Header Ads



கடனை வட்டியின்றி மீளச் செலுத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரிக்கை

(எம்.எம்.ஏ.ஸமட்)

கடனை வட்டியின்றி மீளச் செலுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஊடகவியலாளர்களுக்கு வழங்குமாறு ஊடக அமைச்சிடம் கொழும்பு ஊடகவியலாளர் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

இது குறித்து கொழும்பு ஊடகவியலாளர் சங்கம் ஊடக அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஊடகவியலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஊடகப் பணியினைப் புரிந்து வருகின்றனர். பொருளாதார ரீதியில் உற்றுநோக்குகையில், பெரும்பாலான ஊடகவியலாளர்கள் கீழ் மட்டத்திலேயே உள்ளனர். 

இருப்பினும், நாட்டினதும் மக்களினதும் நலன்களில் அக்கறை கொண்டு; பெரும் சவால்களுக்கு மத்தியில் ஊடக சேவை புரியும் ஊடகவியலாளர்களின் தொழில்வாண்மையை விருத்தி செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாரட்டுக்குரியவை.  இந்தவகையில், மகிந்த சிந்தனையின் கீழ் வருடா வருடம்  ஊடகவியலாளர்கள் ஊடக உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு ஊடக அமைச்சினால் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், இக்கடன் தொகையானது வட்டியுடனேயே மீளச் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பெற்ற கடனை வட்டியுடன் மீளச் செலுத்துவது என்பது பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளாகியுள்ள பெரும்பாலான ஊடகவியலாளர்களினால் முடியாத விடயமாகவுள்ளதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

இவற்றைக் கருத்திற்கொண்டு ஊடக அமைச்சினால் வழங்கப்படும் கடன் தொகையை வட்டியின்றிச் செலுத்துவதற்கான வாய்ப்பை ஊடகவியலாளர்களுக்கு வழங்குமாறு கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கம் ஊடக அமைச்சு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஊடகவியலாளர்களின் ஊடகச் சேவைக்கு உதவிக் கரம் நீண்டும் பொருட்டு, மகிந்த சிந்தனை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இவ்வாண்டிலும் ஊடகவியலாளர் மோட்டார் சைக்கில், கனணி, கமொரா, பெக்ஸ் இயந்திரம் மற்றும் இலத்திரனியல் ஒலிப்பதிவுக் கருவி என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்கு கடன் வழங்குவதற்கான விண்ணபத்தினை ஊடகவியலாளர்களிடமிருந்து ஊடக அமைச்சு கோரியுள்னளது. 
உச்சத் தொகை ஒரு இலட்சமாகவும் குறைந்த தொகையாக 15 ஆயிரமாகவும் இக்கடன்தொகையை முறையே மூன்று மற்றும் ஓராண்டுகளில் மீளச் செலுத்தும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தகைமையுள்ள ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
விண்ணப்பிக்கும் ஊடகவியலாளர்கள் அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களாகவும் 18 வயதுக்கும் 55 வயதுக்குமிடைப்பட்டவராகவும், தகவல் ஊடகத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்வர்களாகவும் இருத்தல் வேண்டும். அத்துடன், ஊடக நிறுவனத்தில் 3 வருடங்கள் சேவை செய்திருப்பதுடன் வருடமொன்று ஒரு இலட்சத்து 44 ஆயிரத்தை திரட்டி சம்பளமாகப் பெறுபவர்களாகவும் இருத்தல் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பிராந்திய ஊடகவியலாளர்களாக இருப்பின் அவர்களும் 3 வருட சேவையை புர்த்தி செய்திருப்பது அவசியமென குறிப்பிடப்பட்டுள்ளது. 
எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அபிவிருத்தி மற்றும் திட்டமிடலுக்கான மேலதிக செயலாளர், 163, கிரிலபோன் மாவத்தை பொல்கென்கொட, கொழும்பு 5 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு ஊடக அமைச்சின் செயலாளர் மேலும் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.