Header Ads



பிரதமரின் மகன் ஏமாற்றம், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, வடமேலுக்கு தயாசிறி

(Sfm) வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்பில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா சுதந்திரகட்சி தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் நாளைய தினம் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமானம் செய்துக் கொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதற்கிடையில் வடமேல் மாகாணத்தின் முதலமைச்சராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்படுவார் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 21ம் திகதி நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் தயாசிறி ஜெயசேகர 3 லட்சத்து 36 ஆயிரத்து 327 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது மாகாண சபை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதி கூடிய விருப்பு வாக்கு எண்ணிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க இந்த சாதனை படைத்திருந்தார்.

அவர் 1993 ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 457 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இதேவேளை மத்திய மாகாணத்துக்கான முதலமைச்சராக முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவே மீண்டும் நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

எனினும் கடந்த வாரம் பிரதமர் டி.எம்.ஜயரத்ன விடுத்திருந்த அறிக்கை ஒன்றில், மாகாணசபை தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற வேட்பாளரே மாகாண முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற கட்சியின் தீர்மானத்தில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய மாகாண சபை தேர்தலில் பிரதமரின் புதல்வரான அனுராத ஜயரத்னவே அதிக விருப்பு வாக்குகளை பெற்றவராவார்.

No comments

Powered by Blogger.