இலங்கையில் வழிபாட்டு இடத்தில் நடத்தப்பட்ட வன்முறையை மன்னிக்க முடியாது - அமெரிக்கா
வெலிவேரியவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது, படையினர் நடத்திய தாக்குதல் தொடர்பாக, அமெரிக்கா மீண்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு கவலை தெரிவித்தும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உரிமையையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரியும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடந்த 2ம் நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில் வொசிங்டனில் நேற்றுமுன்தினம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜெனிபர் பசாகி மற்றொரு அறிக்கையை வெளியிட்டார்.
அதில் அவர், “சிறிலங்காவின் வெலிவேரியவில் அண்மையில் நிராயுதபாணிகளாக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்து அமெரிக்கா கவலை கொள்கிறது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எல்லாத் தரப்புகளும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமையை சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் மதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பாக, கத்தோலிக்க தேவாலயம் ஒன்றினுள் அடைக்கலம் தேடிய பொதுமக்கள் தாக்கப்பட்டதாக வரும் தகவல்கள் குறித்து நாம் கவலை கொள்கிறோம்.
குறிப்பாக வழிபாட்டு இடம் ஒன்றில் நடத்தப்பட்ட வன்முறையை எந்த வகையிலும் மன்னிக்க முடியாது.
வெலிவேரிய வன்முறைகள் தொடர்பாக எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையானதும், வெளிப்படையானதுமான விசாரணையை நடத்தி, அதன் முடிவுகள் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.
நம்பகமான அந்த விசாரணைப் பொறிமுறை மூலம், தவறு செய்தவர்கள் எவராயினும் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment