Header Ads



ரகசியங்கள் கசிவதால் பின்லேடன் கொல்லப்பட்ட கோப்புகளை நீக்க ஒபாமா உத்தரவு

அபோட்டாபாத் நகருக்குள் ஒசாமா பின்லேடன் மறைந்திருந்து வாழ்ந்தது பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தெரியாமல் போனது எப்படி? என்பது தொடர்பாக விசாரணை நடத்த அபோட்டாபாத் கமிஷனை பாகிஸ்தான் அரசு நியமித்தது. இந்த கமிஷனின் ரகசிய விசாரணை அறிக்கை நேற்று பாகிஸ்தான் ஊடகங்களில் கசிந்தது.

ஒசாமா பின்லேடன் 9 ஆண்டுகளாக பாகிஸ்தானில் வாழ்ந்து வந்த தகவலும், மேலும் பல தகவல்களும் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே வருகிறது.

ஒசாமா பின்லேடன் இருப்பிடம் தொடர்பாக அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்த முதல் தகவலில் இருந்து இருப்பிடத்தை உறுதி செய்தது, சுட்டுக்கொன்றது உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இதுவரை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் உள்ள கம்ப்யூட்டர்களில் பதிவு செய்யப்பட்டு கோப்புகளாக பராமரிக்கப்பட்டு வந்தன.

அமெரிக்கா தொடர்பான பல ரகசியங்களை ஜுலியன் அசாஞ்சே, எட்வர்ட் ஸ்னோடென் ஆகியோர் அம்பலப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒசாமா ஒழிப்பு வேட்டை தொடர்பான ரகசியத்தையும் யாராவது அம்பலபடுத்தி விடுவார்கள் என்ற அச்சம் அமெரிக்க அதிபர் ஒபாமாவை ஆட்கொண்டு வந்தது.

இந்நிலையில், ஒசாமா பின்லேடன் தொடர்பாக பென்டகனில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கம்ப்யூட்டர் கோப்புகளையும் நீக்கி விடும்படி ஒபாமா இன்று உத்தரவிட்டார். அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.விடம் மேற்படி கோப்புகளை ஒப்படைக்குமாறு அந்த உத்தரவில் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

ஒசாமா ஒழிப்பு நடவடிப்பையில் ஈடுபட்ட அதிகாரிகளின் அடையாளங்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை என்று சி.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

பென்டகன் ரகசிய கோப்புகளை சி.ஐ.ஏ.விடம் வழங்குமாறு ஒபாமா பிறப்பித்துள்ள உத்தரவு தேசிய சட்டங்களை மீறும் வகையில் உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கும் இது எதிரான செயல் ஆகும் என பென்டகனின் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.