சர்வதேச ஐஸ்கிறீம் தினம்
அனைவரும் ஐஸ்கிரீமை விரும்பி சுவைக்கின்றனர். ஐஸ்கிரீம் பிடிக்காது என கூறுபவர் கிட்டத்தட்ட இல்லை எனலாம். எல்லா நாட்டு மக்களும் விரும்புவதால், உலக மக்களின் பொது உணவாக ஐஸ்கிரீம் கருதப்படுகிறது. பெரும்பாலும் பால், கிரீம், ஐஸ்கட்டி மற்றும் சர்க்கரை பொருட்களை கொண்டே ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு நாட்டிலும் பெயர், சுவையில் மாறுபடுகிறது. அமெரிக்காவில் ஜூலை மூன்றாவது ஞாயிறு (ஜூலை 21) "தேசிய ஐஸ்கிரீம் தினமாக' கடைபிடிக்கப்படுகிறது.
வரலாறு:
ஐஸ்கிரீமின் வரலாறு பழமையானது. இது ஐரோப்பிய நாடுகளில் தோன்றியது என்றும், சீனாவில் தோன்றியது என்றும் பல கருத்துகள் நிலவுகின்றன. கி.மு., 400ம் ஆண்டுகளில், பெர்சிய பேரரசருக்கு மக்கள் விருந்து படைத்தனர். இதில் ஒரு கிண்ணத்தில் பனிக்கட்டி மீது திராட்சை ரசத்தை ஊற்றி, பேரரசருக்கு பரிமாறினர். இந்த பண்டம் கோடை காலத்தை முன்னிட்டு தயார் செய்யப்பட்டது. இது அரசரை கவரவே, இதை மேலும் சிறப்பாக தயாரிக்க முயற்சி செய்தனர். பனிமலையின் உச்சியில் இருந்து பனிக்கட்டியை கொண்டு வந்து, பாதாள அறைகளில் சேமித்தனர். பனிகட்டியில் பன்னீர், சேமியா, குங்குமப் பூ, பழங்கள் ஆகியவற்றை கலந்து விதவிதமான வகைகளை தயார் செய்தனர்.
கி.மு., 200ம் ஆண்டுகளில் பால், அரிசி கலந்த குளுமையான உணவை சீனர்கள் தயாரித்தனர். இந்த வகையில் சீன தயாரிப்பான "ஸ்னோ ஐஸ்கிரீம்' பிரசித்தி பெற்றது. ஐஸ்கிரீம் தயாரிக்கும் கருவியையும் சீனர்கள் தான் கண்டுபிடித்தனர்.
ரோமானியப் பேரரசர் நீரோ, மலைகளில் உள்ள பழங்களை பறிக்க ஆட்களை அனுப்பினார். அங்கிருந்து கொண்டு வரப்பட்ட பழங்களின் மேல் பனி படர்ந்திருந்தது. பனியுடன் பழத்தை உண்ட பேரரசர் நீரோ, புது சுவையை உணர்ந்தார். பின் பனிக்கட்டியுடன் பழங்களை கலந்து, புதுவிதமான பண்டங்கள் தயார் செய்ய உத்தரவிட்டார்.இவ்வாறு ஐஸ்கிரீக்கு, உலகம் முழுவதிலும் பல வரலாறுகள் கூறப்படுகின்றன. இருப்பினும் 18ம் நூற்றாண்டில் தான் முதன்முதலில் அமெரிக்க, பிரிட்டன் நாடுகள், "ஐஸ்கிரீம்' என பெயரிட்டு அழைத்தன. அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன், 1984ம் ஆண்டு ஜூலை 15ம் தேதியை "ஐஸ்கிரீம்' தினமாக அறிவித்தார். அன்றிலிருந்து ஜூலை மாத மூன்றாவது ஞாயிறு "ஐஸ்கிரீம்' தினமாக கொண்டாடப்படுகிறது.

Post a Comment