவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களது கூற்றை நிரூபிப்பது போல் பொதுமக்கள் முன்னிலையில் தனது முதல் உரையைத் துவக்கும்போதே அவர் பல தவறுகள் செய்தார். அதன்பின்னர் தவறான உரை தனக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறி சமாளித்தார்.
பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு அமைச்சரான தன்னை பணக்காரியாக மக்கள் நினைத்துக் கொண்டுள்ளதால் பொதுப் பணத்தைத் திருட வேண்டிய மன அழுத்தம் தனக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதுபோன்ற அருவருப்பான கோரிக்கைகளை அவர் விவரித்ததாக தகவல்கள் வெளிவந்தன. ஊழல் சமூகத்தின் பிரதிபலிப்பே ஊழல் அரசியல்வாதிகள் என்று தன் செயலுக்கு நியாயம் வேறு கற்பித்தார்.
சமீபத்தில் ஒரு மில்லியன் டாலர் தொகை சம்பாதிக்காமல் தான் அரசியலை விட்டுவிலகமாட்டேன் என்று விக்டோரியா கூறியது அவருக்குத் தெரியாமல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. உங்களிடம் பணம் இருந்தால் மட்டுமே நீங்கள் மக்களை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி மற்றொரு இணை அமைச்சரையும் அவர் தரக்குறைவாக குறிப்பிட்டுள்ளார். இந்த ஒலிநாடாவானது பரவலாக அனைவரிடத்திலும் விநியோகிக்கப்பட்டு உள்ளூர் வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது.
இந்தத் தகவல் பரவிய ஒரு மணி நேரத்தில் விக்டோரியா ஹம்மாவின் பதவி நீக்கத்தை அறிவித்த ஒரு வரிக் கடிதம் தகவல்துறை அமைச்சர் மகாமா அயரிகாவிடமிருந்து வெளிவந்துள்ளது.
இந்தக் கடிதத்தில் பதவி நீக்கத்திற்கான எந்தக் காரணமும் குறிப்பிடப்படவில்லை. தனது பதவி நீக்கத்துக்கு காரணமாயிருந்த ஒலிநாடா பற்றி விக்டோரியா ஹம்மாவும் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

Post a Comment