இந்தோனேசியாவை உளவு பார்த்த அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும்..!
2007-ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலியில் ஐ.நா. சுற்றுச்சூழல் மாநாடு நடந்தபோது, அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் இந்தோனேசியாவை உளவு பார்த்தாக ஆஸ்திரேலிய நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் (என்.எஸ்.ஏ) முன்னாள் ஒப்பந்தப் பணியாளர் எட்வர்ட் ஸ்னோடென் வெளியிட்ட ரகசிய ஆவணங்களை மேற்கோள் காட்டி, "தி கார்டியன்' நாளிதழின் ஆஸ்திரேலியப் பதிப்பு, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆஸ்திரேலிய உளவு அமைப்பும், அமெரிக்காவின் என்.எஸ்.ஏ-வும் இணைந்து இந்தோனேசிய பாதுகாப்பு அதிகாரிகளின் தொலைபேசி எண்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டன.
இதன்மூலம் இந்தோனேசியாவின் தகவல் தொடர்பு கட்டமைப்பைத் தெரிந்துகொண்டு, அவசர காலங்களில் அதனை வேவு பார்ப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம்.
எனினும், இந்த முயற்சியில் இரு நாட்டு உளவு அமைப்புகளும் தோல்வியையே சந்தித்தன.
பாலி நகர காவல்துறை தலைவர் செல்போன் எண்ணை மட்டுமே அவற்றால் பெற முடிந்தது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, தலைநகர் ஜகார்தாவில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம், உளவு வேலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்தியால், கோபமடைந்த இந்தோனேசிய அரசு, அந்நாட்டுக்கான ஆஸ்திரேலியத் தூதர் கிரெக் மோரியார்டியை வெள்ளிக்கிழமை நேரில் அழைத்து விளக்கம் கேட்டது.
இந்தோனேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் மார்ட்டி நாடாலெகவா, ""உளவு பார்ப்பது, கிரிக்கெட் போல ஒரு விளையாட்டல்ல'' என்று ஆஸ்திரேலியாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஐ.நா. மாநாட்டைப் பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியால், ஆஸ்திரேலியா-இந்தோனேசியா இடையிலான உறவு மேலும் விரிசலடையும் சூழல் உருவாகியுள்ளது.
மலேசியா: இந்தோனேசியா மட்டுமின்றி, மலேசியா, சீனா, கம்போடியா, மியான்மர், தாய்லாந்து உள்பட பல நாடுகளிலுள்ள அமெரிக்க தூதரகங்களிலும் உளவு வேலைகள் நடைபெற்று வந்ததாக கடந்த வாரம் "சிட்னி மார்னிங் ஹெரால்டு' பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும், மலேசியாவிலுள்ள ஆஸ்திரேலியத் தூதரகமும் உளவு பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
இதையடுத்து, சனிக்கிழமை மலேசியாவுக்கான அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியத் தூதர்களை அந்நாட்டு அரசு நேரில் அழைத்து, தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்குமாறு அமெரிக்காவையும், ஆஸ்திரேலியாவையும் சீனா கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment