Header Ads



இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடு இலங்கையில் நடைபெற ஆர்வமாக இருக்கிறோம் - ஹக்கீம்


உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
தற்பொழுது இலங்கை வந்துள்ள தமிழ் நாடு, இராமநாதபுரம் ஜில்லா, சித்தார் கோட்டை சன்மார்க்க அறிஞரும், இலக்கியவாதியுமான ஹாஜா முகைதீன் ஆலிம், நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு புதன் கிழமை(23) நீதியமைச்சில் இடம்பெற்ற பொழுதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். 
அமைச்சர் ஹக்கீம் கருத்துரைக்கும் போது மேலும் தெரிவித்ததாவது, 

கொழும்பில் நிலவுகிற இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரட்சி மற்றும் நாடு தழுவிய இலக்கிய ஆர்வம் குன்றி வருகின்றதெனற ஆதங்கம் என்பன பற்றி பேசப்படுகின்ற போதிலும், என்னைப்பொறுத்த மட்டில் அவ்வாறனதொரு ஆபத்து இன்னும் எங்களை அணுகவில்லையென்று எண்ணுகிறேன். 

இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் படைப்புகள் வெளிவராமல் இல்லை. ஆனால் இப்பொழுது அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுக்கு மேலதிகமாக, இணையத் தளங்கள் மூலமாக இவ்வாறான இலக்கியப் பணிகள் அதிகமாக முன்னெடுக்கப்படுகின்றன. படைப்பிலக்கியங்களை இணையங்களின் ஊடாக வெளியிடுபவர்கள் அதிகரித்து வருவது உண்மையிலேயே  மிகவும் ஆரோக்கியமானது.  இவ்வாறாக இஸ்லாமிய தமிழ் இலக்கியம் இன்னும் உயிரோட்டம் உள்ளதாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஊக்கம் கொடுக்கும் பணியைத் தான் நாங்கள் மேற்கொள்ளலாம். 

அந்த அடிப்படையில், இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடு அடுத்ததாக இலங்கையில் நடைபெற வேண்டுமென்பதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். அதற்கான ஒரு குழுவை அமைத்து ஏற்பாடுகளை முன்னெடுத்த பொழுது, தேர்தல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்த சூழ்நிலையில் அரசியல்வாதிகளாகிய எங்களால் அதில் உரிய ஈடுபாட்டை காட்ட முடியவில்லை. அரசியலில் ஈடுபடும் நாங்கள் அவ்வப்பொழுது நடைபெறும் தேர்தல்களினால் ஆட்டிப்படைக்கப்படுகிறோம். தேர்தல்கள் நடைபெறுவது ஜனநாயகத்திற்கு நல்லது தான். ஆனால் அடிக்கடி அவ்வாறு நடைபெறுவது இலக்கியம் போன்ற துறைகளில் நாங்கள் கொண்டிருக்கும் சிரத்தைக்கு இடைஞ்சலாக ஆகிவிடுகின்றது. அதனால் சில பின்னடைவுகள் ஏற்பட்டு விடுகின்றன. 

இலங்கையில் தமிழ் இலக்கியத்துறையில் ஏற்பட்டு வரும் மறுமலர்ச்சிக்கு, தமிழகத்தில் இருந்து கிடைக்கும் ஊக்கம் குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். தமிழ் நாட்டிலிருந்து இங்கு வருகை தரும் மௌலவி ஹாஜா மொகைதீன் போன்ற ஆர்வலர்களிடம் மேலோங்கியுள்ள உற்சாகம் எங்களை ஊக்குவிக்கின்றது.

இத்தகைய பின்னணியில், உத்தேசித்துள்ள இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடு இலங்கையில் நடைபெறுவதற்கான நடவடிக்கைகளை தொடரவுள்ளோம் என்றார். 

அமைச்சர் ஹக்கீமுடனான இந்தச் சந்திப்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹஸன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். அஸ்லம், பிரபல சிறுகதை எழுத்தாளர் மு.பஷீர், கலைவாதி கலீல், புரவலர் பாயிக் மக்கீன், சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளர் புர்கான் பி இப்திகார்,  ஊடகவியலாளர்களான எம்.ஏ.எம். நிலாம், எம்.எப். றிபாஸ், இலங்கை வானொலி செய்தி ஆசிரியர் பஸ்ஹான் நவாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

அமைச்சர் ஹக்கீமுக்கும், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம். நிலாமுக்கும் மௌலவி ஹாஜா முகைதீன் வாழ்த்துப்பாடல்களை கையளித்து கருத்து தெரிவித்தார். இலங்கையில் உள்ள தமது உறவினர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் சந்திப்பதற்காக மௌலவி ஹாஜா முகைதீன் இங்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


No comments

Powered by Blogger.