பாகிஸ்தானில் நீண்ட மீசை வளர்த்தவருக்கு அச்சுறுத்தல்
பாகிஸ்தானில் நீண்ட மீசை வளர்த்த வியாபாரியை ஆயுததாரிகள் கடத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பயந்து போன அவர் பாகிஸ்தானை விட்டு வெளியேற போவதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பெஷாவர் நகரை சேர்ந்தவர் மாலிக் அமீர் முகமது கான் அபிரிடி (48), வியாபாரி. எந்த பிரச்னைக்கும் போகாமல் தானுண்டு தன் வியாபாரம் உண்டு என்று இருந்தவரை, கடத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். அதற்கு காரணம் மாலிக்கின் பெரிய்யய... மீசைதான். முஸ்லிம்கள் பெரிய மீசை வளர்க்க கூடாது என்று கூறி மாலிக்கை கடத்தி குகையில் அடைத்தனர்.
மீசையை பெரிதாக வைத்து கொள்ள மாலிக்குக்கு ஆசை. சுமார் 30 அங்குலம் நீளத்துக்கு மீசையை வளர்த்து குழந்தையை போல தடவி, சீராட்டி, பராமரித்து வந்தார். தனக்கு நேர்ந்த வித்தியாசமான அனுபவம் பற்றி மாலிக் கூறுகையில், கடந்த 2009ம் ஆண்டு என்னை ஆயுததாரிகள் கடத்தி சென்று ஒரு குகையில் அடைத்தனர். எனது நீளமான மீசையை வெட்டிவிட வேண்டும் அல்லது முற்றிலுமாக மழித்து விட வேண்டும் என்று மிரட்டினர். ஆசை ஆசையாக வளர்த்த மீசையை வெட்டிய பிறகே என்னை விடுவித்தனர் என்று பரிதாபமாக தெரிவிக்கிறார்.
ஆனாலும் மீசை ஆசை விடவில்லை. ஆயுததாரிகள் பிடியில் இருந்து வந்த பிறகும் நீளமான மீசை வளர்த்துள்ளார். ஆயுததாரிகள் கண்ணில் சிக்காமல் இருக்க அடிக்கடி பைசலாபாத், பெஷாவர் என மாறி மாறி வசித்து வருகிறார். இப்போது ரம்ஜான் மாதம் என்பதால் குடும்பத்தினரோடு இருப்பதற்காக பெஷாவர் திரும்பி உள்ளார்.ஆயுததாரிகள் என்னை நிச்சயம் கொன்று விடுவார்கள் என்று அஞ்சுகிறேன். இதனால் வெளிநாட்டில் தஞ்சம் அடைய விரும்புகிறேன் என்கிறார் பதற்றத்துடன்.

Post a Comment