இலங்கையுடனான உறவை பணயம் வைக்க முடியாது – இந்தியா அறிவிப்பு
சிறிலங்காவில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். நேற்று புதுடெல்லியின் புறநகர் பகுதியான குர்கானில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எங்கள் கட்சியை சேர்ந்த, மத்திய அமைச்சர்கள் சிலர், மாநாட்டில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
அத்துடன், இந்த மாதமும், அடுத்த மாதமும், ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. இங்கு பிரதமர் மன்மோகன்சிங் பரப்புரைகளில் ஈடுபட வேண்டியுள்ளது. இதுபோன்ற மேலும் பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு தான் கொமன்வெல்த் மாநாடு தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எனினும் கொழும்பு கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கவில்லை. இந்தியாவின் சார்பில் கொமன்வெல்த் மாநாட்டில் நான் பங்கேற்கிறேன். பிரதமர் மன்மோகன்சிங் இந்த மாநாட்டில் பங்கேற்காததை காரணம் காட்டி இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையேயான உறவைப் பணயம் வைக்கக்கூடாது.
இருநாடுகளுக்கும் இடையிலான உறவை முன்னெடுத்துச் செல்ல பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது இப்போது அவசியமாகிறது. சிறிலங்காவின் வடக்கு மாகாணத்தில் அண்மையில் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அபிவிருத்தி, புனரமைப்பு, நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா உறுதி பூண்டுள்ளது. தமிழர் பகுதியில் இந்தியா சார்பில் 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன" என்றார் சல்மான் குர்ஷித்.
கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காததற்கு, பல காரணங்கள் உள்ளன. மாநாட்டில் பங்கேற்க நான் கொழும்பு செல்கிறேன். மாநாடு முடியும் வரை அங்கேயே இருப்பேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக, சல்மான் குர்ஷித், இன்று, கொழும்பு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment