Header Ads



தேர்தல் முறைமை மீளாய்வு செய்யப்பட வேண்டும் - பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா

இன்று வழக்கில் உள்ள விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையானது, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டதாகும். இது, சிறுபான்மையினப் பிரதிநிதித்துவத்துக்குப் பாதுகாப்பான ஒரு தேர்தல் முறையாகக் கருதப்பட்ட போதிலும், அண்மைக் காலமாக நடந்து முடிந்த தேர்தல்கள் இக்கருத்தைப் பொய்ப்பித்து வருகின்றன. எனவே,இவ்விகிதாசார பிரதிநிதித்துவத் தேர்தல் முறை மீளாய்வு செய்யப்பட வேண்டும் என பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

தேசிய மக்கள் இணைவாக்க ஐக்கிய மன்றம்-UCNC; நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் பிரதிநித்துவங்களைப் பாரியளவில் இழந்தமைக்கான காரணங்கள் பற்றி ஆராயும் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தமதுரையில், சிங்கள மக்கள் இன்று கட்சி பேதங்களை மறந்து அரசாங்கத்துடன் ஐக்கியப்பட்டு வருகின்றனர். சிங்கள மக்களிடம் இனவாதம் செல்வாக்குப் பெறவில்லை என்பதை அவ் இனத்தைப் பிரதிபலிக்கும் கட்சிகளின் தோல்வியிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் பிரதிநித்துவம் கணிசமான அளவு குறைந்துள்ளது. ஆளும் தரப்பில் மத்திய, வடமேல் மாகாண சபைகளுக்குப் போட்டியிட்ட எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் வெற்றி பெறவில்லை. கண்டி மாவட்டத்தில் 138000 வாக்குகளையும், குருநாகலை மாவட்டத்தில் 80000 வாக்குகளையும் கொண்டுள்ள முஸ்லிம் வாக்காளர்களில் இருந்து குறைந்தது கண்டியில் 5 பேரும், குருநாகலில் 3 பேரும் வெற்றி பெற வேண்டும். ஆனால், ஐ.தே.கவில் போட்டியிட்ட இருவர் மட்டும் கண்டியில் வெற்றி பெற்றனர். இதிலிருந்து விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு தற்போதைய அரசியல் பின்னணியில் முற்றிலும் பிழைத்துப் போயுள்ளது. ஆனால், கடந்த தேர்தலை ஒப்பீடு செய்து பார்க்கின்ற போது, கணிசமான முஸ்லிம் வாக்குகள் ஆளும் தரப்புக்கு கிடைத்திருக்கின்றது.

வட மாகாணத் தேர்தல் முடிவுகளின்படி 65% முஸ்லிம் வாக்குகள் ஆளும் தரப்புக்கும், 28% முஸ்லிம் வாக்குகள் மு.கா வுக்கும், 5% முஸ்லிம் வாக்குகள் தமிழர் விடுதலைக் கூட்டமைப்புக்கும் கிடைத்திருக்கின்றது. அதேவேளை, 2% முஸ்லிம் வாக்காளர்கள் மட்டுமே ஐ.தே.க வுக்கு வாக்களித்திருக்கின்றனர். எனவே, ஒட்டுமொத்தமாக வடக்கு முஸ்லிம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் ஐ.தே.க வை நிராகரித்திருக்கின்றனர்.

வாட மேல் மாகாண சபையை எடுத்து நோக்குகின்ற போதும், இதே போன்ற நிலையே காணப்படுகின்றது. புத்தளத்தில் ஆளும் தரப்பு வேட்பாளர் 16000 வாக்குகளைப் பெறுகின்ற போது, ஐ.தே.க வேட்பாளர் 9500 வாக்குகளை மட்டுமே பெறுகின்றார். அதே நேரம், மு.கா. மொத்தமாக 10700 வாக்குகளைத் தேர்தலில் பெற்றுக் கொள்கின்றது. குருநாகலையில் ஆளும்தரப்பு வேட்பாளர் 12000 வாக்குகளையும், அரசுடன் இணைந்திருக்கும் மு.கா. 17000 வாக்குகளையும் பெறுகின்ற போது, ஐதே.க. 12000 வாக்குகளை மட்டுமே பெறுகின்றது.

கண்டி மாவட்டத்தில் நிலைமை சற்று வித்தியாசமாக உள்ளது. ஐ.தே.க வில் 7 பேர் போட்டியிட்டு, இருவர் அதிக விருப்பு வாக்குகளுடன் 1 ஆம், 2 ஆம், இடங்களைப் பெற, ஏனைய 5 வேட்பாளர்களும் வெளியேற்றப் படுகின்றனர். ஆனால் அங்கு, ஆளும் தரப்பு வேட்பாளர் ஒருவர் 16000 பெற்றுக் கொள்கின்ற போது, மு.கா. 11000 வாக்குகளைப் பெற்று எச்சத்தில் ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்கின்றது.

இதிலிருந்து, தற்போது இந்த விகிதாசாரப் பிரதிநித்துவத் தேர்தல் முறை முஸ்லிம் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள நம்பத்தகுந்த ஒரு முறையாக தற்போது இல்லாமல் போயிருக்கின்றது. எனவே, இந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் மாற்றங்கள் அவசியம் என்பது தற்போது உணரப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலின் போது, உள்நாட்டில் முடக்கப்பட்டுள்ள இலத்திரனியல் ஊடகமான 'ஜப்னா முஸ்லிம்' சமூக இணையத்தளம் தடை நீக்கம் செய்யப்பட வேண்டிய அவசியத்தையும், நியாயங்களையும் வலியுறுத்தி, ஆவன செய்யுமாறு பிரதியமைச்சரிடம் UCNC அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.