காட்டிற்குள் மாயமான சிறுவனை காப்பாற்றிய கங்காரு
ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு கங்காரு ஆகும். அது ஒரு சிறுவனுக்கு நண்பனாக இருந்து உயிரை காப்பாற்றிய சம்பவம் நடந்தது.
அடிலாய்டு பகுதியில் அமைந்துள்ள வனவிலங்கு பூங்காவிற்கு கரூகெர்-லிண்டா தம்பதி தங்களது 7 வயது மகன் சீமோனுடன் சென்றார்கள். அங்குள்ள காட்டுப்பாதை வழியாக இவர்கள் நடந்து செல்லும் போது சிறுவன் திடீரென்று மாயமானான். உடனே வன இலாகாவினர் போலீசார் உதவியுடன் ஹெலிகாப்டரில் காடு முழுவதும் இரவு வரையில் தேடினார்கள். ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை. அங்கு இரவு நேரத்தில் கடும் குளிர் வாட்டும் என்பதால் சிறுவனின் கதி என்ன ஆனதோ என்று பெற்றோர் கவலையில் உறைந்து போனார்கள்.
மறுநாள் சுமார் 24 மணி நேரத்திற்கு பிறகு புதரில் இருந்து சிறுவன் சீமோன் பத்திரமாக மீட்கப்பட்டான். அவனிடம் விசாரித்ததில் கங்காரு ஒன்று நண்பரை போல இரவு முழுவதும் அவன் கூடவே இருந்து அரவணைத்து குளிரில் இருந்து காப்பாற்றியது தெரியவந்தது.
மேலும் அவன் கூறும்போது, ‘காட்டில் நிறைய மலர்கள் பூத்திருப்பதை பார்த்தேன். அம்மாவுக்கு அதை பறித்து கொடுக்கலாம் என்ற ஆசையில் சென்றேன். வழிதெரியாமல் புதரில் சிக்கி இருந்த போது கங்காரு வந்தது. அது என்னிடம் இருந்த பூக்களை வாங்கி சாப்பிட்டு என்னுடனேயே படுத்துக்கொண்டது. ஹெலிகாப்டர் சுற்றுவதை பார்த்தேன். ஆனால் அவர்கள் நான் இருந்த இடத்தை பார்க்கவில்லை’ என்றான்.
எவ்வித ஆபத்தும் இன்றி மகன் மீண்டு வந்ததால் பெற்றோர் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். கரூகெர் கூறுகையில், ‘கடவுள் தான் கங்காரு வடிவில் என் மகனை காப்பாற்றி இருக்கிறார். இது ஜங்கிள் புத்தகத்தில் வந்த கதை போல இருக்கிறது’ என்றார்.

Post a Comment