Header Ads



வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக்கூட செயற்படுத்த முடியாத நிலையில் உள்ளோம்

ஏ.எல்.ஜனூவர்)

இலங்கையில் வாழும் எல்லா இன மக்களும் நிம்மதியாக வாழும்  சூழ்நிலை உருவாக்கப்படும் போதுதான் நிலையான இன ஐக்கியம் ஏற்படும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார். 37 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்படவுள்ள தமண பிரதேச சபையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் விழா தமண பிரதேச சபையின் பிரதி தவிசாளர் வெனுர பிரதீத் அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  தொடர்ந்தும் அமைச்சர் உரையாற்றுகையில்,

 நாம் கடந்த மூன்று தசாப்பத காலமாக நமது நாட்டில் ஏற்படுத்தப்பட்ட யுத்தத்தினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை எல்லா இன மக்களும் இழந்ததுடன், நாம் பிறந்த மண்ணிலேயே நிம்மதியாக வாழ முடியாதவர்களாக எப்போதும் அச்சமான சூழ்சிலையில் வாழ்ந்து வந்ததை மறந்து விடமுடியாது. எனவே இந்நாட்டில் பெறும்பான்மையாக வாழும் சிங்கள மக்கள் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம், தமிழ் மக்களுடன் ஐக்கியமாக வாழும் போதுதான் நாம் எதிர்பார்க்கும் உண்மைக்கு உண்மையான இன ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும் என்ற யதார்த்தத்தை சிங்கள மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.

இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ், சிங்கள மக்கள் நிம்மதியாக வாழும் நிலமை உருவாகும் போதுதான் எமது நாட்டில் எல்லா இன மக்களும் நிம்மதியாக வாழ முடியும் இல்லையெனில் எமது நாட்டின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுவதுடன் மீண்டும் நாம் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படும் எனவே எல்லா இன மக்களும் இணைந்து இன ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும் கடந்த காலங்களில் இனவாதம் உருவாக்கப்பட்டதனால் நாம் வரலாற்று ரீதயில் பல அனுபவங்களை பெற்றுள்ளோம். எனவே அவைகளை படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தில் செயற்பட வேண்டும். அம்பாரை மாவட்ட சிங்கள மக்களுடன் இனவாதம் எதுவுமின்றி மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் பணிபுரிந்தார். அதேபோன்று தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் பல ஆண்டு காலமாக சிங்கள மக்களுக்கு பணிபுரிந்து வருவதுடன் அவரின் வழிகாட்டலில் 2008 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கிழக்கு மாகாண அமைச்சர் என்ற வகையில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள சிங்கள மக்கள் வாழும் பிரதேசத்தில் பாரிய பாதை அபிவிருத்தி, நீர்ப்பாசன அபிவிருத்தி உட்பட பல உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களையும் செயற்படுத்தி வருகின்றோம். எங்களிடம் என்றுமே இனவாத உணர்வு இருந்ததில்லை என்பதனை சிங்கள மக்கள் நன்கு அறிவார்கள். 

கிழக்கு மாகாணத்தில் நமது பிரதேச சபைகள் குட்டிப் பாராளுமன்றம என்று அழைக்கப்பட்டாலும் கடந்த கால யுத்த சூழ்நிலை, இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நிலையில் பிரதேச சபைக்கான நிரந்தர கட்டிடங்கள் இல்லாமல் நீண்ட காலமாக கஷ்டப்பட்டோம். மஹிந்த சிந்தனையின் ஊடாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அவர்களின் முயற்சியினால் கிழக்கு மாகாணத்தில் பிரதேச சபைக்கான புதிய கட்டிடங்கள், வீதிகள், விளையாட்டு மைதானங்கள், சந்தை கட்டிடங்கள் என்பவற்றை அமைப்பதற்காக பெறும் தொகையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இதற்காக ஜனாதிபதி அவர்களுக்கும், அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அவர்களுக்கும் கிழக்கு மாகாண மக்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

நாம் எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் மேற்கொள்ளும் போது நன்கு திட்டமிட வேண்டும். நாம் மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டங்கள் ஊடாக நமது எதிர்கால சந்ததியினர் சிறந்த முறையில் பயன் பெறக்கூடிய வகையில் திட்டமிட வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் அபிவிருத்தி தொடர்பாக பேசும் போது எந்தவொரு விடயத்தை மேற்கொள்வதாயினும் சிறந்த முறையில் திட்டமிட வேண்டும். கனவுகள் கானும் போது சிறியளவில் கானாது பெரியளவிலேயே காண வேண்டும் என்று கூறுவார். நன்கு திட்டமிட்டு செயற்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை எம்மால் செய்து முடிக்க முடியாமல் போனாலும் நமக்கு பின்னால் வரும் அரசியல் தலமைகள் அதனை செய்து முடித்து வைப்பார்கள் ஆனால் திட்டமிடலே முக்கியமானதும், கஷ்டமான பணியுமாகும்.

