பயிற்றப்படாத ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சி
(அனாசமி)
இலங்கையின் அரச பாடசாலைகளுக்கு அண்மையில் நியமனம் செய்யப்பட்ட ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இதுவரைப் பயிற்றப்படாத ஆரம்பக்கல்வி ஆசிரியர்களையும் பயிற்றுவிக்கும் தேசிய திட்டத்திற்கு அமைவாக கல்வியமைச்சின் உதவியுடன் தேசிய கல்வி நிறுவகத்தினால் நடாத்தப்பட்ட ஆறுநாட்கள் வதிவிடப் பயிற்சிச் செயலமர்வு (கடந்த 14ஆந்திகதியிலிருந்து 19ஆந்திகதிவரை) அண்மையில் மகரகமவிலுள்ள தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதான கேட்போர்கூட மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வுகள் தேசிய கல்வி நிறுவகத்தின் முன்பிள்ளைப் பருவ விருத்தி மற்றும் ஆரம்பக்கல்விக்கான பணிப்பாளர் நாயகம் சரச்சந்திர குருப்பு தலைமையில், தமிழ்மொழிப்பிரிவுக்கான விரிவுரையாளர் வி.என்.எஸ். உதய சந்திரன் நெறிப்படுத்தலின்கீழ் நடைபெற்றது.
கல்வியமைச்சின் ஆரம்பக்கல்விக்கான பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருமதி லலிதாம்பிகை மற்றும் முதன்மை விரிவுரையாளரான குலரத்னா, விரிவுரையாளர் எம்.எச்.எம். யாக்கூத் ஆகியோரும் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். நாடு முழுவதிலுமிருந்து வருகை தந்திருந்த ஆரம்பக்கல்விக்கான இணைப்பாளர்கள், உதவிக் கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோருடன் மாகாணத்திற்கான ஆரம்பக்கல்வி இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் பயிற்சிக்கான பயிற்றுனர் செயலமர்வில் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை, மூதூர், கிண்ணியா, மட்டக்களப்பு, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மேற்கு, கல்குடா, பட்டிருப்பு, கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கோவில் ஆகிய கல்வி அலுவலங்களிலிருந்தும் ஆரம்பக்கல்விக்கான அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஜனாதிபதியின் துரித செயற்றிட்டங்களின் அடிப்படையில் நாட்டிலுள்ள பாடசாலைகளில் கற்பிக்கும் பயிற்றப்படாத அனைத்து ஆசிரியர்களையும் உள்வாங்கி அவர்களைப் பயிற்றுவிக்கும் திட்டத்திற்கு அமைவாக ஒவ்வொரு கல்வி வலயத்தினாலும் முன்னெடுக்கப்படவுள்ள இப்பயிற்சிநெறியில் விசேட வளவாளர்களாக இந்தப் பயிற்றுனர்கள் பயிற்சிவழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். என அக்கரைப்பற்று கல்வி வலயத்திலிருந்து கலந்து கொண்ட வளவாளர்களினது குழுவின் தலைவரும், ஆரம்பக்கல்விக்கான ஆசிரிய ஆலோசகருமான எஸ்.எல். மன்சூர் தெரிவித்துள்ளார்.

Post a Comment