Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு வரலாறு இருக்கிறதா, என நேற்று வந்தவர்கள் கேட்கிறார்கள் - என்.எம் அமீன்

(ஏ.எல்.ஜுனைதீன்)

மனித நேயமிக்க ஒரு மனிதராக  கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீலை காண்கின்றோம். அவரின் தூர நோக்கான சமுதாய சேவைக்காக 110 முஸ்லிம் அமைப்புக்களின் சார்பாக இவ் விழாவில் கலந்துகொண்டு எமது நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும்  தெரிவிக்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் என்பனவற்றின் தலைவர் அல்ஹாஜ் என்.எம் அமீன் கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களுக்கான பாராட்டு விழாவில்  பேசும் போது தெரிவித்தார். 

இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு வரலாறு இருக்கின்றதா என்ற கேள்விகளை அண்மைக் காலமாக எழுப்புகின்ற சேனாக்களை நாம் பார்க்கின்றோம்.தேசபந்து ஜெசீமா இஸ்மாயில் இங்கு பேசுகின்ற போது இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற துன்பம் துயரங்கள் நீங்க வேண்டும் என்று பிரார்த்தியுங்கள் என்று வேண்டியவராக தனது உரையை முடித்தார். உண்மையாகவே இதுதான் முஸ்லிம் சமூகம் ஒவ்வொரு நேரமும் சிந்திக்க வேண்டிய விடயமாக இருந்து கொண்டிருக்கின்றது.

முஸ்லிம்களுக்கு வரலாறு இருக்கின்றதா?  இவர்கள் நேற்று வந்தவர்கள். முஸ்லிம்களுக்கு வரலாறு என்பதே இங்கு இல்லை என்ற அச்சுறுத்தல் அல்லது சவால் விடுக்கப்படுகின்ற யுகத்தில் அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டுத் திணைக்களத்தில் செயலாளராக இருந்தபோது ஆற்றிய பணியையே இங்கு  குறிப்பிட விரும்புகின்றேன்.

அக்காலத்தில் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள் முன்னள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களின் ஒத்துழைப்புடன் தனது நிர்வாக சேவைக்கு அப்பால் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டுத் திணைக்களத்தின் ஊடாக முஸ்லிம்களின் வரலாறு தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்ற மீலாத் விழாக்களில் அந்தந்த மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றைப் பதிவு செய்து தந்திருக்கிறார்கள்.

இன்று முஸ்லிம்களின் வரலாற்றைப் பற்றி சவால் விடுபவர்களுக்கு நாம் எதைச் சொல்லுவது என்று தெரியாமல் இருக்கின்ற போது எமது மூதாதையர்கள் 1200 வருட காலங்கள் இந்நாட்டில் வாழ்ந்த வரலாற்றை உறுதியாகப் பேசுகின்ற ஒரு வாய்ப்பை அதன் மூலம் ஏற்படுத்தித் தந்த பெருமை அல்ஹாஜ் ஜெமீல் அவர்களுக்கு இருக்கின்றது.

முஸ்லிம்களைப் பேசுவதற்கு முஸ்லிம்களின் வரலாற்றைச் சொல்லுவதற்கு அந்த ஆவணங்களைத் தொகுத்துத் தந்த  அந்த சேவைக்காக நாம் இந்த சந்தர்ப்பத்தில் ஜெமீல் அவர்களுக்கு கெளரவத்தை வழங்குவது பெருமை மிக்கது என்றுதான் எங்களால் கூறமுடியும்.

கல்விமான் ஜெமீல் அவர்களுடன் நாங்கள் நிறைய சமுதாய பணிகளில் ஈடுபட்டிருக்கின்றோம். நான் இந்த இடத்திற்கு வருகை தந்திருப்பது இலங்கையில் இருக்கின்ற 110 முஸ்லிம் அமைப்புக்களைச் சார்ந்த அதன் தலைவர் என்ற வகையில் எங்களுடைய நல்வாழ்த்துக்களை இவருக்கு தெரிவிப்பதே முக்கியமான. நோக்கமாகும்.

இந்த சமுதாயத்திற்கு சிறப்பாகச் செய்த பணிகளில் மற்றொன்றுதான் தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு இவர் ஒரு சின்னமாக ஏன் இணைப்பாளராக திகழ்ந்திருக்கிறார். அது இந்த காலகட்டத்தின் தேவை. பேராசிரியர் கலாநிதி எஸ்.மெளனகுரு அவர்கள் தனது உரையில் இதனைத் தெளிவாகக் குறிப்பிட்டுப் பேசினார்கள்.

