Header Ads



மடவளை அல்முனவ்வரா மாணவர்களுக்கு கௌரவம் (படங்கள்)

மதீனியன் மாஸ்டர்ஸ் அமைப்பு ஒழுங்கு செய்த மடவளை அல்முனவ்வரா ஆரம்பப் பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் மத்திய மாகாண சபை அங்கத்தவர்களான ஜெய்னுல் ஆப்தீன் லாபிர் ஹாஜியார், வேலு குமார் ஆகிய இருவரும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

மதீனா மத்திய கல்லூரி அஷ்ரப் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற இவ்வைபவத்தில் பெருந்தொகையான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அங்கு உரையாற்றி அல் முனவ்வரா அதிபர் ஜே.பவுஸூர் ரஹ்மான் தெரிவித்ததாவது,

ஒவ்வொருவரது வெற்றியிலும் பின்னால் ஒரு உந்து சக்தி இருக்கும். அந்த அடிப்படையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த இம் மாணவர்களது எதிர்கால வெற்றியின் உந்து சக்தியாக இவ்வாறான பாராட்டு வைபவங்கள் அமைய வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

பிரதம அதிதியான மாகாண சபை அங்கத்தவர் லாபிர் ஹாஜியார் தெரிவித்ததாவது-

இன்று கல்வி இன ரீதியாகக் கூறுபோடப்பட்டு வருகிறது.பேரினவாத சமூகங்களால் முஸ்லிம்கள் நசுக்கப் படுவதாகவும் விசேடமாக சிங்கள மொழிப்பாடசாலையில் கல்வி பயிலும் முஸ்லிம்கள் பாதிக்கப் பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக தான் மாகாண சபைக் கூட்டத்தில் முறையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

தான் ஒரு நண்பரது வீட்டிற்குச் சென்ற சமயம் அங்கு மூன்றாம் தரத்தில் கல்வி பயிலும் ஒரு சிறுமி கூறிய கதையை உதாரணமாக எத்துக் காட்டினார். அதாவது- 'நீங்கள் உங்கள் பாடசாலை ஒன்றிற்கே மாறி விடுங்கள். இங்கு கல்வி கற்க வேண்டாம்' என ஒரு ஆசிரியை கூறியதாக அவர் தெரிவித்தார்.

கல்வி என்பது ஒரு எல்லை வரை உள்ளதல்ல. அது தொடர்ந்து செல்ல வேண்டும். பெற்றோர்களது ஆர்வம் ஐந்தாம் தரத்துடன் நின்று விடக் கூடாது. ஆசிரியர்களைவ விட பெற்றோர்களே தமது பின்னைகள் பற்றிய விடயங்களில் கூடுதல் தேடுதலை மேற் கொள்ள வேண்டும்.

இன்று பிள்ளைகளின் கல்விக்காக பணம் செலவிட கடினமான ஒரு காலமான போதும் கல்வி என்பது மிக முக்கிய அம்சமாகும். இன்று மிக வேகமாக மாறி வருவது மட்டுமல்லாது அவசியமானதாகவும் உள்ளது. எனவே கல்விக் கண்ணை திறந்து விட அனைவரும் முயற்சிக்க வேண்டும். அது புன்னிய காரியமாகும் என்றார்.

இங்கு உரையாற்றிய மாகாண சபை அங்கத்தவர் வீ.குமார் தெரிவித்ததாவது-

மாணவர்களுக்கும் தம் பிள்ளைகளுக்கும் வழங்கக் கூடிய ஒரு மந்திர வார்த்தையாக இருப்பது 'உன்னாலும் முடியும்'; என்ற வார்த்தையாகும். எனவே எப்பொழுதும் உன்னால் முடியும் என்ற வார்த்தையை உச்சரிக்க வேண்டும். உன்னால் கற்க முடியும். உன்னால் சித்தியடைய முடியும். உன்னால் டாக்டராக முடியும். உன்னால் வாழ்க்கையில் உயர முடியும்... போன்ற வார்த்தைகளாக அவை அமைய வேண்டும் என்றார்.

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை ஒரு சாதாரண பரீட்சை அல்ல. சில மாவட்டங்களில் வெட்டுப் புள்ளி 160 ஆக உள்ளது. அப்படியாயின் சராசரி ஒரு பாடத்தில் 80 புள்ளி எடுக்க வேண்டும். இது 10 வயது சிறுவன் ஒருவனுக்கு சாதாரண விடயமாக இருக்காது. ஆனால் இங்கு 188, 190 புள்ளிகளை எடுத்துள்ளார்கள் என்றால் சராசரி 95 புள்ளி. ஆப்படியாயின் ஆசிரியர்கள் எவ்வளவு கச்சிதமாகத் திட்டமிட்டு வழிகாட்டி உள்ளார்கள் என்பது தெளிவாகிறது என்றார்.

இன்று எம்மீது சில அத்து மீறல்கள் திணிக்கப் படுகின்றன. இவ்வாறு திணிக்கப்படு; அத்து மீறல்களை வெற்றி கொள்வதற்கு கல்வியால் மட்டுமே முடியும். எனவே எதிர் காலத்தில் மத்திய மாகாண சபையில் நானும் லாபிர் ஹாஜியாரும் கல்விக்காக குரல் கொடுப்போம் என்றார். புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 17 மாணவர்களும் அவர்ளுக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்களும், இவ்வைபவத்தில் அதிதகளால் கௌரவிக்கப்பட்டனர்.

No comments

Powered by Blogger.