புலிகளுக்கு கல்லறைகளை அமைக்க யாரும் முயற்சித்தால் கைது செய்யப்படுவார்கள் - கோத்தபாய ராஜபக்ச
போரின் போது மரணமான விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் கல்லறைகளை அமைக்க யாரும் முயற்சித்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
யாழ். சாவகச்சேரி பிரதேசசபையில் அண்மையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதன்படி, போரில் இறந்த பொதுமக்கள் மற்றும் மாவீரர்களின் கல்லறைகள் புனரமைக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. இந்தக் கோரிக்கையை வடமாகாண சபைக்கு அனுப்புவதற்கும் அங்கு முடிவெடுக்கப்பட்டது.
இந்தநிலையில் அவ்வாறு கோருபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்று கோத்தபாய எச்சரித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். எனவே யாரும் இறந்துப்போன விடுதலைப் புலிகளுக்கு கல்லறைகளை அமைக்குமாறு கோரமுடியாது என்றும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
கல்லறைகளை அமைப்பதற்காக மயானங்கள் என்ற அடிப்படையில் பிரத்தியேக இடங்கள் உள்ளன. இதனைத்தவிர வேறு புதிய இடங்களில் கல்லறைகளை அமைக்க முடியாது என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

Post a Comment