ஊடகவியலாளர் மீரா.எஸ்.இஸ்ஸடீனின் மறுப்பு அறிக்கை
கண்மூடித்தனமான நம்பிக்கை, சிலரை தவறாக வழிநடத்தக் காரணமாக அமையலாம் எனும் தலைப்பில் நேற்று முன்தினம் 10 ஆம் திகதி இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த செய்திக்காக அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன் அவர்கள் அனுப்பிவைத்துள்ள மறுப்பு அறிக்கை.
ஊடக சம்மேளன நிதியை துஷ்பிரயோகம் செய்தமைக்காக பொருளாளர் பதவியிலிருந்து ஒதுக்கப்பட்டார்.
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் முன்னாள் பொருளாளர் யூ.எல். மப்றூக் நிதி மோசடியில் ஈடுபட்டதனால் அவரை சத்தமில்லாமல் கழற்ற வேண்டிய நிலை எனக்கும், கௌரவ உறுப்பினர்களுக்கும் ஏற்பட்டது என்பதனை மிகவும் கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உறுப்பினர் எஸ்.எல்.எம்.பிக்கீருக்கு அவரது சுகயீனம் காரணமாக உறுப்பினர்களால் 20.07.2013 அன்று நிந்தவூரில் நடைபெற்ற இப்தார் வைபவத்தின்போது சேகரிக்கப்பட்ட 13,500 ரூபா மற்றும் கையில் இருந்த சில்லறைகள் என மொத்தம் 13,695 ரூபாவை வங்கியில் உரிய திகதிகளில் வைப்புச் செய்யாமல் சுமார் 2 ½ மாதகாலம் தாமதித்து 04.10.2013 ஆம் திகதி அன்று சங்கக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இந்த மோசடி நடவடிக்கை கௌரவ உறுப்பினர்கள் பலருக்குத் தெரிந்திருந்தும் 06.10.2013 அன்று நடைபெற்ற வருடாந்தக் கூட்டத்தில் உறுப்பினர்களால் ஆண்டறிக்கையின் பிரதி வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் பொருளாளர் அதனை வழங்காமல் குறிப்புப் புத்தகத்தை காட்டினார். இதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் சபை அடுத்த கட்ட நகர்வுகளுக்குச் சென்றது.
குறித்த நிதியை வங்கியில் செலுத்துமாறு பல தடவைகள் அவருக்கு அறிவுறுத்தப்பட்டும் அதனை தட்டிக் கழித்ததனால் புதிய நிருவாகசபையால் அவர் புறக்கணிக்கப்பட்டார்.
தலைவர், செயலாளர் ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட, பொருளாளர் பதவிக்கு (05) ஐவரின் பெயர்கள் முன் மொழிந்து – வழி மொழியப்பட்ட நிலையில் (02) இருவர் வாபஸ் வாங்கிக் கொண்டனர். எஞ்சிய மூவரில் பி.எம்.எம்.ஏ.காதர் 22 வாக்குகள், எம்.சஹாப்டீன் 17 வாக்குகள், யூ.எல்.மப்றூக் 09 வாக்குகள் எனப் பெற்றுக் கொண்டனர்.
அவரது பல்வேறு நடத்தைக்கோலங்களால் தோல்வி கண்டமைக்காக எம் மீது வீண் அவதூறுகளைக் கூறியுள்ளார்.
1.சம்மேளனத்தில் பொறுப்பு வாய்ந்த சிலர்; அவருடன் கோபம் என்று கூறுகின்றார்.
பதில் – வாக்களிப்பின் பெறுபேறு இதற்குச் சான்றில்லையா?
2.தலைவர் மீரா. எஸ். இஸ்ஸடீனுக்கும் கோபம் என்றார்.
பதில் -உங்கள் மோசடி வேலையால் எனக்குக் கோபம் ஏற்படாதா தம்பி?
3.தலைவர் திடீர் செலவுகளுக்குப் பணமும், பெயர் குறிப்பிடாமல் காசோலைகளும் எழுதச் சொல்வார் என்ற குற்றச்சாட்டு.
