சவூதி அரேபியாவில் 2 இலங்கையர்கள் கைது
சட்டவிரோதமாக சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் சவூதி அரசாங்கம் இறங்கியுள்ளது.
சவூதி அரேபியாவின் பொது மன்னிப்புக் காலம் கடந்த 3ம்திகதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், அங்கு தங்கியிருந்த இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 1200 இலங்கையர்கள் சட்டவிரோதமாக சவூதி அரேபியாவில் தங்கியுள்ளதாக ஜெத்தா நகரில் உள்ள இலங்கை அலுவலகத்தின் தொழில் பிரிவின் செயலாளர் எம்.பி.எம்.சரூக் தெரிவித்தார்.
இவர்களில் 50 பேர் இலங்கை அலுவலகத்தின் முகாமில் தங்கியுள்ளதாகவும் அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பொது மன்னிப்பு காலத்தில் 10,000 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும் இன்னும் 6000 பேர் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கான முயற்சிகள் சவூதியில் உள்ள இலங்கை தூதுவராலயத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அவர்களை நாட்டுக்கு அழைப்பது தொடர்பில் பிரச்சினையாகவே உள்ளது என்றும், ஆயினும் இதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாரியம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment