இங்கிலாந்தில் முதல்முறையாக ஹலால் உணவுத் திருவிழா
இங்கிலாந்தில் முதல்முறையாக ஹலால் உணவுத் திருவிழா ஒன்று சென்ற வாரக் கடைசியில் அரங்கேறியது.
"ஹலால் ஃபுட் ஃபெஸ்டிவெல் 2013" என்ற பெயரில் நடக்கும் உணவுத் திருவிழாவின் இயக்குநர்களில் ஒருவரான நோமன் கவாஜா இந்த திருவிழாவின் நோக்கம் பற்றி பிபிசி தமிழோசையிடம் விளக்கினார்.
"நீங்கள் ஒரு முஸ்லிம் அதனால் உங்களுக்கு ஃபெர்ராரி சொகுசுக் கார் ஓட்டும் உரிமை இல்லை என்று சொன்னால் எப்படியிருக்குமோ அதுபோலத்தான் நீங்கள் ஒரு முஸ்லிம் அதனால் நீங்கள் மிஷலின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உணவு விடுதிகளில் சாப்பிட முடியாது என்று சொல்வதும் இருக்கிறது. முஸ்லிம்களுக்கும் அதுமாதிரியான இடங்களில் சென்று சாப்பிட உரிமை இருக்கிறது. அவர்களுக்கென சில ஹலால் உணவுகளையும் அவ்விடுதிகள் பரிமாறுவது அவசியம்," என அவர் வாதிட்டார்.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் மொத்தம் கிட்டத்தட்ட முப்பது லட்சம் முஸ்லிம்கள் வாழுகின்றனர்.
நல்ல வேலையில் உள்ளவர்களாகவும், நல்ல வருவாய் ஈட்டுபவர்களாகவும் பிரிட்டனின் இரண்டாம் தலைமுறை முஸ்லிம்கள் குடியேறிகள் பலர் உருவாகியிருக்கின்றனர்.
பிரிட்டனின் முஸ்லிம் மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்துவருகின்ற சூழலில் அவர்களுக்குரிய உணவுகளை தயாரித்து வழங்குவதில் வியாபார நலன் இருப்பதை பிரிட்டிஷ் உணவு நிறுவனங்களும், மேட்டுக்குடி மக்களுக்கான உணவு விடுதிகளும் உணர்ந்துள்ளன என்பதை பறைசாற்றுவதாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
Post a Comment