Header Ads



புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் நாமல் ராஜபக்சவின் ஆதரவாளர்கள் அட்டகாசம்

(முஹம்மது றினாஸ்)
                                                                                 
புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபன ஆளணி முகாமையாளர் 11-07-2013 ஊழியர்கள் சிலரால் தாக்கப்பட்டுள்ளார். முற்று முழுதாக அரசியல் பலத்துடன் அம்பாந்தோட்டை பிரதேசத்தில் இருந்து புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட தற்காலிக தொழிலாளிகள் சிலரினால் ஆளணி முகாமையாளர் லலித் குமார என்பவர் கடுமையாக தாக்கப்பட்டு புல்மோட்டை அரச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக இணைக்கப்பட்ட இந்த ஊழியர்கள் தாங்கள் ஜனாதிபதியின்  மகனான நாமல் ராஜபக்சவின் நேரடி கவனத்தின் கீழ் இங்கு வந்ததாக கூறி தங்களுக்கான பிரத்தியேக சலுகைகளை பெற்று தரும்படிவேண்டிய போதே இந்த முரண்பாடு ஏற்பட்டு அத்து மீறி அலுவலகத்துக்குள் நுழைந்து அரசியல் அதிகாரத்துடன் அதிகார பலமிக்க அதிகாரி, மற்றும் ஊழியர்களை தாக்கியதோடு அரச உடமைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.     

இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக ஒன்று கூடிய கனிய மணல் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் சம்மந்தப்பட்ட ஊழியர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுத்து  தொழிற்சாலையில் இருந்து உடனடியாக வெளியேற்றும் படி கோரிக்கை விடுத்தன. எனினும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட நிருவாக நடவடிக்கை உட்பட பொறித்தொகுதிகளும் அவசரமாக நிறுத்தப்பட்டு தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தபோது குழப்ப நிலை தோன்றியது.

அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் கனிய மணல் கூட்டுத்தாபன உயர் அதிகாரிகள் மும்முரமாக செயற்பட்ட போது மேல்மட்ட அரசியல் தலையீடு  காரணமாக சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட, இன்னும் தாமதம் ஏற்பட்டது. 

இருந்தபோதும் தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான அழுத்தத்தினால் அடாவடி நடவடிக்கையில்  இறங்கிய ஊழியர்கள் தொழிற்சாலையிலிருந்து இடைநிருத்தப்பட்டுள்ளார்கள்.

இதற்கிடையில் இரகசியமாக புல்மோட்டை  கிராமத்தை விட்டு தப்பிச்செல்ல முயற்சித்த சம்மந்தப்பட்ட ஊழியர்களை புல்மோட்டை பொலிசார்  கைது செய்து அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படவுடன் தொழிற்சங்கங்கள்  தமது முன்னெடுப்புக்களை கைவிட்டதை தொடர்ந்து தொழிற்சாலை வளமையான உற்பத்தி நடவடிக்கையை   தொடர்ந்துள்ளது. 

No comments

Powered by Blogger.