Header Ads



பள்ளிவாசலுக்கு அருகே குண்டுவெடிப்பு 500 பேர் காயம், 42 பேர் மரணம் (வீடியோ)

சிரியாவின் அண்டை நாடான லெபனானில் சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத்தின் ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். இவர்களுக்கும் பஷர் அல்-ஆசாத்தின் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்து வருவது வாடிக்கையாகி விட்டது.

முஸ்லிம்களின் வார வழிபாட்டு நாளான (வெள்ளிக்கிழமை) திரிபோலி நகரில் உள்ள 2 மசூதிகளின் அருகே அடுத்தடுத்து கார் குண்டுகள் வெடித்து சிதறின.

திரிபோலி நகரில் உள்ள அல்-சலாம் மசூதியின் உள்ளே தொழுகை நடந்துகொண்டிருந்தபோது சக்திவாய்ந்த கார் குண்டு வெடித்து சிதறியது. இதனையடுத்து, அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அல்-தக்வா மசூதி அருகிலும் மற்றொரு கார் குண்டு வெடித்தது. 

இந்த தாக்குதல்களில் மசூதிகள் மற்றும் அருகில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்தன. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் கொளுந்து விட்டெரிந்தன. மசூதிகளின் உள்ளே இருந்து 5 சிறுவர்கள், முதியவர்கள் உள்பட சுமார் 42 பிரேதங்கள் வெளியே கொண்டு வரப்பட்டன.

500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. எனினும், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்தவர்கள் இந்த தாக்குதல் சிரியா அதிபரின் ஆதரவாளர்களின் சதிவேலைதான் என்று ஆவேசத்துடன் கூறினர்.

No comments

Powered by Blogger.