இனவாதமற்ற ஒரு சமுதாயம் இந்நாட்டிற்கு தேவைப்படுகின்றது. புதிய தலைமுறைக்கு அது  அவசியம் தேவைப்படுகின்றது. இதற்கான முன்மாதிரியை பாராட்டப்படும் கல்விமான் ஜமீல் அவர்கள் காட்டித் தந்திருக்கிறார்கள்.

எமது கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி இந்நாட்டுடைய தமிழ் சிங்கள முஸ்லிம் சமுதாயங்களை எவ்வாறு ஒற்றுமையாகச் செயல்படுவதற்கு உருவாக்கியுள்ளது என்பதனை மர்ஹும் அஸீஸ் அவர்களினதும் மர்ஹும் ரி.பி.ஜாயா அவர்களினதும் சிறப்பு மாணவராக அக்கல்லூரியில்  இருந்த டபிள்யு ரத்னதேரோ அவர்கள் இங்கு பேச இருக்கின்றார்கள்.

இதுமாத்திரமல்லாமல் இவர் நேர்மையானவர் அத்தோடு  கிழக்கு மாகாணத்தில் இருந்து கொழும்பு வந்து எந்தக் கிராமத்திலும்  ஆசிரியர்கள்,  எழுத்தாளர்கள் என்போரை உருவாக்கி இந்நாட்டின் கிழக்கையும் தெற்கையும்  இணைக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இருந்திருக்கின்றார் என்பதும் மிகவும் முக்கியமான விடயமாகும்.

முஸ்லிம்களின் எந்த நிகழ்ச்சிகளை எடுத்துக் கொண்டாலும் தெற்கில் கொழும்பில் மற்றும் ஏனைய இடங்களில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களுக்கு ஒரு இடம் கொடுக்கப்படுகின்றது. இதன் மூலம் கிழக்குக்கும் தெற்கிற்கும் ஒரு இணைப்புப் பாலமாக இவரைக் காண்கின்றோம். இவர் எங்கெல்லாம் தமது பணிகளைச் செய்தாரோ அங்கெல்லாம் மிகவும் சிறப்பாக அந்தப் பணிகளைச் செய்திருக்கின்றார்.

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி இகல்முனை ஸாஹிறாக் கல்லூரி என்பனவற்றில் இவர் அதிபராக பதவி வகித்த காலம் ஒரு பொற்காலம் எனக் கூறப்படுகின்றது. அகில இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தில் தலைவராக இருந்தபொழுது சிறப்பான பணிகள் நடைபெற்றிருக்கின்றது.

முஸ்லிம்களுடைய கல்வியைப் பொறுத்த வரையில் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மகாநாடு இந்நாட்டு ஜனாதிபதிக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தது. இது தொடர்பான ஆவணத்தைத் தயாரித்து வெளியிடுவதில் கல்விமான் ஜெமீல் அவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். 

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மகாநாடு சார்பில் கல்வி சீர்திருத்தம் தொடர்பாக தெரிவுக் குழு முன் சென்று நாங்கள் சாட்சியமளித்தோம். இலங்கையிலே பொதுக் கல்வி தொடர்பாக முஸ்லிம் சமூகத்தின் சார்பில் முன் வைத்த பிரேரணைகள்தான் மிக நல்ல பிரேரணைகள் என கல்வி அமைச்சர் இந்நாட்டின்  ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு தகவல் கொடுத்திருந்தார். அன்று நாங்கள் கல்விமான் ஜெமீல் அவர்களின் தலைமையில்தான் தெரிவுக் குழு முன் சென்றிருந்தோம்.

உண்மையில் இந்த சமூகத்திற்கு ஆற்றவேண்டிய பணிகளை தன்னாலானவகையில் தூர நோக்கோடு செய்ததன் காரணமாக முஸ்லிம் சமூகம் இவரைப் பாராட்டுகின்றது. இவரின் பணி தொடர வேண்டும். இவ்வாறு அல்ஹாஜ் அமீன் இங்கு தெரிவித்தார்.

1 comment:

  1. I Have to indicate one thing MR.JAMEEL Sir he is a dedicate person becuose he was in saudi Arabia international school in Riyadh As a Principal that time was in school good development.& so many Doctors,Engieners & well educate persons in out put the school so i have to respected to Mr,Jameel Sir Thanks God i pray for him and his family.

    ReplyDelete

Powered by Blogger.