கல்முனை ஸாஹிராவில் பிரதி கல்வி பணிப்பாளர் சுற்றி வளைப்பு - பொலிஸார் குவிப்பு
கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபர் ஒருவர் மீது கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் ஒருவர் கல்லூரியில் வைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கல்லூரி வளாகத்தில் தற்போது பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. அங்கு பொலிசார் விரைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கல்முனை ஸாஹிராக் கல்லூரிக்கு இன்று காலை விஜயம் செய்த கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் திட்டமிடலுக்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் ஒருவர் சில வகுப்புக்களுக்கு சென்று பரிசோதனை செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார் எனக் கூறப்படுகின்றது.
இதன்போது சில ஆசிரியர்கள் பிரதி கல்வி பணிப்பாளரிடம் தமது அதிருப்தியினை தெரிவித்து அவருக்கு எதிர்ப்பை காட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்தே பதில் கடமையில் இருந்த பிரதி அதிபர் ஏ.கபூர் மீது பிரதிக் கல்விப் பணிப்பாளர் தாக்குதல் நடத்தியுள்ளார் எனத் தெரிய வருகிறது.
இதனால் கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் பதற்றமான சூழ்நிலையொன்று தற்போது ஏற்பட்டிருக்கிறது.
பிரதி அதிபர் மீதான தாக்குதலை அடுத்து சிலர், பிரதி கல்வி பணிப்பாளரின் மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கி முற்றாக சேதப்படுத்தியுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
அத்துடன் கல்லூரி அதிபரின் காரியாலயத்தில் இருந்து பிரதி கல்வி பணிப்பாளர் வெளியேறிச் செல்ல முடியாதவாறு மாணவர்கள் திரண்டு சுற்றி வளைத்துள்ளனர். அத்துடன் மாணவர்கள் கோஷங்களையும் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த கல்முனை வலய கல்வி காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் கல்முனை பொலிஸார் அங்கு சுமூக நிலையை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் இச்செய்தி எழுதப்படும் வரை பிரதி கல்வி பணிப்பாளரை கல்லூரியில் இருந்து பாதுகாப்பாக வெளியில் கொண்டு செல்ல முடியாத நிலையில் பொலிசார் அங்கு குவிந்து காணப்படுகின்றனர்.
நிலைமையை சுமுகமான நிலைக்குக் கொண்டுவருவதற்காக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் கல்லூரி அதிபர் ஆசிரியர்களுக்கான கூட்டம் ஒன்றையும் கல்லூரியில் உடனடியாக நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் இச் செய்தி எழுதும் போது செய்து கொண்டிருந்தார்.
.jpg)
Post a Comment