ஆளுங்கட்சியின் இனவாதிகளுக்கு இடம்கொடுக்காதீர்கள் - மேஜர் அஜித் பிரசன்ன
இனவாத சிந்தனை கொண்டவர்களுக்கு ஆளுங்கட்சியின் பட்டியலில் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட இடமளிக்கக் கூடாது என்று ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்ப்பலை தோன்றியுள்ளது.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய மற்றும் அமைச்சர் விமல் வீரவங்க தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஆகியவற்றின் வேட்பாளர்களுக்கே ஆளுங்கட்சியின் பட்டியலில் தேர்தலில் போட்டியிட இடமளிக்கக் கூடாது என்று ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தென்மாகாண சபையின் ஆளுங்கட்சி முக்கிய உறுப்பினரும், முன்னாள் இராணுவ அதிகாரியுமான மேஜர் அஜித் பிரசன்ன இது தொடர்பில் பகிரங்கமாகவே தனது எதிர்ப்புக்குரலை வெளிப்படுத்தியுள்ளார்.
மாகாண சபையின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பான அரசின் முயற்சிகளை எதிர்த்து பகிரங்கமாக குரல் கொடுத்த இவர், பின்னர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் கடுமையான எச்சரிக்கையை எதிர்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவத்தினரின் வாக்குகளை ஆளுங்கட்சிக்குப் பெற்றுக் கொடுப்பதில் இவர் முன்னின்று செயற்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டே இனவாதத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக இவர் குரல் கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள மேஜர் அஜித் பிரசன்ன, ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது. அவ்வாறான நிலையில் இவர்கள் ஆளுங்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்து வெற்றி பெறுவார்கள். பின்னர் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படுவார்கள்.
அவ்வாறானவர்களுக்கு ஆளுங்கட்சியின் பட்டியலில் போட்டியிட இடமளித்தால் சிறுபான்மை வாக்கு வங்கியை இழக்க நேரிடும். எனவே இனவாதிகளுக்கு ஆளுங்கட்சியின் பட்டியலில் போட்டியிட இடமளிக்கவே கூடாது என்றும் இவர் பகிரங்கமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
தென் மாகாண சபை உறுப்பினர் மேஜர் அஜித் பிரசன்னவின் குரலுக்கு அமைச்சர்களான ராஜித சேனாரத்தின மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும் ஜனாதிபதி உள்ளிட்ட ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் இனவாதிகளின் கட்சி வேட்பாளர்களை ஆளுங்கட்சி பட்டியலில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
இவளவு பெரிய செய்தி ஆனா கடைசி ஒன்னரை வரியப்பாருங்கோ எல்லாம் அரசாங்கம்தான் தீர்மானிக்கும் அரசாங்கத்துக்கு வாசியானது என்னவானாலும் அதை அரசாங்கம் விட்டுக்கொடுக்கத்தாயாரில்லை.
ReplyDelete