கென்யா வணிக வளாகத்துக்குள் தாக்குதல் முடிந்ததா..?
மத்திய ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலை நகரான நைரோபியில் உள்ள ‘வெஸ்ட் கேட்’ வணிக வளாகத்துக்குள் ஆயுததாரிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள்.
அப்போது அந்த கட்டிடத்தின் 4–வது மாடியில் குஜராத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சமையல் போட்டி நடத்திக் கொண்டு இருந்தது. இதில் ஏராளமான வெளி நாட்டைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு இருந்தனர்.
அங்கு புகுந்த ஆயுததாரிகள் முதலில் குண்டுகளை வீசி வெடிக்கச் செய்தனர். அங்கிருந்தவர்களை பணய கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.
உடனே அந்த வணிக வளாகத்துக்குள் ராணுவம் புகுந்தது. தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டு பிடிக்க முயன்றனர். இதனால் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
மற்றொரு பக்கம் பணய கைதிகளை உயிருடன் மீட்பதற்காக ஆயுததாரிகளுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. அப்போது ஆயுததாரிகள் பல்வேறு நிபந்தனைகள் விதித்தனர். கோரிக்கை விவரங்களை வெளியில் தெரிவிக்க ராணுவம் மறுத்து விட்டது.
இதற்கிடையே ஹெலிகாப்டர் மூலம் அதிரடிப்படையினர் வணிக வளாகத்துக்குள் இறக்கப்பட்டனர். அவர்கள் ஆயுததாரிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். 3 நாள் போராட்டத்துக்குப் பின் நேற்று இரவு பணய கைதிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த தகவலை அந்நாட்டு உள்துறை மந்திரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கடைசியாக நடந்த சண்டையில் 2 ஆயுததாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து வணிக வளாகத்தை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. வணிக வளாகத்தின் அனைத்து மாடிகளிலும் ராணுவம் சோதனை நடத்தியது. அங்கு வேறு யாரும் சிக்கி இருக்கவில்லை என்றும் உள்துறை மந்திரி தெரிவித்தார்.
எத்தனை ஆயுததாரிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர் என்பதை ராணுவம் வெளியிட மறுத்துவிட்டது. ஆயுததாரிகளில் சிலர் வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த 29 வயதான சமந்தா வெவ்த் வெய்ட் என்ற பெண் தலைமையில் 15 பேர் கொண்ட ஆயுததாரிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய அல்ஷபாப் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
இதற்கிடையே வணிக வளாகத்தை ராணுவம் கைப்பற்றிய பிறகும் அங்கு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகவும் எனவே சண்டை நீடிப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. எனவே தீவிரவாதிகள் மேலும் மறைந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த தாக்குதலில் 62 பேர் பலியானதாக கென்யா அரசாங்கம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இவர்களில் 2 பேர் இந்தியர்கள், 10 பேர் இந்திய வம்சாவளியினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுததாரிகள் தரப்பில் 3 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பணய கைதிகளாக இருந்த 200 பேரை மீட்டு விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது.
ஆனால் கென்யாவின் செஞ்சிலுவை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 65 பேரை காணவில்லை என்று தெரிவித்துள்ளது. எனவே சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே பலியானவர்களில் 40 பேர் வரை இந்தியர்கள் என்று கூறப்படுகிறது. ஆயுததாரிகள் தாக்குதல் நடத்திய போது குஜராத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ரவி வெக்காரியா அங்கு இருந்தார். அவர் மற்றவர்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டார்.
இவர் கூறுகையில்:–
இந்த தாக்குதலில் 70 பேர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் 100 உடல்கள் வரை உள்ளே சிதறிக்கிடந்தன. அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். 30 முதல் 40 பேர் வரை இந்தியர்கள் பலியாகி இருக்கலாம் என்றார்.
இதுவரை 7 உடல்கள் அடையாளம் காணப்பட்டதில் அனைவரும் குஜராத்தை சேர்ந்தவர்கள். இதில் 4 பேர் பெண்கள். வணிக வளாகத்தில் சமையல் போட்டிக்கு ஏற்பாடு செய்த குஜராத் ஆயில் நிறுவன உரிமையாளர் மிதுல் ஷாவும் பலியானார்.
பரோடாவைச் சேர்ந்த ஜிகிஷா சமானி (40) இந்த தாக்குதலில் காயத்துடன் உயிர் தப்பினார். அவர் தனது மகன், மாமனாருடன் 4–வது மாடியில் காபி ஷாப்பில் அமர்ந்து இருந்தார். அப்போது அவர்கள் அமர்ந்து இருந்த ஷோபாவின் பின்புறமாக துப்பாக்கி குண்டுகள் சீறிப்பாய்ந்து சென்றன.
1 மணி நேரம் வரை துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதாகவும் அதன்பிறகு 3 பேரும் தப்பி வந்ததாகவும் தெரிவித்தனர்.
பணய கைதிகளாக சிக்கி மீட்கப்பட்டவர்களில் 4 பேர் பெண்கள். இவர்கள் குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்தவர்கள். குண்டு காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களில் 20 பேர் குஜராத்தியர்கள் என்றும் 20–க்கும் மேற்பட்ட குஜராத்தியர்கள் பலியாகி இருக்கலாம் என்றும் உயிர்தப்பிய மற்றொரு குஜராத்தியரான கிர்திதா ஆச்சாரியா தெரிவித்தார்.
தாக்குதல் நடந்த வணிக வளாகத்தைச் சுற்றிலும் இந்தியர்கள் தான் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். சனிக்கிழமை வார இறுதியில் அங்கு வசிக்கும் இந்தியர்கள் ஒன்று கூடுவார்கள். கேளிக்கை, விருத்து போட்டிகள் என்று ஒன்று கூடி மகிழ்வார்கள். அந்த சமயத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கென்யாவில் உள்ள பெரிய வர்த்தக நிறுவனங்களை இந்தியர்கள் குறிப்பாக குஜராத்தியர்கள் நடத்தி வருகிறார்கள். அவர்கள் வம்சாவளியாக அங்கேயே குடியிருக்கிறார்கள். கென்யா செல்லும் இந்தியர்களுக்கு குஜராத்தியர்கள் தான் வேலை வாய்ப்பு வழங்குகிறார்கள்.

Post a Comment