Header Ads



அரசாங்கத்தின் சூழ்ச்சிகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் - முஜிபுர் ரஹ்மான்

(vi) பிரபாகரனிடம் இருந்து நிலத்தைக் கைப்பற்றி அரசாங்கம் இன்று சர்வதேசத்திற்கு அதனை விற்று வருகின்றது. இலங்கையை இன்று சீனாவும் இந்தியாவுமே பங்கு போடுகின்றன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பு நகரில் கோடீஸ்வரர்களும் வெளிநாட்டு சூதாட்டக்காரர்களுமே வாழ முடியும். அப்பாவி மக்களுக்கு இங்கு இடமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இராஜகிரியவில் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளிடமிருந்து நிலத்தை மீட்ட அரசாங்கம், இன்று எமது நாட்டின் நிலப் பரப்பினையும் வளங்களையும் குத்தகைக்கு விற்று வருகின்றது.

அரசாங்கத்தின் பண ஆசையில் அப்பாவி மக்களின் நிலங்களும் சூறையாடப்பட்டு விற்கப்படுகின்றன.

வடக்கு, கிழக்கில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அப்பாவி மக்களிடமிருந்து கொள்ளையடித்து வரும் அரசாங்கம் இன்று கொழும்பு வாழ் மக்களின் நிலங்களிலும் கை வைக்க ஆரம்பித்துவிட்டது.

கசினோ சூதாட்டத்திற்காகவும் ஏனைய உல்லாச செயற்பாடுகளுக்காகவும் அப்பாவி மக்களின் நிலங்களை சூறையாடி உல்லா விடுதிகளையும் கசினோ மையங்களையும் நிர்மாணித்து வருகின்றனர்.

கொழும்பில் பல பிரதேசங்களை இன்று பாகிஸ்தான், சீனா, இந்தியா போன்ற நாடுகள் விலை கொடுத்து வாங்கிவிட்டன. அவர்களின் சுய தேவைகளுக்காக எமது நாட்டில் அரசாங்கமே இடம் ஒதுக்கிக் கொடுக்கின்றது.

மேலும், வெளிநாட்டுக்காரர்களின் வருகையினை அதிகரிப்பதற்காக கசினோ போன்ற சூதாட்டங்களையும் ஏனைய கலாசார சீரழிவினை ஏற்படுத்தும் சூதாட்ட முறைமைகளையும் இலங்கையில் கொண்டு வருவதனால் இலங்கைக்கு எந்தவொரு பயனும் இல்லை. 
நாட்டினை அபிவிருத்தியடையச் செய்வதாக அரசாங்கம் கூறிக்கொண்டு சர்வதேசங்களிடமிருந்து கடன்களை வாங்குவது மட்டுமின்றி எமது மக்களின் பணத்தையும் கொள்ளையடிக்கின்றது.

எனவே, அரசாங்கத்தின் சூழ்ச்சிகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எமக்கான உரிமைகளுக்காக நாம் போராட வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.