விஞ்ஞானம் வளரும்போது மனித பண்பாடுகள் வீழ்ச்சியடைகிறது - கலாநிதி மவ்ஜூத்
தற்காலத்தில் விஞ்ஞான கண்டுபிடுப்புக்கள் வளரும் போது மனித பண்பாடுகள் வீழ்ச்சியடைந்து வருவதாக சட்டத்தரணியும் கொழும்பு பல்கலைக்கழக சுதேச வைத்தியபீட சிரேஷ்ட விரிவுரையாளரும் கலாநிதியுமான டாக்டர் ஏ.எச்.எம். மவ்ஜூத் தெரிவித்தார்.
(15.10.2013) மடவளை மதீனா மத்திய கல்லூரி பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதயாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தர். இக்கல்லூரியின் பழைய மாணவனரான அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஒருவர் ஏதேனும் ஒரு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வது மகிழ்ச்சிகரமான விடயமான போதும் ஒரு பழைய மாணவன் தான் கல்வி கற்றி பாடசாலையில் இடம் பெறும் ஒரு வைபவத்திற்கு பிரதம அதிதியாக அழைக்கப்படுவது என்பது அதை விடப் பன் மடங்கு மகிழ்ச்சியான விடயமாகும். எனக்கு இது மிக மகிழ்ச்சியான விடயம்.
ஒரு பாடசாலையில் இருவகை வளர்ச்சிகளை நாம் காணமுடியும். அதில் ஒன்று பௌதீக வளர்ச்சி. இன்று பௌதீக வளங்களும் வசதிகளும அதிகரித்த ஒரு நிலையைக் காண்கிறோம். அதே நேரம் மாணவர்களிடம் ஒழுக்கம் பண்பாட்டு விழுமியங்கள் போன்றன வற்றின் வளர்ச்சியில் தேக்க நிலையைக் காண்கிறோம். விஞ்ஞானம் வளரும் போது மனித விழுமியங்களும் வளர வேண்டும்.
பாடசாலைகள் சாதாரண ஒரு மாணவனை உள்வாங்கி குறிப்பிட்ட காலத்தில் அவனை சமூகத்திற்கு மீள ஒப்படைக்கிறது. அப்படி ஒப்படைக்கும் போது அவன் ஆளுமைப் பண்புகளைப் பெற்ற ஒருவனாக சமூகத்திற்கு அவன் மீள வழங்க வேண்டும். இன்று சாதாரணமாக ஆசானை மதிக்காத ஒரு மாணவ சமுதாயத்தையே அதிகம் காண்கிறோம். இது வரலாற்று ரீதியாக எமக்கேட்பட்டுள்ள ஒரு அச்சுறுத்தலாம்.
பாடவிதானத்திற்கு வெளியே உள்ள விடயங்களான புறக்கிருத்தியங்களுக்கும் நாம் குறிப்பிட அளவு காலம் ஒதுக்கி மாணவர்களது ஆளுமைப் பண்புகளை வளர்க்க வேண்டும். பாடசாலையில் இடம் பெறும் பரிசளிப்பு வைபவங்கள் மூலம் பரிசு பெற்ற மாணவர்கள் ஊக்கமடைவது மட்டுமல்ல, பரிசு பெறாத மாணவர்களும் தூண்டப் படுகின்றனர். மாணவர்களுக்கு மத்தியில் பல்வேறு திறன்கள் மறைந்து காணப் படுகின்றன. அவற்றைப் பாடசாலைகள் வெளிக் கொணறவேண்டும். அப்படியான விடயங்களுக்கும் இப்படியான நிகழ்வுகள் ஒரு அடித்தாளமாக உள்ளது.
நடந்து முடிந்த ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் 70 சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்ததாகக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் 70 சதவீதமானவர்களும் புலமைப் பரிசிலுக்குத் தெரிவாக வில்லை. காரணம் சித்தி என்பது வேறு. ஏதிர்பார்க்கும் அடைவு மட்டம் என்பது வேறு. இப்போது நடந்த பரிசளிப்பிலும் நாம் அதனைக் கண்டோம். சில துறைகளுக்கு பரிசில்கள் வழங்கப் படவில்லை. எனவே சித்தி என்பது மட்டுமல்ல எதிர் பார்க்கும் அடைவு மட்டமும் முக்கிய மாகும். நாம் எப்போதும் குறிப்பிட்ட ஒரு அடைவு மட்டத்தையும் குறிப்பிட்ட ஒரு இலக்கையும் வைத்து எமது செயற்பாடுகளை முன் எடுத்து வெற்றி பெற வேண்டும்.
விவசாயி காலம் பார்த்துப் பயிர் செய்வான்.அதுபோல் மாணவர்களும் காலத்தைக் கணித்து கல்வி பயில வேண்டும். அதாவது எக்காலத்திற்கு எது பொருத்தமோ அதனை அக்கால்த்தில் பயில்வது மட்டுமல்ல அதனை மேலும் விருத்தியாக்கவேண்டும். ஒரு விவசாயி தனது பயிர்ச் செய்கை நிலத்தில் நல்ல விளைச்சல் கிடைக்கும் போது விவசாயி அதனை மேலும் விரிவாக்குவது போல் நாமும் எமது கல்வியை விரிவாக்க வேண்டும்.
கல்விக்கு தேடல் முக்கியம். இன்று நவீன உலகில் தேடலுக்கு இணையம் உற்பட பல்வேறு வாய்ப்பு வசதிகளும் உண்டு. அன்னப் பறவை பாலையும் நீரையும் பிரிர்ததறிவது போல் நாமும் நல்லதையும் தீயதையும் பிரித்து அறிந்து நல்லதை மட்டுமே பற்றிக் கொள்ள வேண்டும்.
மாடு ஒன்று காலை முதல் மாலைவரை தனக்குத் தேவையான அனைத்து உணவுகளையும் தேடிக் கொள்ளும். ஆனால் ஓய்வான போது அதனை அசை போட்டுச் சாப்பிடும். இதன் காரணமாக மாட்டிற்கு நல்ல சமிபாடு ஏற்படுவதுடன் உணவை ஆருதலாக மென்று பயன் அடைகிறது. இதேபோல் நாமும் அவ்வப்போது எமக்குக் கிடைக்கும் நல்ல வற்றைத் தேடிக் கொண்டு பின்னர் நேரம் ஒதுக்கி மாடு அசை போடுவது போல நாமும் அதனை மீட்டி பயன் அடைய வேண்டும்.
மாணவர்கள் தேவையற்ற விடயங்களில் கவனம் செலுத்துவதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். தமக்குத் தேவையானவற்றையே இலக்காகக் கொள்ள வேண்டும். அத்துடன் ஆசான்களை மதித்து நடக்க வேண்டும். ஆசானை மதிக்காதவன் ஒரு கற்றவனாக இருக்க முடியாது. பாடசாலைச் சமூகம் பழைய மாணவர்களையும் மதித் அரவனைத்து பாடசாலையின் மேம்பாட்டிற்கு வழிகோலவேண்டும். நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி என்ற பாடலைக்கு ஏற்ப நாடு எதிர் பார்க்கும்நற்பிரஜைகளை உருவாக்க யாவரும் பாடுபடவேண்டும் என்றார்.

Post a Comment