பிரிட்டனில் இஸ்லாமிய பாடசாலையான அல் மதினா திடீரென மூடப்பட்டது
கடுமையான இஸ்லாமிய பழக்கவழக்கங்களை ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் மீது திணித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரிட்டனில் இருக்கும் இலவச இஸ்லாமிய பாடசாலையான அல் மதினா திடீரென மூடப்பட்டுள்ளது.
இந்த பாடசாலையில் பணிபுரிந்த முஸ்லிம் அல்லாத ஆசிரியைகள் உட்பட அனைவரும் ஹிஜாப் மூலம் தங்களின் தலையை மூடிக்கொண்டிருக்க வேண்டும் என்று பலவந்தப்படுத்தப்பட்டார்கள் என்றும், மாணவிகள் வகுப்பறையின் இறுதி வரிசைகளில் உட்கார வைக்கப்பட்டார்கள் என்றும் இங்கே பணிபுரிந்த முன்னாள் பணியாளர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இந்த குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் அரசின் கல்வி நிலைய கண்காணிப்பாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த பாடசாலையில் பரிசோதனை நடத்தியதைத் தொடர்ந்து திடீரென இந்த பாடசாலை மூடப்பட்டிருக்கிறது.
டெர்பியில் இருக்கும் இந்த பாடசாலையின் நிர்வாகம் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்படுவதாக அறிவித்திருக்கிறது. இந்த பாடசாலையை விரைவில் திறக்கவிருப்பதாகவும் பாடசாலையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாடசாலையில் பரிசோதனை செய்த பிரிட்டிஷ் பாடசாலைகளை கண்காணிக்கும் ஆப்ஸ்டெட் அமைப்பு, தற்போதைய தமது கண்காணிப்பில் கண்டறியப்பட்ட விடயங்கள் குறித்த விபரங்களை, இது தொடர்பான தமது பணிகள் நிறைவடையும் வரை வெளியிட முடியாது என்று தெரிவித்திருக்கிறது.
அதேசமயம் தமது கண்காணிப்பில் கண்டறிந்த விபரங்களை பாடசாலையின் தலைமை ஆசிரியரிடம் தாம் பகிர்ந்து கொண்டதாகவும் ஆப்ஸ்டெட் அமைப்பு கூறியிருக்கிறது. இந்த பாடசாலையில் ஆப்ஸ்டெட் அமைப்பு செய்யவிருக்கும் இரண்டாம் கட்ட ஆய்வுக்கான நாள் குறித்து இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

Post a Comment