பாகிஸ்தானில் தூக்கு தண்டனை குறித்து சர்ச்சை
பாகிஸ்தானில் இரண்டு லஷ்கர்-இ-ஜாங்வி போராளிகளுக்கு நிறைவேற்றப்படுபவதாக இருந்த தூக்கு தண்டனை அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ""இரண்டு போராளிகளையும் தூக்கிலிட குறிக்கப்பட்டுள்ள தேதி நெருங்கியுள்ள நிலையில், அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி வெளிநாடு சென்றுள்ளதால், அவருடன் கலந்துபேசி முடிவெடுக்கும்வரை தூக்குதண்டனையை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் நவாஸ் ஷெரிப் உத்தரவிட்டுள்ளார்.
நீண்டகாலமாக நிலுவையிலிருக்கும் மரணதண்டனைகள் குறித்து பிரமருடன் கலந்துபேச விரும்புவதாகத்தான் அதிபர் கடிதம் அனுப்பியுள்ளாரே தவிர தூக்குதண்டனையை அதிபர் ரத்துசெய்துவிட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை'' என்று தெரிவித்தார்.
ஷியா பிரிவு மருத்துவர் ஒருவரைக் கொன்ற வழக்கில் 2004-ஆம் ஆண்டு இந்த இரு போராளிக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. அடுத்தவாரம் அவர்களது தண்டனை நிறைவேற்றப்படவிருப்பதாக நவாஸ் அரசு அறிவித்ததையடுத்து அவரது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சித் தலைவர்களைக் கொலை செய்வோம் என்று லஷ்கர்-இ-ஜாங்வி எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் தூக்கிலிடுவதற்கான ஆயத்தங்கள் நடந்துவந்தன. இந்நிலையில்தான் அதிபர் ஜர்தாரியின் தலையீட்டால் தூக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 2008-ம் ஆண்டு அதிபர் சர்தாரி அனைத்து மரணதண்டனைகளையும் காலவரையின்றி தள்ளிவைத்ததிலிருந்து, ராணுவ நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒரு வீரரைத் தவிர வேறு யாரும் தூக்கிலிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment