Header Ads



ஊடகங்கள் தேசிய பாதுகாப்பை பாதிக்கும் வகையில் செயற்படக் கூடாது - ஜெனரல் ஜகத் ஜயசூரிய

அண்மையில் நான்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்பான நாடு கடந்த தமிழீழ இராச்சிய நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளதாக அரச புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, ஊடகவியலாளர்களிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பேராதனை, ஊவா வெல்லஸ்ஸ மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களே இவ்வாறு லண்டனில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வில் பங்கேற்றதாகத் தெரிவித்துள்ளார். ஆய்வுப் பணியில் ஈடுபடுவதாகத் தெரிவித்து விடுமுறைப் பெற்றுக் கொண்டு இந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் லண்டன் சென்றுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு 12 பேராசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினதும் படையினரும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் சில புலம்பெயர் தமிழர்கள் பிரச்சாரத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் நிகழ்வு ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த இருவரும் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு புறம்பாக செயற்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது நீதித்துறையின் பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள நிலையில், நாடு சில முக்கியமான தருணங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் நாட்டில் ஸ்திரத்தனமைக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது என்பதனை சர்வதேச சமூகத்திற்கு வெளிக்காட்டிக் கொள்வதில் நாட்டம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டுமெனவும், தேசிய பாதுகாப்பை பாதிக்கும் வகையில் செயற்படக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். gtn

No comments

Powered by Blogger.