25 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை - 3 இலட்சத்து 29 ஆயிரத்து 725 மாணவர்கள் தோற்றுவர்
(ஏ.எல்.ஜுனைதீன்)
எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தமிழ் மொழி மூலம் மொத்தமாக 80 ஆயிரத்து 329 மாணவர்கள் தோற்றுகின்றனர்.
இப்பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் மொத்தமாக 3 இலட்சத்து 29 ஆயிரத்து 725 மாணவர்கள் தோற்றவுள்ளனர். இவர்களில் 2 இலட்சத்து 49 ஆயிரத்து 396 மாணவர்கள் சிங்கள மொழியிலும் 80 ஆயிரத்து 329 மாணவர்கள் தமிழ் மொழியிலும் பரீட்சை எழுதுகின்றனர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம். என். ஜகத் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இப் பரீட்சையை நடத்துவதற்கென நாடுபூராவும் 2,336 பரீட்சை நிலையங்கள் தயார்படுத்தப்பட்டிருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
பரீட்சை தொடர்பான நடைமுறை ஒழுங்குகள் கடந்த காலங்களிலும் பார்க்க கண்டிப்பான முறையில் பேணப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பரீட்சை நடைபெறும் பாடசாலை வளாகத்துக்குள்ளே பெற்றோர் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். பரீட்சை நடைபெறும் நேரத்தில் பரீட்சைக் கடமைகளில் ஈடுபடுவோர் மற்றும் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள் யாரும் பரீட்சை மண்டபத்திலிருந்து வெளியே செல்வதற்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் உடல், உள ரீதியான ஆற்றப்படுத்தலைக் கருத்தில் கொண்டு பரீட்சைத் தினத்திற்கு ஒரு வாரத்துக்கு முன்னரே தனியார் கல்வி நிலையம் மற்றும் ஏனைய வகுப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பரீட்சை நடைபெறும் நேரத்தில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் இருப்பதுடன் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருப்பர்.
.jpg)
Post a Comment