Header Ads



ஒலுவில் துறைமுகத்திற்காக காணி இழந்தவர்கள் நன்றி தெரிவிக்கிறார்கள்..!

(எஸ்.அஷ்ரப்கான்)

ஒலுவில் துறைமுகத்திற்கான காணி சுவீகரிப்பு விவகாரம் ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் சுமுகமான தீர்வு கிடைக்கப்பெற்றமைக்கு காணிகளை இழந்தோர் சங்கம் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. இது விடயமாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இதுவிடயத்தில் காணிகளை இழந்தோர் சங்கத்தின் வேண்டுகோளை துறைமுக அதிகார சபை ஏற்றுக்கொண்டது. ஒலுவில் தறைமுக அபிவிருத்திக்காக  2008 ஆம் ஆண்டு 2ம் கட்டமாக 48 குடியிருப்பாளர்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு, கடந்த 5 வருடங்களாக நஸ்டஈடு வழங்குவதில் இழுபறி நிலைமை தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒலுவில் துறைமுக திறப்பு விழாவிற்கு முன் காணிகளை இழந்தவர்களுக்குரிய நஷ்டஈட்டினை வழங்கும்படியும் காணிகளை இழந்தோர்  அனுபவிக்கும் துன்பங்கள் சம்மந்தமாகவும் சங்கத்தினால் ஜனாதிபதிக்கும், துறைமுக அதிகார சபைத் தலைவருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் பல தடவை மகஜர்கள் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறிருக்க ஒலுவில் துறைமுகம் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி ஜனாதிபதியவர்களினால் திறந்துவைக்கப்பட உள்ளதாக அறிய முடிகிறது. இவ்விடயம் தெரிந்தவுடன் எமதுசங்க உறுப்பினர்கள் துறைமுக அபிவிருத்தி உயர் அதிகாரிகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி துறைமுகம் திறப்பது சம்மந்தமாக வினவியபோது, அது உண்மை என்பது தெரியவந்தது.

அதன் பிற்பாடு எமது சங்கம் உரிய அதிகாரிகளுடன் எமது நஸ்டஈடு சம்மந்தமாக கலந்துரையாட முயற்சிகள் மேற்கொண்டவேளையில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகிய இருவரும் துறைமுகங்கள் அபிவிருத்தி நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன, துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி விக்கிரம ஆகியோர்களுடன் கலந்துரையாடல் நடாத்துவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தந்தனர். அதன்படி 2013.08.26ம் திகதி ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதியில் இக்கலந்துரையாடல் நடந்தது. இதன்போது பிரதியமைச்சர் ரோஹித அபோகுணவர்த்தன, துறைமுகங்கள் அதிகாரசபைத் தலைவர் கலாநிதி விக்கிரம, அமைச்சர் அதாஉல்லா, கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை, துறைமுக நிர்மானத்துறை உயர் அதிகாரிகள், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், பொறியியலாளர் கைதர் அலி, ஒலுவில் தேசிய காங்கிரஸ் இணைப்பாளர் ஏ.எல்.றியாஸ், ஒலுவில் ஜூம்ஆ பள்ளி தலைவர் இஸ்மாயீல் உட்பட காணிகளை அழந்தோர் சங்கத்தின் சார்பில் ஒரு குழுவினரும் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலின்போது காணி இழந்தோர் சார்பாக கலந்துகொண்டோர் காணிகளை இழந்தோர்படும் இன்னல்களையும், தற்போதைய யதார்த்த நிலைமைகளையும் தெளிவாக எடுத்துக்கூறினர். அதனைத்தொடர்ந்து 2013.04.01 ஆம் திகதி காணி, காணி அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி வழங்கிய பணிப்புரையை நிறைவேற்றும்படியும்  வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட துறைமுக அதிகார சபைத்தலைவர் துறைமுக திறப்பு விழாவிற்கு முன் காணிகளை இழந்தவர்களுக்கு எவ்வித நிபந்தனைகளுமின்றி முதற்கட்டகொடுப்பனவாக ஒரு பேர்ச் காணிக்கு 30 ஆயிரம் ரூபாய்கள் வீதம் வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தார். இரண்டாம் கட்ட நஷ்டஈட்டுத்தொகை கொடுப்பனவு சம்மந்தமாக சுமுகமான முறையில் பேசித்தீர்த்துக்கொள்ள முடியும் என்றும இணக்கம் காணப்பட்டது.

ஐந்து வருடங்களாக இழுபறியில் இருந்த இந்த விடயத்திற்கு தீர்வு கிடைத்ததையிட்டு காணிகளை இழந்த மக்கள் ஒலுவில் துறைமுக திறப்பு விழாவிற்கு முன் நஷ்டஈட்டு முற்பணக்கொடுப்பனவு கிடைக்குமென்ற நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கின்றனர்.

துறைமுக திறப்பு விழா நெருங்குகின்ற இவ்வேளையில் எங்களது பிரச்சினைகளை கலந்துரையாடல் மூலம் தீர்த்து வைப்பதற்கு முனைப்புடனும், புத்திசாதுரியத்துடனும், விவேகமாகவும் செயற்பட்டு உரிய ஏற்பாடுகளைச்செய்து தந்த அமைச்சர் அதாஉல்லா, கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை ஆகியோர் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். அத்துடன் இது விடயமாக பல்வழிகளிலும் எமக்கு உதவிய அணைவருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அதேபோல் மக்கள் பிரச்சினைகளையும் நியாயமான கருத்துக்களையும் ஆணித்தரமாக முன்வைத்த அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கும், எங்களது கருத்துக்களையும் உள்வாங்கி நஷ்டஈட்டை வழங்குவதற்கு வாக்குறுதியளித்த துறைமுகங்கள் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சருக்கும், துறைமுக அதிகார சபையின் தலைவருக்கும் இவ்விடயத்தில் கருசனையுடன் செயற்பட்ட ஒலுவில் தேசிய காங்கிரஸ் இணைப்பாளர் ஏ.எல். றியாஸ், பொறியியலாளர் கைதர் அலி, ஒலுவில் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் ஏ. இஸ்மாயீல் உட்பட அணைவருக்கும்  எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதில் பெருமிதமடைகின்றோம். என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

1 comment:

  1. இது போன்று நுரைச்சோலை வீட்டுக்கும் அரசினூடாக சாதகமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று கொரவ அமைச்சர் அதாஉல்லாவிடம் வினயமாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.