Header Ads



மியன்மாரில் வன்முறை உச்சம் - காடுகளில் முஸ்லிம்கள் தஞ்சம், 5 பேர் வபாத்

(tn) மேற்கு மியன்மாரில் மீண்டும் ஏற்பட்ட மதக் கலவரத்தை தொடர்ந்து பதற்றம் நிலவும் கிராமத்தின் பெண்கள், குழந்தைகள் என பலரும் பாதுகாப்பிற்காக காடுகளில் தலைமறைவாகியுள்ளதோடு பாதுகாப்பு படையினர் கிராமங்களில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வன்முறையில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் மியன்மார் மதக் கலவரம் ஆரம்பமான ரகின் மாநிலத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் மியன்மார் ஜனாதிபதி தையின் சைன் புதிதாக வன்முறை இடம்பெற்ற பகுதிகளை பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக ஏற்பட்டுள்ள வன்முறை குறித்து அவதானம் செலுத்திவருவதாக குறிப்பிட்டிருக்கும் அமெரிக்கா, நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்துள்ளது.

தன்ட்வே பகுதியில் சுமார் 800 கலகக்காரர்கள் புகுந்து உள்ளூர் கிராம முஸ்லிம்களின் சொத்துக்களை தீக்கிரையாக்கினர். “இந்த வன்முறையில் நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 5 பேர் பலியாகினர்” என்று ரகின் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார். இதில் 94 வயது முஸ்லிம் பெண் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை கலவரம் ஆரம்பமானது தொடக்கம் ஒரு பள்ளிவாசல் மற்றும் 59 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸார் வானை நோக்கி எச்சரிக்கை வேட்டுகளை செலுத்தியபோது கலகக்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்று உள்ளூர் முஸ்லிம் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பிக்கு கூறினார். “எமது அரசினால் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத நிலையில் “நாம் பெரும் அதிருப்தியில் இருக்கிறோம்” என்று மியின்ட் அவுன் என்ற அதிகாரி குறிப்பிட்டார். “நாம் பயத்துடனேயே வாழ்கிறோம். பெண்கள், குழந்தைகள் என பலரும் அருகிலிருக்கும் காடுகளில் ஒளிந்திருக் கிறார்கள்” என்றும் அவர் கூறினார்.

இரண்டு நாள் விஜயமாக ரகின் மாநிலத்திற்கு சென்றிருக்கும் ஜனாதிபதி தைன் சைன், பெளத்த மற்றும் ரொஹிங்கியா முஸ்லிம் சமூக உறுப்பினர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். மியன்மாரின் பிரதான முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை வன்முறையை தவிர்க்க அரசு உடன் நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அழுத்தம் கொடுத்தனர்.

“நாட்டின் சிறுபான்மை முஸ்லிம்கள், தம்மீது வன்முறைகள் உச்ச கட்டத்தை எட்டி இருப்பதாக கருதுகின்றனர். தமக்கு பாதுகாப்பு இல்லை என அவர்கள் உணர்கிறார்கள்” என்று மேற்படி கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2 comments:

  1. வஃபாத் மொஉத் என்ட்ரு இது போன்ட்ர மரனங்களை சொல்ல வேன்டாம் ஷஹீத் என்ரு குரிப்பிடவும் அல்லது பலி படுகொலை என்ரும் சொல்லலாம்

    ReplyDelete
  2. பலி என்பதை விட படுகொலை என்பதே சரியான patham

    ReplyDelete

Powered by Blogger.