தனியார் பஸ் கட்டணம் 7 சதவீதத்தால் அதிகரிப்பு - புகையிரத கட்டணமும் உயர்வு
(Sfm) எதிர்வரும் நொவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பேருந்து கட்டணங்களை 7 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்திருப்பதாக, தனியார் போக்குவரத்து துறை அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த குழு சதவீத அதிகரிப்புக்கு தாங்கள் இணங்கப் போவதில்லை என்று, இலங்கை தனியார் பேருந்து சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் 200 கிலோமீற்றருக்கும் அதிகமான தூர இடைவெளியை கொண்ட தொடரூந்து நிலையங்களுக்கு இடையிலான தொடரூந்து பயணக் கட்டங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.
இதன்படி தொடரூந்து சேவையின் மூன்று வகுப்புகளுக்கும் 80 ரூபா வீதம், கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடரூந்து திணைக்களத்தின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் நொவம்பர் மாதம் 1ம் திகதி முதல் இந்த பயணக்கட்டணம் அதிகரக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடரூந்து கட்டணங்களுக்கு இடையில் காணப்படுகின்ற முரண்பாடுகளை தவிர்க்கும் நோக்கில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது கொழும்புக்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான தொடரூந்து கட்டணமாக 300 ரூபா அறவிடப்படுகிறது.
எனினும் கொம்பனி வீதியில் இருந்து கிளிநொச்சிக்கான தொடரூந்து கட்டணமாக 220 ரூபா மாத்திரமே அறவிடப்படுகிறது.
இவ்வாறான நிலைமையை சீர் செய்யும் பொருட்டே இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக தொடரூந்து திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment