அக்கரைப்பற்று அரசியல்வாதிகளின் கவனத்திற்கு (படங்கள் இணைப்பு)
படம் A இல் உள்ளது என்ன? வெளி நாட்டில் உள்ள ஒரு கட்டடம் என எண்ணுகின்றீர்களா? இல்லை நம்ம அக்கரைப்பற்று மாநகர சபை பஸ் தரிப்பு நிலயத்தில் அமைந்திருக்கும் பயணிகள் வியாபாரக் கொள்வனவுக் கட்டிடம். B மற்றும் C என்ன? அதுதான் ஓர் இழுக்கான விடயம் அதைப்பற்றி சுவாரஸ்யமாய் எழுதியுள்ளோம் படித்து விட்டு எல்லோரும் ஒன்றிணைந்து தீர்வைப் பெற முயல்வோம் வாருங்கள்,
அக்கரைப்பற்று அரச மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து சேவைக்காக பொதுவான பஸ் தரிப்பிட நிலையம் உள்ளது. இந்த பஸ் தரிப்பிடத்தினை நோக்கி திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாரை, பொத்துவில், கொழும்பு, கண்டி, மாத்தறை, அழுத்கம, மற்றும் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு போன்ற தூர மற்றும் மத்திம தூர ஊர்களை நோக்கிச் செல்லும் பயணிகளும், அப்பிரதேசங்களில் இருந்து வரும் பயணிகளும் தரித்துச் செல்லும் ஒரு முக்கிய பேருந்துத் தரிப்பிடமாகும்.
விசேடமாக இந்த தரிப்பிடத்திற்கு வந்து சேரும் மக்கள் அனைவரும் சராசரி மனிதர்களே தவிர வானிருந்து இறங்கிய வானவர்கள் அல்ல! ஒரு சராசரி மனிதனின் மிக முக்கி தேவைகளில் ஒன்று மலசலகூடம். இந்த மலசல கூடத்தினை பயணத்தின் போது தேடி அலைந்து அல்லலுற்றோர் விரல் விட்டு எண்ணக் கூடியோர்களைத் தவிர மற்ற எல்லோரும் அவஸ்தைப்பட்டவர்கள்தான்.
சரி இப்போது விடயத்திற்கு வருவோம், அக்கரைப்பற்று பஸ் தரிப்பிடமானது ஒரு நவீன பஸ்தரிப்பு நிலையமாகும். இங்கே பயணிகளுக்காக ஒரு மலசலகூடம் கட்டப்பட்டு பாவனையில் இருந்து இப்போது அந்த மலசலகூடத்திற்கு நீண்ட நாளாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அந்த மலசல கூடத்திற்கு இன்னும் எத்தனை நாள் வரை நீடிக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நாசூக்காக சொல்லாமல் நேரடியாகச் சொன்னால் அந்த மலசல கூடத்திற்குள் மனிதர்கள் செல்ல முடியாத அளவு உள்ளே அசிங்கமாக்கப்பட்டு நுழைவாயலில் உள்ளே செல்லமுடியாது தடைகளும் போடப்பட்டுள்ளது.
இப்போ எமது கேள்வி என்ன வென்றால் இப்பேருந்து நிலையத்தை நோக்கிவரும் பயணிகளுக்கு மலசல கூடத்தினை பாவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அவர்கள் எங்கே சென்று தங்களது தேவையினை பூர்த்தி செய்வார்கள்?
மனிதர்களும் மிருகங்களும் ஒன்றா?
பஸ் வண்டிகளிலே பணி புரிகின்ற நடத்துணர்கள் (விசேடமாக அரச பஸ்வண்டி) பயணிகளுக்காக பற்றுச் சீட்டினை கிழிக்கும்போது 38ரூபாய் பற்றுச் சீட்டின் பெறுமதி என்றால் 40ரூபாயினை வாங்கி விட்டு 2ரூபா பணத்தினை மீதம் கொடுப்பதற்கு பதிலாக சில்லறை இல்லை என்ற பதிலை மீதம் கொடுத்துவிட்டு நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாணியில் சொன்னால் 2ரூபாயினை ஆட்டய போட்டுவிடுவார்கள். ஒரு பயணிக்கு அது 2ரூபா ஆனால் அவருக்கு 20பயணிகளிடம் இருந்து 40ரூபா இதே போல் 10 நாளைக்கு அறவிட்டால் 400 ரூபா வருடத்திற்கு 4இலட்சம். இது ஒரு ஒரு அணு அளவிலான கணக்கறிக்கை உண்மையான கணக்கறிக்கை இதை விட பல மடங்கு அதிகம். இதற்கும் மூடிக்கிடக்கும் மலசல கூடத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்கின்றீர்களா?
இவ்வாறு பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து பங்கு போட்டு பிரித்தெடுத்துக்கொண்டு உல்லாசமாய் பணியாற்றிக் கொண்டிருக்கும் பேருந்துத் தரிப்பிட பொறுப்பு உத்தியோகத்தர்களே, பயணிகளுக்காக கட்டப்பட்டிருக்கும் இந்த பொது மலசல கூடத்திற்கு ஏன் இவ்வாறு விடுமுறை கொடுத்துள்ளீர்கள்? பாவனைக்குத் தடை விதித்துள்ளீர்கள்? அந்த மலசலகூடம் மூலமாகவும் உங்களுக்கு வருமானம் தேவைப்படுகின்றதா? இல்லை அரசியல் தலையீடா? மலசலகூடத்திறலகும அரசியலுக்கும் என்னங்க சம்மந்தம்? அரசியல் ஒரு சாக்கடை என்ற உவமானம் உண்டு இதன்படி தொடர்பிருக்கும் என்று நிறுவலாம்.
உழைத்து வாழ உடம்பில் சக்தியுள்ளவர்கள் பலர் பஸ் வண்டிகளிலே கையேந்தி யாகசம் கேட்கின்றனர். அவர்களில் அனேகமானோர் சுய தொழில் செய்வதற்கு மூலதனம் இல்லாமல் கையேந்துகின்றனர். அவர்களில் ஒருவரையோ இருவரையோ அழைத்து இந்த மலசல கூடத்தினை தினமும் சுத்தப்படுத்தி மலசலகூடத்தினை உபயோகிக்க வருவோரிடம் 5ரூபாயோ பத்து ரூபாயையோ பெறும்படியும் சேரும் பணத்தில்ஒரு பகுதியை கூடத்தை சுத்தம் செய்வதற்காகவும் பயன்படுத்த அறிவுரையை வழங்கி அதனை பஸ் தரிப்பு நிலைய பொறுப்பு அதகாரி தினமும் கண்காணிக்குமிடத்து இரு இன்னல்கள் நீங்கப் போகிறது ஒன்று என்னதான் தொழில் செய்தாவது உழைத்து வாழ வேண்டும் என்று தொழில் தேடுபவர்கள் ஒருவர் அல்லது இருவரின் வருமானத்திற்கும் வழி வகுக்கும், இந்த தொழிலுக்கெல்லாம் எவன் வரப்போறான் அப்படி என்று நீங்கள் எல்லாம் சினந்தால் அது மிகவும் தவறு, முயற்சி செய்து தேடிப்பாருங்கள் இரண்டு நாளைக்குள் இரண்டென்ன 40 நபர்கள் கிடைப்பர். சரி மற்றைய இன்னல் என்ன அதுதான் உங்களுக்கு விளங்குமே, பயணிகளுக்காக கட்டப்பட்டிருக்கும் பொதுமலச கூடம் பாவனைக்கு வரும் அதன் மூலம் பயணிகளாக வரும் பொதுமக்களின் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.
இன்னுமொரு கேள்வி உங்கள் மனதை உறுத்துமே! என்ன அது? மலசல கூடத்தை பயன்படுத்த வரும் பொதுமக்கள் காசு தருவார்களா? நடக்குற கதையா இது!!! ஏன் தலை நகருக்கு சென்று பார்த்த அனுபவம் இல்லையா? இன்னுமோர் உதாரணத்தை எடுத்துக்காட்டினால் மீதிப் பணத்தினை சில்லறை இல்லை என்ற பஸ் நடத்துணரின் சாக்கினால் மெருந் தன்மையோடு தங்களது 2, 5, 10 ஏன் ஒரு சிலர் 50 ரூபாய்க்களைக் கூட விட்டு விட்டு வருகின்றனர் அப்படிப்பட்ட பயணிகள் இந்த மலசல கூடத்தை பயன்படுத்துவதற்காகவும் பராமரிப்பதற்காகவும் தங்களது பணத்தை நிச்சயம் அள்ளி வீசுவார்கள். சாமி இடம் கொடுத்தாலும் ஐயர் இடம் கொடுப்பதில்லையாம் அவ்வாறு இருக்கின்றது இந்தக் கதை. அக்கரைப்பற்று பஸ் தரிப்பு நிலைய பொறுப்பு உத்தியோகத்தர்களே இது உங்கள் கண்களுக்கு தென்படவில்லையா?
தாங்கள் சமூகத் தொண்டன் என்றும் மக்களுக்காவே நாம் என்றும் ஆணித்தனமாய் அடித்துக் கூறும் அக்கரைப்பற்று அரசியல் வாதிகளே அக்கரைப்பற்றை நோக்கி வரும் பயணிகளுக்கு இதற்கான ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுங்கள் இல்லையேல் வெகு விரைவில் அக்கரைப்பற்று பஸ் நிலையம் சாக்கடையாய் மாறிவிடும்.
இது எங்கெங்கு பொதுமக்களுக்காக கட்டப்பட்டு விடுமுறை கொடுத்திருக்கும் அனைத்து மலசலகூடங்களுக்கும் சமர்ப்பணம். இது போன்ற சமூகத் தேடல் இன்னும் தொடரும். இதற்காக யாழ்முஸ்லிம் இணையத்தளமும் எங்களுக்கு உதவும் என்று நம்புகின்றோம்.

Post a Comment