Header Ads



ஓய்வை ஏற்றுக் கொள்ளுங்கள் - சச்சின் உருக்கம்

 ""கிரிக்கெட் வாழ்க்கையில் ஓய்வு என்பது சகஜமானது. என் ஓய்வையும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்,'' என, சச்சின் கேட்டுக் கொண்டார்.

இந்திய அணியின் சாதனை வீரர் சச்சின், 40. வரும் 14ம் தேதி மும்பையில் துவங்கும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். இது இவரது 200வது டெஸ்ட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இது குறித்து சச்சின் கூறியது:

 நான் ஓய்வு பெற இன்னும் சில நாட்களே <உள்ளன. 24 ஆண்டுகள் கிரிக்கெட்டுக்காக கொடுத்து விட்டேன். இனி குடும்பத்துக்காக நேரத்தை செலவிட உள்ளேன். ரசிகர்களின் பாசத்தை கண்டு நெகிழ்ந்து போகிறேன். சமீபத்தில் மும்பையில் உள்ள எனது நண்பரின் வீட்டிற்கு சென்றேன். என் வருகையை அக்கம் பக்கத்தினர் தெரிந்து கொண்டனர். உடனே என்னை நோக்கி "பேட்டை' உயர்த்தி கவுரவப்படுத்தினர். இதை பார்த்து வாயடைத்து போனேன். 

கோல்கட்டா டெஸ்டுக்கு பின் இந்திய அணியின் "மசாஜர்' பின்டு, தேம்பி தேம்பி அழுதார். "ஓய்வு என்பது என் வாழ்வின் ஒரு பகுதி. அதற்காக நீங்கள் அழ வேண்டாம். அடுத்து வரும் இளம் வீரர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்' என, ஆறுதல் கூறினேன். 

பரிசு மழை:

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவர் சமர் பால், வீட்டிற்கு சென்றேன். அவருடைய வீடு முழுவதும் பரிசுப் பொருட்கள் நிரம்பியிருந்தன. என்வீடு பெரிதாக இருந்தாலும், அனைத்தையும் வைக்க இடம் இல்லை. அவரின் கட்டாயத்தால் சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டேன். 

கோல்கட்டா தெருக்களில் வைக்கப்பட்டிருந்த என் பெரிய "கட் அவுட்' மற்றும் ரசிகர்கள் என் முகமூடியை அணிந்திருந்ததை கவனித்தேன். இவர்களது ஆதரவுக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்.

 மும்பை டெஸ்டில் என்ன நடக்கும் என நிச்சயமாக சொல்ல முடியாது. இப்போட்டியில் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடிந்த அளவுக்கு முயற்சிப்பேன்.  இவ்வாறு சச்சின் கூறினார். 

தபால் தலை வெளியீடு 

சச்சின் பங்கேற்கும் 200வது டெஸ்ட் மும்பையின் வான்கடே மைதானத்தில் வரும் நவ. 14ல் துவங்குகிறது. இதே தினத்தில் இந்திய தபால்துறை சச்சின் முகம் அச்சிட்ட பிரத்யேகமான தபால் தலையை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

தோனிக்கு சிபாரிசு

இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு தோனியை சச்சின் தான் சிபாரிசு செய்தாராம். இது குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முன்னாள் தலைவர் சரத் பவார் தனது "பிளாக்' சமூகவலைதளத்தில் வெளியிட்ட செய்தியில்,"சில ஆண்டுகளுக்கு முன் இந்திய அணி, இங்கிலாந்துக்கு சென்றிருந்தது. அப்போது, நானும் லண்டனில் இருந்தேன். கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக டிராவிட் தெரிவித்தார். இப்பதவிக்கு சச்சினை பரிந்துரை செய்தார். இது குறித்து சச்சினிடம் பேசினேன். இதில் இவருக்கு ஆர்வம் இல்லை. கேப்டன் பதவிக்கு தோனியின் பெயரை பரிந்துரைத்தார். இதன்படி, பி.சி.சி.ஐ., தேர்வுக்குழுவும் தோனியை கேப்டனாக தேர்ந்தெடுத்தது. இவரும் அணிக்கு இரு உலக கோப்பை வென்று தந்தார். இது சச்சினின் தொலைநோக்கு பார்வையினால் சாத்தியமானது,'என, குறிப்பிட்டுள்ளார். 

லாரா விருப்பம்

சச்சினின் 199வது டெஸ்ட், கோல்கட்டாவில் நடந்தது. இப்போட்டி மூன்று நாட்களில் முடிந்ததால், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாராவால் சச்சினை நேரில் பாராட்ட முடியவில்லை. நேற்று முன் தினம் இங்கு வந்த லாரா, பெங்கால் கிரிக்கெட் சங்க (சி.ஏ.பி.,) நிர்வாகிகளை சந்தித்தார்.

இது குறித்து சி.ஏ.பி., பொருளாளர் பிஸ்வரூப் கூறுகையில்,""ஈடன் கார்டன் மைதானத்தில், எதிர்காலத்தில் கங்குலி, சச்சினுடன் இணைந்து கண்காட்சி போட்டியில் விளையாட லாரா விரும்பம் தெரிவித்தார். இதற்கு ஏற்பாடு செய்யும்படி வலியுறுத்தினார். இவர், மைதானத்தை வலம் வந்தது, "டிரெசிங் ரூமிற்கு' சென்றது எங்களுக்கு மகிழ்ச்சி தந்தது,''என்றார்.

No comments

Powered by Blogger.