பதில் -மாதக்கணக்கில் கட்டில் படுக்கையாக இருந்து அம்பாரை, கண்டி, பேராதனை மீண்டும் அம்பாரை பின் வீடு என்று வந்து சேர்ந்து கையை உசுப்பக்கூட முடியாத நிலையில் இருந்தவருக்கு (பிக்கீர்) சம்மேளனத்தினால் வழங்கப்படும் நிதியைப் பணமாக வழங்கவேண்டும். அவரது பெயருக்கு எழுதிக் கொடுத்தால் அதை வங்கிக்குச் சென்று மாற்றி எடுப்பதில் சிரமம் இருக்கும் என்பதற்காக தலைவரும், பொருளாளரும் இணைந்து காசோலையில் ஒப்பம் வைத்து அதை மாற்றிக் கொடுத்தால் என்ன என்று கேட்பதற்கும், செய்வதற்கும் 16 வருடங்களுக்கு மேலாக யாருடைய போட்டியுமின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்ட தவைருக்கு உரிமையில்லையா சகோதரரே? பொறுப்பு வாய்ந்த பதவியிலிருந்த செயலாளர் உட்பட மற்றும் முக்கியஸ்தர்களும் இதைத்தானே கூறினார்கள்.
4.அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்திற்கு 5000 ரூபா அன்பளிப்பாக வழங்கி நான் வங்கிக் கணக்கை திறந்து கொடுத்தேன் என்கிறார்.
பதில் -தம்பி நீங்கள் எந்த வங்கியிலும் தனியாக வங்கிக் கணக்கு திறக்கலாம். சங்கங்கள், கழகங்களுக்கு வங்கிக்கணக்கு ஆரம்பிப்பதற்கு சில நடைமுறைகள் இருக்கிறது.
சங்க உறுப்பினர்கள் கூட வேண்டும், வங்கிக் கணக்குத் திறப்பது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அத் தீர்மானத்தின் பிரதியை தலைவர், செயலாளர், பொருளாளர் மூவரும் எடுத்துச் சென்றுதான் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இது தெரியாமல் நான் திறந்தேன் என்கிறீர்களே அசிங்கமாக இல்லையா?
5000 ரூபா அன்பளிப்புக் கதை
உங்களது பொருளாதாரக் கஷ்டத்தை நிவர்த்திப்பதற்காக, உங்களின் வேண்டுகோளின் நிமித்தம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் (ஸ்ரீ.ல.மு.கா) தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கிய 50,000 ரூபாவை நீங்கள் பெற்றுக்கொள்வதற்காக அம்பாரை மாவட்டத்தில் எந்தச் சங்கமும் முன்வராத வேளையில் தவித்து வந்த உங்களுக்கு எமது சம்மேளனம் ஊடாக எமது கடிதத் தலைப்பில் பாராளுமன்ற உறுப்பினருக்குக் கடிதம் எழுதி அதற்கமைய அவர் ஊடாகக் கிடைத்த தொகையைப் பெறுவதற்காக அக்கரைப்பற்று பிரதேச செயலாளராக இருந்த எச்.எம்.அன்சார் மற்றும் கணக்காளர் திட்டப்பணிப்பாளர் ஆகியோரின் உதவியுடன் நீங்கள் பெற்றுக் கொண்ட ஹதியாப் பணத்திற்கான சக்காத் தொகைதான் அந்த 5000 ரூபாவாகும்.
குறித்த நிதியைப் பெறுவது தொடர்பான நடைமுறைகள் பல இருந்த போதும் ம்ஹூ......வெளங்கும்தானே தம்பி.
மூன்று வருடங்கள் பொருளாளராக இருந்தவர் தோல்வி அடைந்த பின்னர் மல்லாந்து படுத்துக்கிட்டு துப்பிக் கொண்டிருக்கிறார்.