தமண பிரதே சபைக்கான புதிய கட்டிடம் அமையும் விடயத்தில் பிரச்சனை ஏற்பட்டது. தன்னந்தனியாக தமண பிரதேச சபையின் தவிசாளர் ஹிங்குரானையில்தான் பிரதேச சபைக்கட்டிடம் அமைய வேண்டும் என்ற முடிவு எடுத்த நிலையில் பிரதித்தவிசாளர் தலமையில் ஆறு பிரதேச சபை உறுப்பினர்களும் ஒன்றிணைந்து தமண பிரதேச சபை கட்டிடம் தமண பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள இடம் மத்திய இடமாக இருப்பதனாலும் பிரதேச செயலகம், நீர்ப்பாசன காரியாலயம், கல்விக்காரியாலயம், பொலிஸ் நிலையம் உட்பட பல அரச திணைக்களங்கள் அமைந்துள்ள தமண பிரதேசத்திலேயே இப்புதிய பிரதேச சபைக்கட்டிடம் அமைய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று எல்லோரும் குரல் கொடுக்கின்றோம். ஆனால் நமது மாகாண சபைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக்கூட செயற்படுத்த முடியாத நிலையில் உள்ளோம். இது கவலைப்பட வேண்டிய விடயமாகும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கோரிக்கைகளை உதாசீனம் செய்யும் நடவடிக்கைகளால் கிழக்கு மாகாண சபையின் அதிகாரங்கள் பலவீனப்படுத்தப்பட்டு மலினப்படுத்தப்பட்டு வருகின்றன.

கரையோர பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் இயற்கையான தேற்றங்கள் வெளியில் கொண்வரப்படுகின்றது. கல்முனை, சாய்ந்தமருது, அக்கரைப்பற்று போன்ற முஸ்லி;ம் பிரதேசங்களில் இயற்கையான கலையுடன் பள்ளிவாசல் முகப்புகள் அழகுபடுத்தப்படுகின்றன. நிந்தவூர் பிரதேசத்தில் பெரிய பள்ளிவாசலின் முகப்பு தோற்றத்தை வெளிக்கொண்டு வரும் நோக்கத்துடன் பள்ளிக்கு முன்னால் அமைக்கப்பட்ட பல கோடி பெறுமதியான கட்டிடங்களை அகற்றி அழகுபடுத்தப்பட்டு வருகி;ன்றன.
இந்த வரிசையில் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் இயற்கையான முகப்பு தோற்றத்தினை வெளியே கொண்டு வருவதற்கு தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் பள்ளிவாசலுக்கு முன்பாக இருந்த பழைய பிரதேச சபைக்கட்டிடம், கடைகள் என்பவற்றை அகற்றி பிரதேச சபைக்கான புதிய கட்டிடம் பல கோடி ரூபாய் நிதியி;ல் நிர்மாணிக்கப்பட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டதுடன் கலாச்சார மண்டபமும் பல கோடி ரூபாய் நிதியில் நிர்மாணித்து மக்களிடம் கையளிக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாயலின் இயற்கையான தோற்றத்தினை வெளியே கொண்டு வந்தபோது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனை கண்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் அப்பள்ளிவாசலின் இயற்கை தோற்றத்தினை உடனடியாக மறைத்துவிட முடிவு செய்து பிரதேச வாதத்தையும், அரசியல் போதத்தையும் உருவாக்கியதுடன் எதிர்கால சந்ததியினர் தொடர்பாக எவ்விதமான நல்ல திட்டங்கள் இல்லாமல் அற்பர்களாக செயற்பட்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அட்டாளைச்சேனை பொதுச்சந்தை கட்டிடத்தை பள்ளிவாசலை மறைத்து கட்டியுள்ளனர். பள்ளிவாசல், பொது நூலகம், தேசிய மீலாத் தூபி, கலாசார மண்டபம் என்பன அமைந்துள்ள இவ்விடத்தில் தற்போது மீன், இறைச்சி எல்லாம் கொண்டுவரப்பட்டு ஒரு அவலட்சனமான நிலைக்கு மாற்றியுள்ளனர். இப்போது மக்களுக்கு உண்மை நிலை புரிகிறது. எனவே அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் போது அரசியல், பிரதேச வேறுபாடுகளை மறந்து நமது எதிர்கால சந்ததியினர் நீண்ட காலமாக பாவிக்க கூடிய வகையில் நன்கு திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

1 comment:

  1. அதனாலதான் திவிநெகும சட்ட மூலம் உஊடாக சில அதிகாரங்கள் வேண்டாம் எண்டு கொடுத்திட்டீங்களா

    ReplyDelete

Powered by Blogger.