அரசாங்கத்தை சிவில் சமூகம் எதிரியாக நோக்கக் கூடாது - டாக்டர் ஜெமீலா மஹ்மூத்
மோதல்களில் இருந்து மீண்டெழுந்து முன்னேறி வரும் நாடுகளுக்கு இலங்கை முன்மாதிரி நாடாக இருக்க முடியுமென மேர்ஸி மலேஷிய அமைப்பின் ஸ்தாபகரும், பிரபல சிவில் அமைப்பு செயற்பாட்டாளருமான டாக்டர் ஜெமீலா மஹ்மூத் தெரிவித்தார். பொதுநலவாய மக்கள் மாநாடு ஹிக்கடுவை சாயா டிரான்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பிரதான உரை நிகழ்த்திய அவர், பொதுநலவாய மக்கள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை வெகுவாகப் பாராட்டினார். அவர் தெரிவித்த கருத்துக்களை ஆரம்பமாக கொண்டு மோதல்களில் இருந்து மீண்டு வரும் நாடுகளில் நடைபெறும் அபிவிருத்தி செயற்பாடுகளில் சிவில் அமைப்புகள் பங்களிக்க வேண்டும் என்றார்.
பொதுநலவாய மக்கள் மாநாடு, பொதுநலவாய மன்றத் தலைவர் ஆனந்த் சத்யானந்தன், உப குழு தலைவர் டாக்டர் லலித் சந்ரதாஸ ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
2015 அபிவிருத்தி செயற்பாட்டில் சிவில் அமைப்புக்களின் பங்களிப்பு எனும் தொனிப் பொருளில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
நாட்டின் அபிவிருத்தி செயற்பாட்டில் சிவில் அமைப்புகளுக்கு பாரிய பங்குள்ளது. அரசாங்கத்தை சிவில் சமூகம் எதிரியாக நோக்கக் கூடாது. 2015 அபிவிருத்தி இலக்கில் தீர்மானம் எடுப்பதில் தாக்கம் செலுத்தக்கூடிய சகல தரப்பினரும் உள்வாங்கப்பட வேண்டும் வறுமை நிலையில் உள்ள மக்களுக்கு குரல் கொடுக்கும் வகையில் இது அமைய வேண்டும்.
இறுதித் தீர்வுக்கான முயற்சியுடன் சிவில் அமைப்புகள் அரச தலைவர்களுடன் பேச வேண்டும். சிவில் அமைப்புகள் எப்பொழுதும் தமது வகிபாகத்தை விட்டுக் கொடுக்கக்கூடாது. எமது யோசனைகளை சிவில் சமூகங்கள் உள்வாங்கி செயற்பட வேண்டும். அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படும் அதேவேளை அவதானமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். மரபு ரீதியாக அன்றி நாம் பரந்துபட்ட அளவில் செற்பட வேண்டும்.
ஜனாதிபதியின் உரையில் மனித உரிமை, ஊடக சுதந்திரம் குறித்து தெரிவித்து கருத்துகள் வரவேற்கத்தகவை என்றார்.

Post a Comment