ரகசியங்களை பாதுகாக்க ஒபாமா பயன்படுத்தும் பாதுகாப்பான சூப்பர் டென்ட்
அமெரிக்க அதிபர் ஒபாமா வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும்போது, அவர் பயன்படுத்தும் குண்டு துளைக்காத காரோடு, ரகசியங்களை யாரும் ஒட்டுக் கேட்க முடியாதபடிக்கு அதிநவீன கருவிகள் பொருத்திய ஒரு டென்ட்டும் கூடவே செல்கிறது. முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிக்கும்போது இந்த டென்டுக்குள் அமர்ந்துதான் விவாதிக்கிறார் ஒபாமா.எதிரி நாடுகளின் தலைவர்கள் மட்டுமல்லாது, என்ன சொன்னாலும் கேட்கும் நட்பு நாடுகளின் தலைவர்களையும் அமெரிக்கா ஒட்டுக் கேட்டது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் பெரும் அதிருப்தியில் உள்ளன. இந்த நிலையில் தங்கள் அதிபரின் போனையும் யாராவது ஒட்டுக் கேட்டுவிட்டால் என்னாவது என, உஷாராக முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுத்துள்ளது அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ. அப்படி தயாரானதுதான் அதிநவீன டென்ட்.ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்தாலும், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போனாலும் சிஐஏ அதிகாரிகள் இந்த டென்ட்டையும் கூடவே எடுத்து செல்கின்றனர்.
ஒபாமா தங்கும் நட்சத்திர ஓட்டலின் அறையில் ஒட்டுக் கேட்கும் கருவிகள் எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்கிறார்கள் அதிகாரிகள். அப்படி ஏதாவது இருந்தால் அவற்றை அகற்றி விடுகிறார்கள். நட்பு நாடோ, எதிரி நாடோ யாரையும் நம்ப முடியாது என நினைக்கும் அதிகாரிகள், ஓட்டலின் ஒரு அறையில் இந்த டென்ட்டை அமைத்து விடுவார்கள்.முக்கியமான விஷயங்கள் குறித்து ஒபாமா பேச விரும்பினால் இந்த டென்ட்டுக்குள் போய் விடுவார். உடன் வரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் அமரும் வகையில் உள்ளது இந்த டென்ட். இதன் உள்ளே இருக்கும் நவீன கருவிகள் இங்கு பேசுவதை யாரும் ஒட்டுக் கேட்க முடியாதபடிக்கு செய்து விடுகிறது. வீடியோ கேமராவோ, ஒட்டுக் கேட்கும¢ கருவியோ இதன் உள்ளே வேலை செய்யாது. ரேடியோ அலைகளை அனுப்பி ஒட்டுக் கேட்க நினைத்தாலும் முடியாது. ஒபாமா பயன்படுத்தும் பிளாக்பெர்ரி போன் மிகவும் பாதுகாப்பானது. அவர் பேசுவதை எந்தக் கருவியாலும் ஒட்டுக் கேட்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

Post a Comment