பாகிஸ்தானிலிருந்து ஹஜ்ஜுக்கு நடந்துசென்றுள்ள சகோதரர்
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் இறுதி கடமையாக ஹஜ் எனப்படும் புனித யாத்திரை கருதப்படுகிறது. எனவே, வசதி படைத்த இஸ்லாமியர்கள் தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ்ஜுக்கு சென்று வர வேண்டும் என்பது கட்டாய கடமை ஆக்கப்பட்டுள்ளது.
தொலைதூர தேசங்களில் வசிப்பவர்கள் விமானம் அல்லது கப்பலில் பயணித்து ஹஜ்ஜை நிறைவேற்றுகின்றனர். மக்காவுக்கு அருகாமையில் உள்ள வளைகுடா நாடுகளில் இருப்பவர்கள் கார், பஸ் போன்ற வாகனங்களில் சென்று தங்களது புனித கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
ஆனால், இவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் பாகிஸ்தானை சேர்ந்த கர்ல்சாதா கர்சத் ரய்(37) என்பவர் 6 ஆயிரத்து 387 கி.மீட்டர் தூரத்தை கால்நடையாக நடந்தே பயணித்து தனது கடமையை நிறைவு செய்துள்ளார்.
இதற்காக கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய அவர் ஈரான், ஈராக், ஜோர்டான் வழியாக நடந்து கடந்த 1ம் தேதி சவுதி அரேபியா வந்தடைந்தார்.
மக்காவின் கஃபா இமாம் மற்றும் அங்குள்ள பாகிஸ்தான் வம்சாவழியினர் அவரை வரவேற்றனர்.
2007-ம் ஆண்டு உலக சமாதானத்துக்காக கைபரில் இருந்து பாகிஸ்தானுக்கு 85 நாட்களில் ஆயிரத்து 999 கி.மீட்டர் நடந்தே சென்று இவர் சாதனை செய்துள்ளார்.
அந்த சாதனையையும் முறியடிக்கும் வகையில் 2011ம் ஆண்டு கைபரில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு 72 நாட்களில் 2 ஆயிரத்து 287 கி.மீட்டர் நடந்து சென்று புதியதொரு சாதனையையும் இவர் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment