ஊவா மாகாணத்திலுள்ள ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு
கண்டியைத் தலைமையகமாகக் கொண்டு தோற்றுவிக்கப்படவுள்ள ஊடக அமைப்பின் இடைக்கால நிருவாக சபை உறுப்பினர்கள் கடந்த சனிக்கிழமை ஊவா மாகாணத்திலுள்ள ஊடகவியலாளர்களுடன் சந்திப்பொன்றை பதுள்ளையில் அமைந்துள்ள ஊவா கூட்டுறவு கடன் வழங்கும் சங்க மண்டபத்தில் நடாத்தினார்கள்.
இந்த ஊவா ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் முஹம்மட் நியார் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பதுள்ளையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலுக்கு இடைக்கால நிருவாக சபையின் தலைவர் இர்பான் காதர், இணைச் செயலாளர் நளீர் அழைப்பாளி நஜீப், பொருலாளர் சியாம் ஆகியோர் கலந்து கொண்டு உத்தேச அமைப்புத் தொடர்பான கருத்துக்களைத் தெளிவு படுத்தினார்கள்.
ஊவா ஊடகவியலாளர்கள் சார்பில் பாயிஸ், வாஹிட் குத்தூஸ், ஹசன் அலி ஆகியோரும் இன்னும் பலரும் அங்கு கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்தக் கலந்துரையாடலின் போது சமூக நலனையும் ஊடகவியலாளர்களின் நலன்களையும் அடிப்படையாகக் கொண்டு தோற்றுவிக்கப்படவுள்ள உத்தேச அமைப்பில் இணைந்து செயல்பட தாம் பூரண சம்மதத்தைத் தெரிவிப்பதாக கூட்டத்திற்கு வருகை தந்திருந்தவர்கள் அனைவரும் ஏகமனதாகத் தெரிவித்தனர்.
உத்தேச ஊடகவியலாளர்களின் ஊவா இணைப்பாளராக ஆசிரியர் முஹம்மட் நியார் அவர்கள் அங்கு தெரிவு செய்யப்பட்டார். எனவே மேலும் இவ்வமைப்பில் இணைந்து செயலாற்ற விரும்புகின்ற ஊவா மாகாணத்தைச் சார்ந்த ஊடகவியலாளர்கள் ஆசிரியர் நியார் அவர்களிடமிருந்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு இடைக்கால நிருவாகசமையினர் கேட்டுக் கொள்கின்றார்கள்.

Post a Comment