தலைவரும், பொறுப்பு வாய்ந்தவர்களும் தவறு செய்தால் அதை இதுவரை காலமும் சபையில் கூறாமல் இணையத்தளங்களில் கூறுவதன் நோக்கமென்ன? உங்கள் தகுதியை நாடு அறிந்து விட்டதே என்பதற்காகவா?
உங்களை ஒருவர் பிரேரித்தபோது அதனை ஆமோதிக்க சபையில் ஆள் இல்லாமல் இரண்டு, மூன்று நிமிடங்கள் சபை நிசப்தமானதை அறிந்தாவது நீங்கள் போட்டியிலிருந்து விலகி இருக்கலாம். உங்கள் சொந்த ஊர் அட்டாளைச்சேனையில் இருந்து உங்கள் மச்சான் ரீ.கே. றஹ்மத்துல்லா உட்பட பலர் சமூகமளித்திருந்தும் நவாசின் முன் மொழிவை ஆமோதிக்க ஆளிலில்லையே மப்றூக். அந்த வேளை உங்கள் முகம் ஓடிக்கறுத்த சங்கதியை அங்கத்தவர்கள் பேசிக் கொண்டு கவலைப்பட்டார்கள்.
5.சந்தா விடயம்
சேனை அறுவடை செய்து புட்டுப்பாளையும் இறக்கிய பின்பு சந்தா 100ரூபாவை பற்றிப் பேசுகின்றீர்களே. 3 வருடங்களாக இந்த ஐடியா வரவில்லையா? ஏன் சந்தா நாம ஆளுக்கு 10,000 ரூபா போடுவோம் வாங்க. நீங்க போட்டுக் காட்டுங்கள் மற்றவர்களும் அதைக்கண்டு போடுவார்கள்.
6.மற்றவர்களிடம் கையேந்தக் கூடாது என்று கூறுகின்றீர்கள்
பதில் - நீங்கள் இதுவரை ஒரு சதத்தைத்தானும் உங்களது நிதியிலிரந்து தந்துள்ளீர்களா?
சாப்பிட்டுவிட்டு கூடிக்கலைவது மட்டும் நோக்கமாக இருக்கக்கூடாது என்று கூறுகிறார். உங்களுக்கு மட்டும் செய்ததைப் பட்டியலிடுகின்றேன்.
கல்முனை மாநகரசபை உறுப்பினர்களுடன் நீங்கள் பிரச்சினைப்பட்டு வந்தபோது கல்முனை சுற்று வட்டாரத்தில் மாநகரசபைக்கு முன்னால் சம்மேளன உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தமை.
ஹரீஸ் எம்பியிடம் இருந்து கிடைந்த நிதியை எடுத்துத்தந்தது.
கல்முனையைச் சேர்ந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் உங்களுக்கு 10,000 ரூபா பணத்தை அன்பளிப்புச் செய்துவிட்டு அவர் காரியத்தை நீங்கள் முடித்துக்கொடுக்காததினால் பொது மேடையில் சனத்திரள் மத்தியில் உங்களை அவமானப்படுத்தியதற்காக நாங்கள் சிலர் கொதித்தெழுந்து கண்டனம் தெரிவித்தது.
உங்கள் சேவையினை கௌரவப்படுத்த 2010 இல் விழா எடுத்து சம்மேளன ஊடகவியலாளர்கள் விபரக் கொத்தில் ஒரு பக்கத்தை ஒதுக்கி உங்களை அறிமுகப்படுத்தியது.
மருதமுனையில்வைத்து வீதிப்போக்குவரத்துப் பொலிசாருடன் வாக்குவாதப்பட்டு உங்களை பிடித்துக் கொண்டு கல்முனை பொலிஸ் நிலையம் கொண்டுவந்திருந்த போது, சகோதர ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் தந்த தகவலை அடுத்து உயர்மட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உங்களை விடுவித்தது (இது இன்னமும் உங்களுக்குத் தெரியாத விடயம்)
அக்கரைப்பற்று வைத்தியசாலையிலும், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திலும் நீங்கள் சண்டை போட்டபோது அதிலிருந்து உங்களை விடுவித்தமை.
