பொருளாதார நெருக்கடி - ரத்து செய்யப்பட்ட அமெரிக்க அதிபரின் ஆசிய பயணம்
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று முதல் ஒரு வாரத்திற்கு மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் புரூனே ஆகிய நான்கு நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாக இருந்தார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக அமெரிக்காவில் நேற்றுமுதல் அரசுத்துறை ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகின்றது. இரண்டாவது நாளாக தொடரும் இந்த அரசுப் பணி நிறுத்தம் காரணமாக ஒபாமா தனது ஆசிய பயணத்தை ரத்து செய்துள்ளார். மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அவரது வருகை ரத்து செய்யப்பட்டது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா மற்றும் புரூனே நாடுகளில் நடைபெற உள்ள உச்சி மாநாடுகளில் கலந்துகொள்வது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்த வார நிகழ்வுகளைப் பொறுத்து அதிபரின் நிகழ்ச்சிகள் முடிவு செய்யப்படும் என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கெய்ட்லின் ஹைடன் தெரிவித்துள்ளார். ஒபாமாவின் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்களிடையே அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கடன் தொடர்பாக எழும் வாக்குவாதங்கள் தினசரி செலவிடப்படும் நிதிநிர்வாகத்தையும் பாதிப்பதாக உள்ளது.
இந்த நிலைமை கடந்த 17 வருடங்களில் இல்லாத அளவிற்கு அரசுப் பணி நிறுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பல்லாயிரக்கணக்கான கூட்டாட்சி ஊழியர்கள் ஊதியமில்லாத விடுப்பினை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்

Post a Comment