ரெயில் மோதி 35 பேர் பலி - டிரைவருக்கு அடி - ரெயில் தீயிட்டு எரிப்பு
பீகார் மாநிலம், பாமரா ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 35 சிவ பக்தர்கள் மீது அதிவேக ரெயில் மோதி பரிதாபமாக பலியாகினர். பாட்னா-சஹஸ்ரா ரெயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் ராஜ்ராணி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை பாமரா ரெயில் நிலையம் அருகே வந்துக்கொண்டிருந்தது.
அப்பகுதியில் யாத்திரை செய்ய வந்திருந்த சிவ பக்தர்கள் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் வேகமாக மோதியது. இதில் ரெயில் சக்கரங்களில் சிக்கியும், தூக்கி வீசப்பட்டும் 35 சிவ பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவ்வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்து தடைபட்டது.
தண்டவாளத்தை கடந்தவர்கள் மீது பயங்கர வேகத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற ரெயிலின் மீது ஆவேசமடைந்த பொதுமக்கள் கற்களை வீசி தாக்கினர்.
சற்று தூரத்தை கடந்த பிறகு வேகம் குறைந்த ரெயில் நின்றபோது என்ஜின் பகுதியில் இருந்து டிரைவரை கீழே இழுத்துப் போட்ட சிலர் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர்களில் சிலர் ரெயிலின் ஒரு பகுதியின் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
ரெயில்வே அதிகாரிகள் தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். ரெயில் நிலையப் பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.

Post a Comment