செப்டம்பர் மாத நடுப்பகுதியில்; என்னோடும், நண்பர்களோடும் திருமலை மாவட்ட சுற்றுலா மேற்கொண்டு புல்மோட்டையில் சுபையிரின் குரும்பைக் கடையில் நாங்கள் தாகசாந்தி செய்தபோது போட்டோவை பேஸ் புக்கில் போட்டவர். தலைவரைப்பற்றியும் அதிலுள்ள முக்கியஸ்தர்களைப்பற்றியும் ஓக்டோபர் 10ஆம் திகதி சேறு அடிக்கிறார். தம்பி என்ன பிராணியப்பா?
புதிதாக வந்து சேர்ந்த 6 உறுப்பினர்களின் சேர்வுக்கட்டணம் தலா 200 ரூபாப்படி 1,200 ரூபாவை பெற்று பற்றுச்சீட்டு வழங்கியுள்ளார். அந்தப் பணம் எங்கே? வங்கியில் வைப்புச் செய்யப்படவில்லை. அல்லது புதிய பொருளாளரிடம் ஒப்படைக்கவில்லை. எல்லாவற்றையும் காசோலை மூலம் மேற்கொள்ளும் நபர் இந்த விடயத்தில் எப்படி நடந்தது.
எமது சம்மேளனம் மேற்கொண்ட விழாக்கள், நிகழ்வுகளுக்கு அனேக சந்தர்ப்பங்களில் அனுசரணையாளர்கள் ஊடாகவே பொருள்களும், சேவைகளும் கிடைக்கப்பெற்றன.
எமது வங்கிக் கணக்கு அக்கரைப்பற்று எச்.என்.பி.இல் உள்ளது. மப்றூக் பொருளாளராக பதவி வகித்த 3வருட காலத்தில் எமது காசோலைப் புத்தகத்தில் இருந்து 83033351 ஆம் இலக்கம் தொடக்கம் 83033364 இலக்கம்வரை காசோலை எழுதப்பட்டுள்ளது. மொத்தம் 14 காசோலைகள் எழுதப்பட்டுள்ளன. மொத்தத் தொகை 127,695 ரூபா. 03.10.2013 வரை இருந்த வங்கி மீதி 6,540 ரூபா, 04.10.2013 வைப்பு 13,695 ரூபா,08.10.2013 க்குப்பின்னரான மீதி 9, 435 ரூபா. இதற்குள் அங்கத்தவர்கள் தொடர்பாடலுக்கான சிறு தொiயும் செலவு செய்யப்பட்டுள்ளது. இதுதான் எங்கள் வங்கி நிலவரம்.
நாங்கள் 1995 இருந்து அம்பாரை மாவட்ட கரையோர செய்தியாளர் சங்கத்தை நடத்திவந்த நிலையில் 2008.08.24 ஆம் திகதி அனைவரையும் ஒன்றிணைந்த சம்மேளனம் ஒன்றை உருவாக்கினோம். அந்த வேளையிலும் நாம் கரையோர செய்தியாளர் சங்கத்திற்கென தனியான வங்கிக் கணக்கினை வைத்திருந்தோம் என்பதை 2010.05.16 ஆம் திகதி முதல் பொருளாளராக ஏற்றுக்கொண்ட மப்றூக் அறியமாட்டார்.
அவர் இப்போது மட்டுமல்ல 2000 ஆம் ஆண்டுகளில் ராவய பத்திரிகையில் என்னையும், கரையோர செய்தியாளர் சங்கத்தையும் விமர்சித்தவர். அரசியல் வாதிகளிடம் காசு வாங்கினால் அவர்களுக்கு எதிராக எழுத முடியாது என்று கூறும் இவர் அரசியல் வாதிகளிடமும், சமூகப் பிரமுகர்களிடமும் காசு வாங்காமல் எழுதினால் போதும்.

Post a Comment