Header Ads



நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மக்களின் கருத்துக்களை உள்வாங்கும் முதல் அமர்வு

(ஏ.எல்.ஜுனைதீன்)

அரசமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழு மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்கான தனது முதலாவது அமர்வை   இன்று 21 ஆம் திகதி பாராளுமன்றக் கட்டடத்தில் நடத்தவுள்ளது. 

நாடாளுமன்றத் தெரிவுக் குழு நியமிக்கப்பட்டதன் பின்னர் அதன் முதலாவது அமர்வு கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி நடந்தது. அதன் பின்னர் இரு அமர்வுகள் நடைபெற்றன.

தற்போது   அரசமைப்பில் ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி விசேடமாக 13 ஆவது அரசமைப்புச் சட்டத்தின் இரண்டு திருத்தங்கள் பற்றி பொது மக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அரசமைப்புத் திட்டத்தின் மாற்றங்கள் பற்றிய கொள்கை ரீதியிலான பிரேரணையை அரசு ஏற்கனவே எடுத்திருந்தது. இதன் பின்னர் இம் மாற்றங்கள் சம்பந்தமாக பொது மக்களின் கருத்துக்களை ஆராய்வதென முடிவெடுக்கப்பட்டது. ஏற்கனவே பல அமைப்புக்களும் பொது மக்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு முன் வந்துள்ளதையடுத்து தெரிவுக் குழு தனது முதலாவது அமர்வை இன்று மாலை  நடத்தவுள்ளது.

 தெரிவுக்குழு இன்று ( 21 ஆம் திகதி ) கூடியதும் அதன் முதலாவது கூட்டத்தில் ஐந்து அமைப்புக்கள் மற்றும் தனி நபர்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் நாளை 22 ஆம் திகதி தெரிவுக் குழு மீண்டும் கூடி அந்தக் கருத்துக்கள் பரிசீலனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

  சமாதானத்திற்கான இலங்கைச் சமயங்களின் பேரவையின் அம்பாறை மாவட்டக் கிளை மற்றும் சாய்ந்தமருது சிரேஸ்ட பிரசைகள் ஒன்றியம் என்பனவற்றின் தலைவர் டாக்டர் எம். ஐ. எம். ஜெமீல் தலைமையிலான குழுவினர் நாடாளுமன்ற தெரிவுக் குழு முன் இன்று மாலை 3.00 மணிக்கு தமது அமைப்புக்களின் சார்பாக "இலங்கை மக்கள் ஒரு தேச மக்களாக வாழ்வதற்கான வழி" எனும் தொனியில் கருத்துக்களை முன் வைக்கவுள்ளனர்.

No comments

Powered by Blogger.